வங்கிகள் இணைப்பு: எந்தெந்த வங்கிகள் எதனுடன் இன்று இணைக்கிறது தெரியுமா? Bank Merger Detail Report

ரிசர்வ் வங்கி அறிவிப்பு: சாமனியர்களுக்கான நன்மை என்னென்ன? - விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைதொகுத்து வழங்குகிறோம்.

தினத்தந்தி: "வங்கிகள் இணைப்பு"

10 பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில், வங்கிகள் ஒருங்கிணைப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 2வது ஒருங்கிணைப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் 4 பெரிய வங்கிகளுடன் இன்று இணைக்கப்படுகின்றன என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக மாற்றும் திட்டம் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் ஏற்கெனவே அறிவித்திருந்தன. தற்போது நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், வங்கி இணைப்பு திட்டம் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி வங்கிகள் இன்று இணைக்கப்படுகின்றன.

முன்னதாக ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், வங்கி கிளைகள் இணைக்கப்பட்டாலும், ஊழியர்கள் எண்ணிக்கையில் மாற்றம் இருக்காது என்று தெளிவுபடுத்தி இருந்தது.

எந்தெந்த வங்கிகள் எதனுடன் இணைக்கப்படுகின்றன?

ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் , யூனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைகின்றன. இதன்மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு அடுத்து 2வது பெரிய வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி மாறுகிறது. சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படுகிறது என்கிறது தினகரன் நாளிதழ்.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும், யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இந்த இணைப்பின்மூலம், பாரத ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி ஆகிய 6 இணைப்பு வங்கிகளும், தனித்து இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி, பாங்க் ஆப் மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவையும் என 12 பொதுத்துறை வங்கிகள் மட்டுமே இருக்கும். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், வீடியோ கான்பரன்சிங் மூலம் இந்த இணைப்பு நிகழ்ச்சியை நடத்த வங்கிகள் முடிவு செய்துள்ளன என, வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Presentational grey line

தினமணி: 3.2 லட்சம் படுக்கை வசதியுடன் மாற்றியமைக்கப்படும் ரயில் பெட்டிகள்

3.2 லட்சம் படுக்கை வசதியுடன் மாற்றியமைக்கப்படும் ரயில் பெட்டிகள்

பட மூலாதாரம், தினமணி

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வகையில் மாற்றியமைக்கப்படவிருக்கும் 20,000 ரயில் பெட்டிகள் 3.2 லட்சம் படுக்கை வசதி கொண்டவையாக இருக்கும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

மாற்றியமைக்கப்படவுள்ள ரயில் பெட்டிகளை இந்திய ரயில்வேயின் 16 மண்டலங்களுக்கும் பிரித்தளிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் தெலங்கானா மாநிலம் செகந்தராபாதில் தலைமையகத்தை கொண்டிருக்கும் தெற்கு மத்திய ரயில்வேக்கு அதிகபட்சமாக 486 பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளன. அதனைத் தொடா்ந்து மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மத்திய ரயில்வேக்கு 482 பெட்டிகள் வழங்கப்படவுள்ளன.

இதுதொடா்பாக இந்திய ரயில்வே சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், 'கொரோனா நோய்த்தொற்று சிகிச்சைக்காக 20,000 ரயில் பெட்டிகள் மாற்றியமைக்கப்படவுள்ளன. இவற்றில் மொத்தம் 3.2 லட்சம் படுக்கை வசதி இருக்கும். சுமாா் 80,000 படுக்கை வசதிகள் கொண்ட 5,000 ரயில் பெட்டிகளை மாற்றிமைக்கும் பணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. சராசரியாக ஒரு பெட்டியில் 16 படுக்கைகள் இடம்பெறும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்தி வைக்க குளிா்சாதன வசதியில்லா படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை மட்டுமே பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Presentational grey line
Banner image reading 'more about coronavirus'
Banner

இந்து தமிழ் திசை: "கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை"

கொரோனா வைரஸ்:

