தஞ்சை பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது சாத்தியமா?

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம்
    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயத்தில் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கும் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. ஆனால், அது சாத்தியமா?

தஞ்சாவூரில் உள்ள பெருவுடையார் ஆலயம் எனப்படும் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் பிப்ரவரி ஐந்தாம் தேதி குடமுழுக்கு நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தக் கோயிலில் பெருமளவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.

News image

இந்த நிலையில், இந்தக் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த வேண்டுமென தமிழ் அமைப்புகளும் சைவ மத அமைப்புகளும் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பாக இக்கோயிலுக்கு 1980, 1997 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழில் குட முழுக்கு நடத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமையன்று, தமிழ் வழிபாட்டுரிமை மாநாடு ஒன்றும் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது சாத்தியமல்ல என்கிறார்கள் இந்தக் கோயில் குறித்து அறிந்தவர்கள்.

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோயில்கள் ஆகம விதிகளின்படி கட்டப்பட்டவை. இந்தக் கோயில்கள் அனைத்திலுமே கடந்த ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கும் மேலாக, ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

சைவக் கோயில்களுக்கென 28 ஆகமங்களும் வைணவக் கோயில்களுக்கு என 2 ஆகமங்களும் இருக்கின்றன. தஞ்சைப் பெரிய கோயில் மகுடாகமத்தின் படி கட்டப்பட்டது. ஒரு கோயில் எந்த ஆகமத்தின்படி கட்டப்பட்டதோ, அதே ஆகமத்தின்படியே வழிபாட்டு முறைகள், கோயில் செயல்பாடுகள் இருப்பது வழக்கம்.

இந்த விவகாரம் தொடர்பான வழக்கு ஒன்றில் தேவஸ்தானத்தின் சார்பில் அளிக்கப்பட்ட குறிப்பில், கோயிலின் குடமுழுக்கு ஆகம முறைப்படியே நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆகம மந்திரங்கள் சமஸ்கிருதத்தில் இருப்பதால், குடமுழுக்கு சமஸ்கிருத முறைப்படியே நடக்கவிருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில்தான், இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

"ஆகமங்களுக்கும் மொழிக்கும் சம்பந்தமில்லை. மகுடாகமத்தை தமிழில் வைத்து நடத்த வேண்டியதுதானே. வேத மத வழிபாட்டில் கோயில் வழிபாடே கிடையாது. அவர்கள் நெருப்பை வழிபடுபவர்கள். தமிழர்கள் நீரை வழிபடுபவர்கள். ஆகவே வடமொழியில் தமிழ் கோயில்களுக்கு குடமுழுக்கு செய்வது தவறு" என்கிறார் இந்தக் கோரிக்கையை வலுவாக எழுப்பியிருக்கும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் கி. வெங்கட்ராமன்.

"ராஜராஜசோழன் இந்தக் கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கருவறையில் அர்ச்சனை செய்வது தொடங்கி எல்லாவற்றையும் செய்ய 48 பிடாரர்களை (ஓதுவார்களை) அமர்த்தியிருக்கிறார். இவர்களுக்கு தலைமையாக இருந்தவர் பவனப் பிடாரர். அவர் பிராமணரல்லாதவர். அப்படியிருக்கும்போது, எப்படி இந்தக் கோயிலில் சமஸ்கிருதம்தான் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்ல முடியும்? ராஜராஜசோழன் சமஸ்திருதத்தை வளர்த்தார், சமஸ்கிருத பள்ளிகளுக்கு நிதியளித்தார் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், கோயிலுக்குள் தமிழ்தான் இருந்திருக்கிறது" என்கிறார் வெங்கட்ராமன்.

தமிழகக் கோயில்களில் கும்பாபிஷேகங்கள் பொதுவாக எந்த மொழிகளில் நடத்தப்படுகிறது?

"மொத்தமுள்ள 28 ஆகமங்களில் தற்போது காரணாகமம், காமிகாகம் ஆகிய இரு ஆகமங்கள் மட்டுமே முழுமையாக இருக்கின்றன. பிற ஆகமங்கள் எல்லாம் தொலைந்துவிட்டன. சிவாலயங்கள் எல்லாவற்றிலும் இந்த ஆகமங்களின் அடிப்படையில்தான் வழிபாடுகள் நடக்கின்றன. இந்த மந்திரங்கள் எல்லாமே சமஸ்கிருதத்தில்தான் இருக்கின்றன. ஆகவே குடமுழுக்கும் சமஸ்கிருதத்தில்தான் நடத்தப்படுகிறது" என்கிறார் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற முத்து பழனியப்பன்.

