நிர்பயா வழக்கு குற்றவாளிகளை நாளை தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை

நிர்பயா பாலியல் வல்லுறவு வழக்கு குற்றவாளிகளை பிப்ரவரி ஒன்றாம் தேதி (நாளை) தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தங்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு தடை கோரி பவன் குப்தா, அக்ஷய் குமார் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த விசாரணை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மறு உத்தரவு வரும்வரை குற்றவாளிகளை தூக்கிலிடக் கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி உள்ளிட்ட எந்த குற்றவாளிக்கும் நீதிமன்றம் பாகுபாடு காட்ட முடியாது. சட்ட ரீதியாக அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுத்தாலும் அதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாய் ஆஷா தேவி கூறுகையில், "குற்றவாளிகளின் வழக்கறிஞர் ஏபி சிங், குற்றவாளிகளுக்கு தூக்கு நிறைவேற்றப்படாது என்று என்னிடம் சவால் விடுகிறார். நான் தொடர்ந்து போராடுவேன். அரசாங்கம் இந்த குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முன்னதாக பிப்ரவரி ஒன்றாம் தேதி தங்களை தூக்கிலிட தடை கோரி நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மறு சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பட மூலாதாரம், other
வினய் மற்றும் அக்ஷய் குமாரின் மறுசீராய்வு மனுக்களை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் இன்று பவன் குப்தாவின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நடந்தபோது, தான் மைனராக இருந்ததாக குறிப்பிட்ட பவன் குப்தா, தன்னை தூக்கிலட தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக் கொண்டார்.
இது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம், பவன் குப்தாவின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் மொத்தம் நான்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. பவன் குப்தா, வினய் குமார் சர்மா, அக்ஷய் குமார் மற்றும் முகேஷ் குமார்.
இதில் முகேஷ் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜனவரி 17ஆம் தேதி நிராகரித்தார்.
அதனை தொடர்ந்து குற்றவாளிகள் நான்கு பேரையும் பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கிலிட ஆணை பிறப்பித்தது விசாரணை நீதிமன்றம்.
நிர்பயா வழக்கின் பின்னணி என்ன?
2012 டிசம்பர் 16 அன்று டெல்லியில் 23 வயதான பிசியோதெரபி மாணவி, திரைப்படம் பார்த்துவிட்டு தனது ஆண் நண்பருடன், பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார். அவருடைய நண்பரும் கொடூரமாக தாக்கப்பட்டார். பிறகு இருவரும் பேருந்தில் இருந்து சாலையோரத்தில் வீசி எறியப்பட்டனர்.

பட மூலாதாரம், Getty Images
மறுநாளான டிசம்பர் 17 அன்று முக்கிய குற்றவாளியான பேருந்து ஓட்டுநர் ராம் சிங் கைது செய்யப்பட்டார். அடுத்த சில தினங்களில் அவரது சகோதரர் முகேஷ்சிங், ஜிம்மில் பயிற்சியாளராக பணிபுரிந்த வினய் குமார் சர்மா, பழ வியாபாரியான பவன் குப்தா, பேருந்து உதவியாளர் அக்ஷய் குமார் சிங் மற்றும் 17 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
முக்கிய குற்றவாளியும், பேருந்து ஓட்டுநருமான ராம் சிங் என்பவர் மார்ச் 2013இல் திகார் சிறையில் இருந்தபோது, 2013 மார்ச் 11 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 17 வயது சிறுவனின் குற்றத்தை உறுதி செய்த சிறார் நீதி வாரியம், அந்தச் சிறுவனை, சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்தில் மூன்று ஆண்டு காலம் வைத்திருக்கவேண்டும் என தீர்ப்பளித்தது. அவர் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார்.
2013 செப்டம்பர் 13ஆம் தேதி இந்த வழக்கில் பிற நான்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங், பவன் குப்தா ஆகியோருக்கு விசாரணை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிற செய்திகள்:
- 20 குழந்தைகள், பெண்களை பிணைக்கைதியாக பிடித்த நபர்: போலீஸ் மீது துப்பாக்கிச் சூடு
- டெல்லி ஜாமியா போராட்டத்தில் துப்பாக்கியால் சுட்டவர் கைது - கணக்கை முடக்கியது ஃபேஸ்புக்
- மாட்டுத் தோலும் மிருதங்கமும்: டிஎம் கிருஷ்ணா நூல் வெளியீட்டுக்கு கலாக்ஷேத்ரா அனுமதி மறுப்பு
- கொரோனா வைரஸ்: "தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பில் உள்ளனர்"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:













