'நிர்பயா' வழக்கு குற்றவாளிகளை பிடித்தது எப்படி?: அதிகாரி பகிரும் சுவாரஸ்ய தகவல்கள்

'நிர்பயா' குற்றவாளிகளை தூக்குக்கயிறு வரை கொண்டு சென்றது அறிவியலா?

பட மூலாதாரம், AFP

    • எழுதியவர், சரோஜ் சிங்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

நிர்பயா கூட்டுப் பாலியல் வல்லுறவு வன்கொடுமை நடந்து ஐந்து ஆண்டுகளாகிவிட்டது. இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், நான்கு குற்றவாளிகளின் மரண தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகளான வினய் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் தண்டனைக்கு தடயவியல் நோய்க்குறியியல் என்ற அறிவியல் பரிசோதனையே முக்கிய காரணம் என்பது பலருக்கு தெரியாது.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி அனில் சர்மாவிடம் பிபிசி ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் விரிவாக பேசியது.

எரியும் மெழுகுதிரிகள்

பட மூலாதாரம், Getty Images

வோடோன்டிக்ஸ் (odontics) என்பதன் பொருள் என்ன?

"டிசம்பர் 15-16, 2012-ல் வஸந்த் விஹாரில், இரவு நேரப் பணியில் இருந்தேன். இரவு 1.14 மணிக்கு போலிஸ் நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பி.சி.ஆர் வேன் அந்த பெண்ணை சப்தர்ஜங் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டது. நீங்கள் விரைவாக வாருங்கள்" என்று அந்த தொலைபேசி அழைப்பு தெரிவித்தது.

"என் குழுவினருடன் சப்தர்ஜங் மருத்துவமனையை சென்றடைந்தேன். என்னையும் சேர்த்து குழுவில் மொத்தம் ஐந்து பேர் இருந்தோம். முதல் முறையாக நான் நிர்பயாவின் உடலைப் பார்த்தபோது, அவரது உடலில் பற்களால் கடித்த அடையாளங்கள் இருந்ததை பார்த்து அதிர்ந்து போய்விட்டோம். அது மனிதர்களின் பல் அச்சுபோல் தெரியவில்லை. மிருகங்களிடம் மாட்டி கடித்து குதறப்பட்டதுபோல் தோன்றியது. முதல்முறையாக பார்க்கும்போது, அவரை அதிக நேரம் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை."

போலீஸ்

அனில் மேலும் கூறுகிறார், "நிர்பயாவை பார்த்த உடனே, அடுத்த வேளையாக, அவரது நண்பரின் மொபைல் போனின் தகவல்களை கண்டறிந்தேன். போனின் லொகேஷனை கண்டறியச் சொன்னேன். அவர்கள் எந்தப் பகுதியில் வந்துக் கொண்டிருந்தார்கள் என்பதை தெரிந்துக்கொள்ள அது உதவியது."

"நிர்பயாவின் சிதைந்த தோற்றமே என் மனதை வாட்டிக்கொண்டிருந்தது. இணையதளத்தில் படித்த ஒரு விஷயமும் எனக்குத் தோன்றியது. மருத்துவர்களிடம் வோடோன்டிக்ஸ் (odontics) என்ற அறிவியல் ஆய்வு இந்த வழக்கில் எதாவது உதவி செய்யமுடியுமா என்று ஆலோசித்தேன்."

வோடோன்டிக்ஸ் என்பது பற்களை பற்றிய அறிவியல். பொதுவாக சிரிக்கும்போது அழகாக தோன்றவேண்டும் என்பதற்காக தங்களது பல் அமைப்பை சீர் செய்ய இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதைத் தவிர, வாயில் தாடைகள் ஒழுங்காக திறக்க முடியாமல் இருந்தாலோ தாடைகளில் எதாவது பிரச்சனை இருந்தாலும் இந்த சிகிச்சையை மேற்கொள்வார்கள்.

இரு பெண்கள் போராட்ட பதாகையுடன்

பட மூலாதாரம், Getty Images

ஒரு வழக்கில் முதல்முறையாக வோடோன்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.

இந்த அறிவியலின் ஒரு கிளைதான் பல் தடய அறிவியல். மனிதர்கள் அனைவரின் பற்களின் வடிவமும் ஒரே மாதிரியாக இருக்காது என்பதால் நிர்பயாவின் உடலில் இருந்த காயங்களையும் அதில் பதிந்துள்ள பல் தடங்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளின் குற்றத்தை நிரூபித்து அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்க முடிந்தது.

