ஜாமியா பல்கலைக்கழக மாணவரை துப்பாக்கியால் சுட்டவர் சட்டப்படி சிறுவரா?

பட மூலாதாரம், Reuters
ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தின் வெளியே போராடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது நேற்று ஒரு நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவர் காயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து ஏ.என்.ஐ செய்தி முகமை தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு மதிப்பெண் சான்றிதழ் ஒன்றை பகிர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் சான்றிதழ் என பதிவிட்டிருந்தது. அதில் அவருக்கு 18 வயதுக்கும் குறைவானவராக இருந்தது தெரிய வந்தது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
குற்றம் சுமத்தப்படுபவர் சிறாரா?
பகிரப்பட்டுள்ள மதிப்பெண் சான்றிதழின்படி அவர் சட்டத்தின்படி சிறார் (18 வயதுக்கும் குறைவானவர்) என்று கூறலாம். மதிப்பெண் சான்றிதழ் சரியாக இருக்கிறது என சம்பந்தப்பட்ட பள்ளி பிபிசியிடம் கூறியுள்ளது.
மதிப்பெண் சான்றிதழின்படி அவருடைய வயது 17 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆகும். ஒரு சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அவரது சகோதரரும் இதே பள்ளியில்தான் படிக்கிறார்.
ஜனவரி 28 அன்று பள்ளி வந்த அந்த நபரின் தாய் அன்று மதியம் பள்ளியை தொலைபேசி மூலம் தொடர்பு, உறவினர் வீட்டு திருமணம் ஒன்றுக்கு செல்லவேண்டும் என்பதால் தனது மகன்கள் இருவரையும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.
அதன்படியே அந்த மாணவர் அன்று மதியமே பள்ளியை விட்டு சென்றுவிட்டார் என பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுவரை எந்த ஒழுக்கக்கேடான செயலிலும் அவர் ஈடுபட்டதில்லை என பள்ளி தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், The India Today Group/getty Images
மேலும் அந்த சான்றிதழ் சிபிஎஸ்இயில் இருந்து அளிக்கப்பட்ட சான்றிதழ் என்றும் பள்ளி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த சான்றிதழ் யாருடையது என தெளிவாகக் கூறவில்லை. அதே பெயரில் வேறு மாணவர்களும் இருக்கலாம் என பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.
இந்த பள்ளி 2013ல் இருந்து தொடங்கப்பட்ட பள்ளி என சிபிஎஸ்இ போர்டு கூறியுள்ளது. இந்த பள்ளி தொடக்கத்தில் டேராடூன் மண்டலத்தின் கீழ் பதிவாகியிருந்தது.
இப்போது நொய்டா மண்டலத்தின் கீழ் பதிவாகியிருக்கிறது. இதனால்தான் சிபிஎஸ்இ வலைதளத்திலும் மதிப்பெண் சான்றிதழிலும் பள்ளியின் குறியீட்டு எண் வெவ்வேறாக உள்ளது என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து டெல்லியின் துணை காவல் ஆணையர் மந்தீப் சிங் ரந்தாவாவிடம் கேட்க பிபிசி முயற்சித்தது. ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
சட்டம் என்ன சொல்கிறது?
இந்திய சட்டங்களின்படி 18 வயதுக்கு குறைவாக இருப்பவர்களுக்கு சாதாரணமான குற்றங்களுக்கு 3 ஆண்டுகள்தான் தண்டனை வழங்கப்படும்.
அதுவே, அவர்கள் 16-18 வயதுக்குள் இருந்து, ஏதெனும் கொடுமையான குற்றத்தில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு இந்திய தண்டனைச் சட்டத்தின்படி சாதாரண நீதிமன்றத்தில் வழக்கு நடத்த இந்திய சிறார் நீதி முறை சட்டம் வழிவகை செய்கிறது.
"குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307ன் கீழ் கொலை முயற்சிக்கான வழக்கு பதிவு செய்யப்படும். இதில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கில் ஆயுள்தண்டனை வழங்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒருவேளை அவர் சிறாராக இருந்தால் அவர் சிறார் சீர்திருத்த இல்லத்தில் வைக்கப்படுவார்," என பிரபல வழக்கறிஞர் அபா சிங் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காவல் இணை ஆணையர் தேவேஷ் ஸ்ரீவாஸ்தவ் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 307ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













