உள்ளாட்சித் தேர்தல்: மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது திமுக

கிராமப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று முதல் பெறப்படும் நிலையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதற்காக திமுக மீண்டும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று (டிசம்பர் 8) நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதில் வார்டு மறுவரையறை மற்றும் இட ஒதுக்கீடு ஆகியவற்றை சட்ட நெறிமுறைகளை அனுசரித்து முழுமையாக செய்து முடித்த பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தை நாடுவது என அந்த கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டுள்ளதாக திமுக அறிவித்துள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அவர் முன்னதாக தெரிவித்தபடி, உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க தயாராக தங்கள் கட்சி உறுப்பினர்கள் இருப்பதாகவும், ஆனால் தேர்தல் முறைப்படி நடத்தப்படவேண்டும் என்பதற்காக நீதிமன்றத்தை நாடவேண்டும் என்ற முடிவை அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒருமனதாக ஏற்றுக்கொள்வதாகவும் திமுக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போக தி.மு.க. காரணம் என அதிமுக பொய் பிரசாரம் செய்வதாகவும், சமீபத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பின்பற்றாமல், உள்ளாட்சித் தேர்தல் எப்படியாவது தடைபடட்டுமே என்ற உள்நோக்கத்துடன் அதிமுக செயல்படுவதாகவும், விமர்சித்துள்ள திமுக, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள புதிய தேர்தல் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
"1995 ஆம் வருட தமிழ்நாடு பஞ்சாயத்து (இடஒதுக்கீடு மற்றும் இட ஒதுக்கீடு சுழற்சி) விதிகளின் படி இடஒதுக்கீட்டு கொள்கையை முழுமையாகக் கடைப்பிடித்து உள்ளாட்சித் தேர்தலுக்கான புதிய தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட விதிகளை திமுக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. உச்சநீதிமன்ற விதிகளுக்கு புறம்பாக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாடுவது என திமுகவினர் உறுதிபூண்டிருப்பதாக" செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளே இல்லாமல், தங்கள் குறைகளையும் தேவைகளையும் பிரதிபலிக்கும் வாய்ப்பின்றி அல்லல்களுக்கு ஆளாகிவரும் மக்கள் தங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என கருதும் திமுக, உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் நம்பிக்கையுடன் சந்திப்பது என முடிவுசெய்துள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












