மகாராஷ்டிராவில் 5 வயது சிறுமி வல்லுறவு முயற்சிக்கு பின் கொலை

மகாராஷ்டிராவில் 5 வயது சிறுமி வல்லுறவு முயற்சிக்கு பின் கொலை

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கொலை செய்யப்பட்ட ஐந்து வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நாக்பூரிலுள்ள கல்மேஸ்வர் எனும் பகுதியில், பாலியல் வல்லுறவு செய்ய முயற்சி செய்து, ஐந்து வயது சிறுமியை கொன்றதாக சந்தேகிக்கப்படும் 32 வயதான நபர் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுமியின் உடல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து, நாக்பூர் பகுதியை சேர்ந்த மக்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவில், பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட பெண், கடந்த வாரம் அதுகுறித்த விசாரணைக்காக நீதிமன்றம் செல்லும் வழியில் எரிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது நாக்பூரில் ஐந்து வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி பெண் மருத்துவர் ஒருவர் வல்லுறவு செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளாக கருதப்படும் நான்கு பேர் கடந்த வெள்ளிக்கிழமை அம்மாநில காவல்துறையினரால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் சம்பவங்களின் தொடர்ச்சியாக, தற்போது இந்த ஐந்து வயது சிறுமி இறந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: