தஞ்சை பெரிய கோயில்: தமிழில் மட்டும் குடமுழுக்கு நடத்தக் கோரிய மனுக்கள் தள்ளுபடி

தஞ்சை பெரிய கோயில்

பட மூலாதாரம், Niyas Ahmed/ BBC

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் மட்டும் திருக்குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த சமய அறநிலையத் துறை தாக்கல்செய்த உறுதிமொழியின்படி தமிழிலும் சமஸ்கிருதத்திலும் குடமுழுக்கை நடத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட தஞ்சாவூர் பெருவுடையார் ஆலயத்தில் வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று திருக்குட முழுக்கு நடக்கவிருக்கிறது. இதற்கான திருப்பணிகள் நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ளன.

News image

இந்த நிலையில், திருக்குடமுழுக்கு விழாவை தமிழ் மொழியில் மட்டும் மந்திரங்களை ஓதி நடத்த வேண்டும் என ராமநாதபுரத்தை சேர்ந்த ஜி. திருமுருகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் பெரிய கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு குறிப்பு அளிக்கப்பட்டது. அதில், 1980 மற்றும் 1997ல் நடைபெற்ற திருக்குடமுழுக்கு விழாக்களில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின்படியே இந்தத் திருக்குடமுழுக்கு விழாவும் நடைபெறும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தின் சார்பில் இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த துணை ஆணையர் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், திருக்குடமுழுக்கு விழாவில் தமிழுக்கு தகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாகவும், குடமுழுக்கின் எல்லா நிகழ்வுகளின்போதும் திருமுறைகள் ஓதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மேலும், "திருக்குடமுழுக்கு நடக்கும்போது, 12 திருமுறைகளிலும் இருந்து பாடல்கள் பாடப்படும். யாக சாலையில் மட்டுமல்ல, மகாகுடமுழுக்கு நடைபெறும்போதும் இவை பாடப்படும். அதனால், மனுதாரர் இது குறித்து பிரச்சனை எழுப்ப வேண்டியதில்லை. குடமுழுக்கு நிகழ்வில் தமிழுக்கு பிரதானமான இடம் தரப்பட்டிருக்கிறது" என்றும் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையில் இந்தக் குடமுழுக்கை சமஸ்கிருதத்திலும் நடத்த வேண்டுமென மேலும் இரு இடை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில் தமிழில் திருக்குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரிய மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

மேலும், இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியின்படி, தமிழ் மற்றும் சமஸ்கிருதத்தில் திருக்குட முழுக்கை நடத்த வேண்டும் என்றும் அது தொடர்பான அறிக்கையை 4 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் தீர்ப்பு குறித்து தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழுவைச் சேர்ந்த பெ. மணியரசனிடம் பிபிசி கேட்டபோது, "அறநிலையத் துறை தாக்கல் செய்திருந்த அஃபிடவிட்டில், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், கோபுர கலசம் ஆகிய 5 இடங்களிலும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரம் சொல்லப்படும்; தமிழுக்கு தகுந்த முன்னுரிமை தரப்படும் என கூறியிருந்தது."

"அதனை ஏற்று, தமிழிலும் சமஸ்கிருதத்திலும் திருக்குடமுழுக்கை நடத்துங்கள் என உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழில் மட்டுமே அர்ச்சனை, குடமுழுக்கு ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்குக் கிடைத்த முதல்கட்ட வெற்றியாக இதனைப் பார்க்கிறோம். இந்தத் தீர்ப்பை வரவேற்கிறோம். அடுத்த கட்டமாக மேலும் இதனை விரிவுபடுத்த வலியுறுத்துவோம்" என்று தெரிவித்தார்.

மேலும், "இந்தத் தீர்ப்பை சரியாக செயல்படுத்த வேண்டும், அது தொடர்பாக அறிக்கை தரவேண்டும் என நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. முதல்வர் தனி கவனம் செலுத்தி இதனை உறுதிப்படுத்த வேண்டும். 5 பேர் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால், ஐந்து பேர் தமிழில் மந்திரம் சொல்ல வேண்டும். இரு தரப்பிற்கும் சம நேரம் இருக்க வேண்டும். இதனை அரசு உறுதிசெய்ய வேண்டும்" என்றும் மணியரசன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: