கர்நாடகா இடைத்தேர்தல்: 12 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி

எடியூரப்பா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எடியூரப்பா

கர்நாடகா மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் 15 தொகுதிகளில் 12-இல் பா.ஜ.க. வென்றுள்ளது.

இதனால், அம்மாநிலத்தில் எந்த இடரும் இல்லாமல் ஆட்சியைத் தொடர்கிறது பா.ஜ.க.

கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில், தற்போது கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பாஜக, அதை எதிர்த்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டன.

இன்று (திங்கட்கிழமை) காலை தொடங்கி வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது.

"இடைத்தேர்தல் நடந்த 15 தொகுதிகளின் வாக்காளர்களின் கட்டளைக்கு நாங்கள் உடன்பட வேண்டும். துரோகிகளை மக்கள் ஏற்றுக்கொண்டனர்; நாங்கள் தோல்வியை ஏற்றுக்கொள்கிறோம்" என்று ஏ.என்.ஐ. முகமையிடம் பேசிய கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

ஆட்சியை தக்க வைக்குமா பாஜக?

கடந்த ஜூலை மாதம் வரை கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகினர். அதைத்தொடர்ந்து, பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்தது.

இந்நிலையில், 15 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகலை தொடர்ந்து, அந்த தொகுதிகளுக்கு கடந்த டிசம்பர் 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

கர்நாடகத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா உள்ள நிலையில், அந்த ஆட்சி தொடர்வதற்கு குறைந்தது ஏழு இடங்களில் வென்றாக வேண்டிய கட்டாயம் இருந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: