சூரியன் போன்ற வேறொரு நட்சத்திரத்தை 8 கோள்கள் சுற்றுவது கண்டுபிடிப்பு
தொலைதூரத்திலுள்ள நட்சத்திரம் ஒன்றை எட்டு கிரகங்கள் சுற்றுவருவதாக நாசா கண்டறிந்துள்ளது.

பட மூலாதாரம், NASA via Getty Images
நம்முடைய சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களின் எண்ணிக்கைக்கு ஒத்த அளவு இங்கும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
நமது சூரிய குடும்பத்திற்கு வெளியே இருக்கும் கிரக அமைப்பில், இந்த நட்சத்திரம்தான் அதிக எண்ணிக்கையிலான கிரகங்களை கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெப்ளர்-90 என்று அறியப்படும் இந்த நட்சத்திரம் சூரியனைவிட சற்று வெப்பமானதும், பெரியதுமாகும். இதனை 7 கிரகங்கள் சுற்றி வருவது பற்றி வானியலாளர்கள் ஏற்கெனவே அறிந்திருக்கின்றனர்.
"நமது சூரிய குடும்பத்தைப்போல அதிக கிரகங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டிருக்கும் முதலாவது நட்சத்திரம் கெப்ளர்-90 என்று இந்த கண்டுபிடிப்புக்கு பங்காற்றிய கூகுளில் மென்பொருள் பொறியிலாளராக இருக்கும் கிறிஸ்டோபர் ஷால்லு தெரிவித்திருக்கிறார்.

பட மூலாதாரம், NASA
இதற்கு முன்னதாக நடத்திய ஆய்வுகளின்போது தெரியாமல் போயிருக்கும் கிரகங்களை கண்டுபிடிப்பதற்காக, 'எந்திர கற்றல்' என்கிற செயற்கை மதிநுட்பத்தை கூகுள் நிறுவனத்தின் பொறியிலளார்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தினர்.
நாசாவின் கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி சேகரித்த கண்காணிப்புத் தரவுகளின் அடிப்படையில் இந்த கண்டுபிடிப்பு வந்துள்ளது.
இதனுடைய தாய் நட்சத்திரம் மிகவும் தொலைதூரத்தில், 2 ஆயிரத்து 545 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது.
ஆனால், இதனுடைய கிரகங்களின் அமைப்பு நம்முடைய சூரிய கிரகங்களுக்கு ஒத்த மாதிரி ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளது.
அஸ்டனிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இணை கண்டுபிடிப்பாளர் ஆன்ட்ரூ வான்டெர்பாக் இது பற்றி கருத்து தெரிவிக்கையில், "கெப்ளர்-90 நட்சத்திர அமைப்பு நமது சூரிய குடும்பத்தின் சிறிய வடிவ பதிப்புபோல உள்ளது. சூரிய குடும்பத்தில் சிறிய கிரகங்கள் உள்ளேயும், பெரிய கிரகங்கள் வெளியேயும் உள்ளன. ஆனால், இங்கு அனைத்தும் மிகவும் நெருக்கமாக உள்ளன" என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், NASA
இந்த அமைப்பின் சுற்றுவட்டப் பாதையில் கடைசியாக வெளிப்பகுதியில் இருக்கும் கிரகம், சூரியனில் இருந்து பூமி இருக்கும் தொலைவுக்கு சமமாக அமைந்து சுற்றிவருகிறது. இதன் மூலம் எவ்வளவுக்கு நெருக்கமாக அவை உள்ளன என்பதை உணரலாம்.
கெப்ளர் -90ஐ என அழைக்கப்படும் இந்த புதிய கிரகம் இந்த நட்சத்திரத்துக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது. எனவே, இந்த கிரகம் நட்சத்திரத்தை 14.4 நாட்களில் ஒரு முறை சுற்றி முடிக்கிறது.
இதன் மேற்பரப்பு தட்பவெப்பநிலை சுமார் 425 செல்சியஸாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இன்னொரு வேறுபட்ட நட்சத்திரத்தை சுற்றி வருகின்ற கெப்ளர் 80ஜி என்று அழைக்கப்படும் புதியதொரு பூமி வடிவலான கிரகத்தை கண்டறியவும் எந்திர கற்றல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.
பிற நட்சத்திரங்களை சுற்றுகின்ற கிரகங்களாக சுமார் 3 ஆயிரத்து 500 வெளிக்கிரகங்கள் சமீபத்திய தசாப்தங்களில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
பிற செய்திகள்
- ‘மோடினாமிக்ஸ்’ வேலை செய்ததா? ஓர் உண்மை பரிசோதனை
- “மீனின் மதிப்பு கூட மீனவனுக்கு இல்லை”
- "நெட் நியூட்ராலிட்டி" விதிகளை மாற்றுகிறது அமெரிக்கா
- ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் வேண்டும்: கௌசல்யா
- உலகெங்கிலும் உள்ள வித்தியாச கட்டடங்கள் (புகைப்படத் தொகுப்பு)
- விநோத விண் கல்லில் வேற்றுக்கிரகச் சுவட்டைத் தேடும் ஆய்வு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