"குற்றத்தை உறுதி செய்வதற்காக பல் தடயவியலை பயன்படுத்தியது இந்த வழக்கில் தான் முதல்முறை என்று நினைக்கிறேன்" என்கிறார் அனில்.

அந்த இருண்ட கொடூரமான இரவை நினைத்தால் இப்போதும் அனிலின் கண்களில் சோகமும் மனதில் துக்கமும் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. கண்களில் இருந்து வழியத் தயாராகும் கண்ணீருக்கு கஷ்டப்பட்டு அணையிடுகிறார் காவல்துறை அதிகாரி.

எரியும் மெழுகுதிரிகளுடன் பெண்கள்

பட மூலாதாரம், Getty Images

வோடோன்டிக்ஸ் எப்படி உதவியது?

கர்நாடக மாநிலத்தில் தார்வாட் என்ற இடத்திலிருக்கும் ஒரு விஞ்ஞானி எனக்கு உதவி செய்யமுடியும் என்று தெரியவந்தது. நான் அவரை தொடர்புகொண்டு விடயத்தை எடுத்துரைத்தேன். அந்த அறிவியல் அறிஞரும் எனக்கு உதவ ஒப்புக்கொண்டார்.

அந்த விஞ்ஞானி அசித் பி ஆசார்யா. அவரிடம் நிர்பயா பற்றி பிபிசி பேசியது. டாக்டர் அசித், தார்வாட் எஸ்.டி.எம் பல் மருத்துவக் கல்லூரியில் பல் தடய அறிவியல்துறையின் தலைவராக பணிபுரிகிறார்.

நிர்பயா வழக்கில் பல் தடய அறிவியல் மூலம் குற்றவாளிகளின் குற்றத்தை உறுதி செய்ய உதவிய மருத்துவர் அசித் பி.ஆச்சார்யா

பட மூலாதாரம், DR. ASHITH B. ACHARYA/BBC

படக்குறிப்பு, நிர்பயா வழக்கில் பல் தடய அறிவியல் மூலம் குற்றவாளிகளின் குற்றத்தை உறுதி செய்ய உதவிய மருத்துவர் அசித் பி.ஆச்சார்யா

மருத்துவர் அசித்தின் கூற்றுப்படி "2012 டிசம்பர் 17ஆம் தேதியன்று டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனை மருத்துவர் என்னை தொடர்புகொண்டார். உடனே நிர்பயாவின் உடலில் இருக்கும் பல் தடங்களின் புகைப்படத்தை எடுக்குமாறு அவரை அறிவுறுத்தினேன்.

அந்த புகைப்படம்தான் இந்த வழக்கின் மைல்கல்லாக உதவி செய்தது. பாதிக்கப்பட்டவரின் உடலில் பற்களின் தடங்கள் இருக்கும்போது அதன் அளவை, க்ளோஸ்-அப் புகைப்படம் எடுத்து குற்றம் சாட்டப்படுபவர்களின் பல் தடத்துடன் ஒப்பிட்டு பார்க்கவேண்டும். காயம்பட்டவரின் உடலில் இருந்து சிறிது நேரத்தில் பல் தடங்கள் மறைந்துவிடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எனவே நடவடிக்கையை துரிதமாக எடுக்கவேண்டியது அவசியம்.

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

சிகிச்சை மற்றும் நம்பிக்கை

நிர்பயாவுக்கு சிகிச்சை அளிக்கும்போது, விசாரணை அதிகாரி அனில் உணர்வுபூர்வமாக அந்த வழக்கில் ஒன்றிவிட்டார். நிர்பயா பற்றி பேசும்போது கதை ஒன்றை அவர் பகிர்ந்துக்கொள்கிறார்.

"ஒரு பெண் நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தாள். அங்கிருந்த ஜன்னல் வழியாக ஒரு மரத்தைப் பார்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாள். அந்த மரத்தில் இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. இலைகள் அனைத்தும் உதிர்ந்துவிட்டால், தானும் இறந்துவிடுவோம் என்று அவளுக்கு தோன்றியது. ஒருநாள் அந்தப் பெண் தனது தந்தையிடம் சொன்னால், 'இந்த மரத்தின் கடைசி இலை உதிரும்போது நானும் இறந்துவிடுவேன்'.