"குடமுழுக்கு மூன்று காரணங்களுக்காக நடத்தப்படுகிறது. முதலாவதாக, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோயில்களுக்கு திருப்பணி செய்து நடத்துவது. இரண்டாவதாக, புதிதாக கட்டப்படும் கோயில்களுக்கு நடத்துவது. மூன்றாவதாக, இயற்கை உத்பாதங்கள் ஏற்பட்டு கோயில் சேதமடைந்தால் அதனைச் சரிசெய்து நடத்துவது. இந்த குடமுழுக்கின்போது, ஆகாயத்தில் உள்ள இறையாற்றல், தெய்வத் திருமேனிகளின் மீது ஏற்றப்படும். இரு குடங்கள் யாக சாலைகளில் வைத்து பூஜிக்கப்பட்டு, மந்திரங்கள் சொல்லப்பட்டு ஒரு குடத்தின் நீர் தெய்வத் திருமேனிகள் மீதும் மற்றொரு குடத்தின் நீர் கோபுரத்தின் மீதும் ஊற்றப்படும். இதற்கான மந்திரங்கள் இப்போது சமஸ்திருதத்தில்தான் சொல்லப்படுகின்றன" என்கிறார் முத்து பழனியப்பன்.

தமிழில் குடமுழுக்கு செய்வது எப்படி துவங்கியது?

சில ஆண்டுகளுக்கு முன்பாக கோவை பேரூர் ஆதீனம், தமிழில் குடமுழுக்கு செய்வதை பரவலாக்க ஆரம்பித்தார். ஆகம மந்திரங்களுக்கு இணையான பொருளுடைய தேவார, திருவாசகப் பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு ஓதப்பட்டன. இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் உள்ள கோயில்களில் இதற்கு அனுமதியில்லை என்பதால், தனியார் கோயில்களில் இந்த முறையின் கீழ் குடமுழுக்கு நடத்தப்பட்டது.

தற்போது கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள மேற்கு மாவட்டங்களில் தனியார் கோயில்களில் குடமுழுக்கு நடக்கும்போது பெரும்பாலும் இதுபோல தேவார, திருவாசக பாடல்களை ஓதியே குடமுழுக்கு செய்யப்படுகிறது.

இந்த முறைப்படியே தஞ்சைப் பெரிய கோயிலில் குடமுழுக்கை நடத்த வேண்டும் என்கிறார்கள் தமிழ் இயக்கத்தினர்.

"ராஜராஜசோழன் தமிழில் வழிபாடு நடத்துங்கள் என்று சொல்லவில்லை. ஏனென்றால் அது இயல்பானது. அவர், வடமொழி அர்ச்சகர்களுக்கு நிவந்தனங்கள் விதித்துச் செய்த கல்வெட்டுகள் ஏதும் இல்லை. ஆகவே கோயில் கட்டப்பட்டபோது தமிழில்தான் செய்திருப்பார்கள்" என்கிறார் கி.வெங்கட்ராமன்.

ஆனால், இதைச் சிலர் ஏற்கவில்லை. "குடமுழுக்கிற்கென பிரத்யேகமான மந்திரங்கள் தமிழில் ஏதும் இல்லை. தேவாரம், திருவாசகம் போன்ற பாடல்கள் சடங்குகளுக்கானவை அல்ல. அவை கடவுள் முன்பு பக்தர்களால் பாடத்தக்கவை மட்டுமே. நித்திய பூஜைக்கு அவை பயன்படாது" என்கிறார் தஞ்சையைச் சேர்ந்த கோயில் ஆய்வாளர் ஒருவர்.

"தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படியே குடமுழுக்கு நடைபெறும்"

பட மூலாதாரம், Getty Images

’எல்லாக் கோயில்களிலும் வழிபாடுகளை தமிழில் செய்ய வேண்டுமென நீண்ட காலமாக வலியுறுத்திவருகிறோம். இப்போது 33 ஆண்டுகளுக்குப் பிறகு தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு நடக்கிறது. அதனை வாய்ப்பாக வைத்து இந்தக் கோரிக்கையை வலுவாக முன்னெடுத்திருக்கிறோம். தமிழ்நாடு அரசு இந்தக் கோரிக்கையை ஏற்க வேண்டும் ’என புதன்கிழமையன்று தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் பேசிய பலரும் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் கோரிக்கைக்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இது தொடர்பான வழக்குகளை தற்போது நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

தஞ்சாவூரில் காவிரி நதியின் தென் கரையில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயம், தென்னிந்தியாவின் மிகப் பெரிய கோயில்களில் ஒன்று. 11ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராஜராஜசோழனால் இந்தக் கோவில் கட்டப்பட்டது. பிறகு பிற்காலப் பாண்டியர்கள் காலத்திலும் விஜயநகரப் பேரரசர்கள் காலத்திலும் கோயிலில் கூடுதலாக சன்னிதிகள் கட்டப்பட்டன.

இந்தக் கோவில் தற்போது பரம்பரை அறங்காவலர்களாலும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையாலும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோயிலின் பாதுகாப்பும் பராமரிப்பும் இந்தியத் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: