'கொரோனா வைரஸ் பரவும் சமயத்தில் அவதூறு': நோட்டீஸ் அனுப்பிய திமுக, டீவீட்டை நீக்கிய பாஜக

தமிழக பாரதிய ஜனதா கட்சி தங்களுடைய அதிகாரபூர்வ சமூகவலை தளப் பக்கங்களின் மூலம் தி.மு.க. குறித்து அவதூறு பரப்பிவருவதாக அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக பா.ஜ.கவின் தேசியத் தலைவர், மாநிலத் தலைவர், ட்விட்டர் நிறுவனம் ஆகியவற்றுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கான @BJP4TamilNadu என்ற பக்கத்தில் மார்ச் 30ஆம் தேதியன்று தி.மு.க. குறித்த பதிவு ஒன்று வெளியானது. அதில், "தொகுதி வளர்ச்சி நிதியை சொந்தக் காசாகக் காட்டிய @arivalayam; இல்லாத தோரணை உருவாக்க 380 கோடி செலவாக்கும் @mkstalin; சொந்த மக்களுக்கு வெறும் ஒரு கோடி கொடுக்கத்தான் மனசாட்சி உள்ளதா? ஆட்சியில் இருந்து தேன் எடுத்தபோது ஊழல் செய்து புறங்கையை நக்கிய பணத்தை மக்களுக்கும் தாராளமாகக் கொடுக்கலாமே" என்று கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், Twitter
இது தொடர்பாக தி.மு.கவின் அமைப்புச் செயலாளர் விடுத்திருக்கும் நோட்டீஸில், இது முழுக்க முழுக்க அவதூறானது என்றும் தி.மு.கவின் சார்பில் ஒரு கோடி ரூபாயும் ஒவ்வொரு எம்.எல்.ஏ., எம்.பிக்களும் தங்கள் ஊதியத்தையும் வழங்கியிருப்பதோடு, தி.மு.கவின் தலைமையகமான அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தையும் தனிமைப்படுத்துதலுக்காக வழங்க முன்வந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, பா.ஜ.கவின் சார்பில் கோரோனா நிதிக்கு எந்தத் தொகையும் தரப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
மேலும் கொரோனா போன்ற கொடிய நோய் பரவிவரும் நேரத்தில் மக்களுக்கு உதவாமல் அரசியல்செய்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ள தி.மு.க., தற்போது மாநிலத் தலைவராக உள்ள எல். முருகன் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக இருந்தபோது அந்தப் பதவியைப் பயன்படுத்தி முரசொலி டிரஸ்ட் அமைந்துள்ள கட்டடம் குறித்து பொய் பிரசாரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் அரசியல் கட்சிகளுக்குப் பணம் கொடுத்ததாகவும் தி.மு.கவின் தேர்தல் பிரசார வியூக வகுப்பாளர் பிராந்த் கிஷோருக்கு பணம் கொடுத்ததாகவும் ஒரு மீமை பகிர்ந்ததையும் இந்த நோட்டீஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆகவே, உடனடியாக இந்த ட்வீட்களுக்காக பா.ஜ.கவின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவும் மாநிலத் தலைவர் எல். முருகனும் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் கொரோனா தொடர்பான முதல்வரின் நிதிக்கு 100 கோடி ரூபாய் நிதி அளிக்க வேண்டுமென்றும் தி.மு.க. கூறியுள்ளது.

- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?

மேலும் பா.ஜ.கவின் ட்விட்டர் ஐடியை நிர்வகிப்பது யார் என்பதைத் தெரிவிக்க வேண்டுமென்றும் அந்த ஐடியை முடக்க வேண்டுமென்றும் ட்விட்டரின் தலைமை நிர்வாகிகளிடம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் எல். முருகனின் கருத்தைப் பெற முடியவில்லை. பா.ஜ.கவின் மாநில தகவல்தொழில்நுட்பத் துறைச் செயலர் நிர்மல் குமாரிடம் இது தொடர்பாக கேட்டபோது, "வழக்கறிஞர் நோட்டீஸை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்" என்றார்.
இதற்கிடையில் சர்ச்சைக்குரிய அந்த ட்வீட் தற்போது அகற்றப்பட்டுள்ளது. அது குறித்து நிர்மல் குமாரிடம் கேட்டபோது, "கொரோனா நேரத்தில் இதுபோன்ற கேலி செய்யும் ட்வீட் வேண்டாம் என தலைமையிலிருந்து சொன்னார்கள். ஆகவே அகற்றிவிட்டோம்" என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