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுவதாகத் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ராஜ் பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது கொரோனா தடுப்புக்காகத் தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை விவரித்தார். இந்தச் சந்திப்பின்போது தலைமைச் செயலாளர் கே.சண்முகம், டிஜிபி ஜே.கே.திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியதாவது:

தற்போது 7 லட்சத்து 20 ஆயிரம் முகக் கவசங்களும், 95 ஆயிரம் என்-95 முகக் கவசங்களும் இருப்பில் உள்ளன. 1 கோடியே 50 லட்சம் முகக் கவசங்களும், 25 லட்சம் என்-95 முகக் கவசங்களும் வாங்க ஆர்டர் செய்துள்ளோம். எந்த மருத்துவரும், குறிப்பாகக் காய்ச்சல் வார்டு, தனிமைப்படுத்தும் வார்டுகளில் உள்ள மருத்துவர்கள் என்-95 முகக் கவசம் அணிந்து கொண்டுதான் சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளுக்கும் முகக் கவசம் வழங்க வேண்டும் எனக் கூறியிருக்கிறோம். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சிகிச்சை அளிக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.

தற்போது 3,018 வென்டிலேட்டர்கள் உள்ளன. புதிதாக 2,500 வென்டிலேட்டர்கள் வாங்க ஆர்டர் செய்துள்ளோம். ஹெச்.சி.எல். நிறு வனம் இலவசமாக 500 வென்டிலேட்டர்களை தருவதாகக் கூறியுள் ளது. அனைத்து மருத்துவ, பாதுகாப்பு உபகரணங்களும் தேவையான அளவில் அரசு வழங்கி வருகிறது.

அரசு, தனியார் மருத்துவமனைகளில் 17 ஆயிரம் தனிமைப்படுத்தும் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது அரசு மருத்துவமனைகளில் 14, தனியார் மருத்துவமனைகளில் 3 என 17 கரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் செயல்படுகின்றன. புதன்கிழமை (இன்று) மேலும் 6 பரிசோதனை மையங்கள் செயல் படும். அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் பரிசோதனை மையங்கள் செயல்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மாநில அளவில் உயர் அதிகாரி களைக் கொண்ட 12 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த அதிகாரிகள் தங்களுக்குள் குழு அமைத்து செயல்பட்டு வருகிறார்கள். எந்தெந்த பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதோ அந்தப் பகுதியைச் சுற்றி 8 கி.மீ. சுற்றளவில் பரிசோதனை செய்து வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

டெல்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மூலம் கொரோனா பரவல் கண்டறியப் பட்டுள்ளது. அவர்கள் உள்ள பகுதிகளைச் சுற்றியும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. சமூக இடைவெளி எந்த அளவுக்கு பின்பற்றப்படுகிறது என்பதைக் கண் காணித்து கூட்டம் கூடும் இடங்களில் அதனைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். முதல்வர் பழனிசாமி தினமும் அனைத்து நடவடிக்கைகளையும் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், காய்கறி, மீன் மார்க்கெட் கடைகளை இடமாற்றவும், சமூக இடை வெளியை கடைப்பிடிக்காத கடைக ளை மூடவும் உத்தரவிட்டுள்ளோம். மீன், இறைச்சி கடைகளை மைதானங்களுக்கு மாற்ற கேட்டுக் கொண்டுள்ளோம்.

சுமார் 1 லட்சத்து 16 ஆயிரம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் வேலை செய்த இடத்திலேயே தங்குமிடம், உணவு வசதிகளை செய்துதர உத்தரவிட்டுள்ளோம். தங்குமிடம் இல்லாதவர்களுக்கு வேறு இடத்தில் வசதிகள் செய்யப் பட்டுள்ளன. இதற்கென தனி கண்காணிப்பு குழு அமைக்கப்படடுள்ளது.

கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது. அறிகுறி இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்யும் முறை விரைவில் வரும் என்று நினைக்கிறேன். அப்போது அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படும். மருத்துவ, பாதுகாப்பு உபகரணங்களுக்கு மத்திய அரசை மட்டுமே நம்பியிருக்காமல் தமிழகத்துக்குத் தேவையானதை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு கே.சண்முகம் கூறினார்.

Presentational grey line

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: