கொரோனா வைரஸ்: ஒரே இரவில் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை இந்திய ராணுவம் கட்டியதா? BBC Factcheck

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பே மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. நாடு முழுவதும் 70 ஆயிரம் தீவிர சிகிச்சை பிரிவு (ஐசியூ) படுக்கைகளே உள்ளன.
இச்சூழலில் சமூக வலைதளத்தில் ஒரு புதிய செய்தி வைரலாகி வருகிறது.
"ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் 1000 படுக்கைகளுக்கு மேல் உள்ள நவீன மருத்துவமனை இந்திய ராணுவத்தால் உருவாக்கப்பட்டு, இரண்டு நாட்களில் ராஜஸ்தான் மாநில அரசிடமும் அதேபோன்று மூன்று மருத்துவமனைகள் இந்திய அரசிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாட்டின் ராணுவ வீரர்களின் இந்த சாதனைக்கு தலை வணங்குகிறேன். எப்போதெல்லாம் நாட்டுக்கு ஒரு பிரச்னை வருகிறதோ ராணுவ வீரர்களும், விவசாயிகளும் காப்பாற்றுகின்றனர்," என மூன்று புகைப்படங்களுடன் சிலர் பதிவிட்டுள்ளனர்.
"ஒரு டிவிட்டர் பதிவில், 1000 படுக்கைகளைக் கொண்ட மருத்துவமனை ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அங்கு அமைக்க சில மணிநேரங்களே ஆகின. சீனாவின் சாதனையைப் பற்றி செய்திகளை படித்துவிட்டு நம் நாட்டின் ராணுவ வீரர்களின் சாதனையை மறந்துவிட்டோம்," என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது போன்ற பதிவுகளுடன் மூன்று படங்களும் பகிரப்பட்டு வருகின்றன.
இந்த புகைப்படங்களை ஆராய்ந்ததுடன், உண்மையில் ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் சில மணி நேரங்களில் 1000 படுக்கைகளை கொண்ட மருத்துவமனை கட்டப்பட்டதா என தெரிந்து கொள்ள பிபிசி ஹிந்தி சேவை முயற்சித்தது.

படம் 1
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலமாக இந்த முதல் படத்தை ஆராய்ந்த போது, இப்படத்தில் இருப்பது வாகனங்களில் செயல்படும் நடமாடும் மருத்துவமனை என தெரியவந்தது. ரஷ்யா இதை உருவாக்கி கிர்கிஸ்தான் அரசின் அவசரக்கால அமைச்சகத்திடம் அளித்துள்ளது.
செப்டம்பர் 11, 2019 அன்று கிர்கிஸ்தானின் செய்தி முகமை kabar.kgயில் இந்த செய்தி வெளிவந்துள்ளது. இந்த மருத்துவமனையில் 10 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியும்.

பட மூலாதாரம், US AIRFORCE
படம் -2
இந்த புகைப்படம் ராணுவத்தால் கட்டப்பட்ட மருத்துவமனையின் உள் கட்டமைப்பு என பகிரப்பட்டு வருகிறது.
ஆனால், உண்மையில் இது 2008ஆம் ஆண்டு நவம்பரில் எடுத்த புகைப்படம் ஆகும்.
அமெரிக்க விமானப்படை இணையபக்கத்தில் இருக்கும் இந்த புகைப்படத்துடன்," நடமாடும் மருத்துவமனையின் உள்ளே இப்படிதான் இருக்கும். இந்த மருத்துவமனையில் அனைத்து விதமான மருத்துவ கருவிகளும் உள்ளன. அனைத்து கடினமான சிகிச்சைகளும் செய்வதற்கான மருந்துகளும் உள்ளன. இதுபோன்ற மூன்று மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மொத்தம் 600 படுக்கைகள் உள்ளன என பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.


கலிஃபோர்னியாவின் விமானப்படைதளத்தில் இது போன்ற 3 மருத்துவமனைகள் உள்ளன. ஒரு மருத்துவமனையில் 200 படுக்கைகள் வீதம் மூன்று மருத்துவமனைகளில் 600 படுக்கைகள் உள்ளன.
மேலும் இந்த புகைப்படம் மார்ச் 21 , 2006ல் எடுக்கப்பட்டுள்ளது.
படம் -3

பட மூலாதாரம், TWITTER / @ SPOKESPERSONMOD
பார்மரில் கட்டப்பட்ட மருத்துவமனையில் இந்திய ராணுவ வீரர்கள் எடுத்து கொண்ட புகைப்படம் என இந்த படம் பகிரப்படுகிறது.
ஆனால் இந்த புகைப்படம் இந்திய ராணுவம் ,2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது காட்மண்டு அவசரக்கால விமானப்படை தலத்தில் இருந்த தற்காலிக மருத்துவமனையிலிருந்து எடுக்கப்பட்டதாக ட்விட்டரில் பதிவு செய்திருந்தது.

இதனால் இந்த மூன்று படங்களும் தற்போது எடுக்கப்பட்ட படங்கள் அல்ல என்பது தெளிவாகிறது.
ஆனால், உண்மையில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக இந்திய ராணுவம் மருத்துவமனை கட்டியதா என்று கேள்விக்கும் பதிலளிக்கும் விதமாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தது
மார்ச் 23 அன்று இந்திய ராணுவத்தின் செய்தி தொடர்பாளர், இந்திய ராணுவம் 1000 படுக்கைகளர் கொண்ட தனி மருத்துவமனை கட்டப்பட்டு கொண்டிருப்பதாக சமூக வலைதளத்தில் வரும் தகவல் தவறு என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதன் மூலம் அப்படி எந்த மருத்துவமனையும் கட்டப்படவில்லை என தெரிய வருகிறது.
பிற செய்திகள்:
- கொரோனா வைரஸ்: டெல்லி நிசாமுதீன் மத நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தேடும் அதிகாரிகள் - நடந்தது என்ன?
- கொரோனா வைரஸ்: உறவுகள் யாருமற்ற இறுதிச்சடங்கு - இத்தாலியில் இரட்டிப்பாகும் துயரம்
- #Pray_for_Nesamani போன்று ட்விட்டரில் ட்ரெண்டாகும் #Pray_for_Samuthirakani
- கொரோனா வைரஸ்: தெற்காசிய நாடுகள் எப்படி சமாளிக்கின்றன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