இதைக்கேட்ட அவள் தந்தை கடைசி இலையை மரத்தோடு ஒட்டிவிடுகிறார். கடைசி இலை இருக்கிறது இன்னும் வீழவில்லை என்ற நம்பிக்கையுடன் அந்த பெண் தினமும் புதிய விடியலை நோக்கி காத்துக்கொண்டிருந்தாள். அந்த இலை உதிரவில்லை என்பதால் தானும் இறக்கமாட்டோம் என்று நம்பிய அந்தப் பெண்ணுக்கு சிறிது சிறிதாக வாழ்வோம் என்ற நம்பிக்கை துளிர்விட்டது."

இந்த கதையில் வரும் தந்தையைப்போல நிர்பயாவின் வாழ்க்கையிலும் நம்பிக்கையை விதைத்து அவரை மீண்டும் புது வாழ்க்கை வாழச் செய்யவேண்டும் என்று விரும்பினார் அனில்.

நிர்பயாவுக்கு சிகிச்சைகள் நடந்துக் கொண்டிருந்தபோது, தினமும் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்துவிட்டு வருவார். மருத்துவமனையில் நிர்பயாவின் அறையில் ஒரு தொலைகாட்சி பெட்டி வைத்து அவரை பார்க்கச் செய்யவெண்டும், நம்பிக்கையூட்ட வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அதை நிறைவேற்ற முடியவில்லை என்று வருந்துகிறார் அனில்.

அவர் அதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னதாகவே சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார் நிர்பயா. அங்கேயே நிர்பயா இறந்துபோனார்.

ஆனால், நிர்பயாவைப்போல அவரது வழக்கும் கல்லறைக்குள் புதைந்து விடக்கூடாது என்ற உறுதியுடன் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்று கடுமையாக பாடுபட்டது காவல்துறை.

நிறுத்துக

பட மூலாதாரம், Getty Images

டாக்டர் அசித் கூறியபடி நிர்பயாவின் உடலில் இருந்த பல் தடங்களின் புகைப்படங்கள், குற்றவாளிகளின் பல் தடயங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்காக அவை 2012 ஜனவரி இரண்டாம் தேதியன்று தார்வாட் அனுப்பப்பட்டது.

பல் தடவியல் அறிக்கை முடிவுகள் எப்போது கிடைக்கும் என்று உறுதியாக கூறமுடியாது, ஏனெனில் அதற்கு சில காலம் பிடிக்கும் என்று சொல்கிறார் மருத்துவர் அசித் ஆச்சார்யா.

அவரைப் பொறுத்தவரை, "இந்த வழக்கில் குற்றவாளிகள் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள். கடிகளும் அதிகம் எனவே மிகவும் கவனமாக ஆய்வு செய்யவேண்டியிருந்தது. "

நிர்பயா வழக்கிற்காக மருத்துவர் அசித் நாளொன்றுக்கு 10 முதல் 12 மணி நேரம் கடுமையாக பணியாற்றினார்.

போதும் நிறுத்துக

பட மூலாதாரம், Getty Images

ஐந்து நாட்கள் கடும் உழைப்புக்கு பின், பல் தடயவியல் அறிக்கை கிடைத்தது.

குற்றவாளிகளில் நால்வரில் வினய் ஷர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் ஆகிய இருவரின் பற்களின் மாதிரி, நிர்பயாவின் உடலில் இருந்த காயங்களோடு ஒத்துப்போனது.

"வினய் ஷர்மா மற்றும் அக்‌ஷய் குமார் சிங் இருவருக்கும் தூக்குதண்டனை கொடுக்கும் அளவு உறுதியான ஆதாரமாக விளங்கியது அவர்களின் பல்தடய அறிக்கையே" என்கிறார் நிர்பயா வழக்கின் விசாரணை அதிகாரி அனில்.

நிர்பயா சம்பவத்தின் 5-ம் ஆண்டு: பெண்களுக்கு டெல்லி பாதுகாப்பானதா?

காணொளிக் குறிப்பு, நிர்பயா சம்பவத்தின் 5-ம் ஆண்டு: டெல்லி பாதுகாப்பானதாக இருக்கிறதா?

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :