டெல்லி ஜாமியா மில்லியா மாணவர் போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது - கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்

பட மூலாதாரம், Reuters
டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகம் அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து வியாழக்கிழமை நடந்த போராட்டத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருப்பு மேலாடை அணிந்த அந்த நபர் "இதோ எடுத்துக்கொள்ளுங்கள் விடுதலை" என்று பொருள்படும் 'யே லோ ஆசாதி' என்று கூச்சலிட்டபடியே துப்பாக்கியால் சுட்டார்.
இதில் காயமடைந்த ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர் சதாப் ஃபரூக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் என்கிறார் தென்கிழக்கு டெல்லி துணை காவல் கண்காணிப்பாளர் சின்மய் பிஸ்வால்.
இதனிடையே ஜாமியா மிலியா போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டவரின் கணக்கை நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த செயலை பாராட்டும் உள்ளடக்கங்களும் அகற்றப்படும் என்று ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மாணவர் போராட்டங்களில் 'ஆசாதி' என்ற சொல் எதிரொலித்து வருகிறது. இதைக் குறிக்கும் வகையிலேயே 'இதோ எடுத்துக்கொள்ளுங்கள் விடுதலை' என்று கூறி அந்த நபர் சுட்டுள்ளார் என்று தெரிகிறது.
சுட்டவர் மீது நடவடிக்கை - அமித்ஷா உறுதி
சுட்டவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்ட அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று துணைக் காவல் கண்காணிப்பாளர் சின்மய் பிஸ்வால் கூறியுள்ளார். விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே காயம் பட்ட மாணவர் சதாப் ஃபரூக் மருத்துவமனைக்கு செல்வதற்குக்கூட காவல் துறையினர் தங்கள் தடுப்பரன்களை அகற்றி வழி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றும், துப்பாக்கிதாரி போராட்டத்தைப் பார்த்து சுடும்போது வேடிக்கை பார்த்ததாகவும் போலீஸ் மீது விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
சூரத்தனம் எங்கே?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
"கடந்த மாதம் ஜாமியா மில்லியா மாணவர்கள் மீது நீங்கள் காட்டிய சூரத்தனம் என்ன ஆனது? செய்வதறியாத பார்வையாளர்களுக்கு ஏதாவது விருது தருவதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் நீங்கள் வெல்வீர்கள். துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஏன் தடுப்பரணை ஏறிக் குதித்து செல்லவேண்டும் என்று விளக்க முடியுமா? நீங்கள் மனிதத் தன்மையோடு நடந்துகொள்வதை உங்கள் பணி விதிகள் தடுக்கின்றனவா?" என்று டெல்லி போலீஸை கேள்வி கேட்டு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ட்வீட் செய்துள்ளார்.
காந்தி நினைவிடத்துக்கு சென்ற ஊர்வலம்
மகாத்மா காந்தியின் நினைவு நாளான நேற்று ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் இருந்து, காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டுக்கு மாணவர்கள் ஊர்வலமாக செல்ல முற்பட்டனர். அப்போது அவர்கள் பல்கலைக்கழகம் அருகே உள்ள ஹோலி ஃபேமிலி மருத்துவமனை அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர் என்கிறது பிடிஐ செய்தி முகமை.
அப்போது காவல்துறை தங்களுக்கு வழிவிட வேண்டும் என்று மாணவர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர்.
இந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்று சின்மய் பிஸ்வால் தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













