வட கொரியா செய்த ”மிக முக்கிய சோதனை”: செயற்கைக் கோள் ஏவுதளத்தில் நடந்தது

பட மூலாதாரம், AFP
செயற்கைக் கோள் ஏவுதளத்திலிருந்து மிகவும் முக்கியமான பரிசோதனை ஒன்றை மேற்கொண்டதாக வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த பரிசோதனை நாட்டின் கேந்திர அந்தஸ்தை மேம்படுத்த உதவும் என்று வடகொரியாவின் அரசு செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது. இது தவிர மேலதிக தகவல்கள் எதுவும் சொல்லப்படவில்லை.
ஆனால், இச்சோதனை செயற்கைக்கோளை ஏந்திச் செல்லும் ராக்கெட் எஞ்சின் தரையிலேயே சோதிக்கப்பட்ட நிகழ்வாகவோ, அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையாகவோ இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை வட கொரியா முறித்துக்கொண்டதை அடுத்து இந்த பரிசோதனை நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஐ.நாவுக்கான வட கொரிய தூதர் கிம் சோங், இனி அமெரிக்காவுடன் நீண்ட நெடிய பேச்சுவார்த்தைகள் தேவையில்லை என்றும், அணு ஆயுதங்களை கைவிடுவதற்கான பேச்சே இதில் இல்லை என்றும் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியா மீதான தடைகள் விலக்கப்படுவது உள்ளிட்ட ஷரத்துகளுடன் ஒரு புதிய ஒப்பந்தத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் தயார் செய்துகொண்டு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அமெரிக்காவிடம் வட கொரியா கூறியிருந்தது.
இல்லையேல் வட கொரியா வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கும் என்றும் வட கொரியா எச்சரித்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
நேற்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் இன்னும் இந்த பேச்சுவார்த்தை ஓர் உடன்பாட்டை எட்டும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தெரிவித்திருந்தார்.
வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் உடன் அதிபர் டிரம்ப் இருமுறை உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி, வட கொரியா எல்லைக்கே சென்று கிம்முடன் கையும் குலுக்கினார். ஆனால், வட கொரியா அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தையை முக்கிய கட்டத்துக்கு கொண்டு செல்வதில் டிரம்ப் தோல்வி கண்டார்.
வட கொரியா நடத்திய இந்த சமீபத்திய பரிசோதனை சோஹோ செயற்கைக்கோள் தளத்தில் நடைபெற்றுள்ளது. இந்த தளத்தைத்தான் கிம் மூடிவிடுவார் என்று அமெரிக்கா முன்பு உறுதியளித்திருந்தது.
"எதிர்காலத்தில் வட கொரியாவின் கேந்திர அமைவிடத்தில் ஒரு முக்கிய மாற்றங்கள் நிகழ்வதற்கு இந்த பரிசோதனை முடிவுகள் காரணமாக இருக்கும்," என்று வட கொரியாவின் கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை திட்டங்களால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற நாடுகளின் தடை பட்டியலில் வட கொரியா இடம்பெற்றுள்ள நிலையிலும், குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை மீண்டும் இந்த ஆண்டு வட கொரியா தொடங்கி உள்ளது.
ஓராண்டுக்குப் பின், முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வாரத் தொடக்கத்தில் வடகொரியாவுக்கு எதிராக தனது கடுமையான கண்டனங்களை மீண்டும் பதிவு செய்துள்ளார்.
வட கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்காவுக்கு முழு உரிமை உள்ளது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிடமிருந்து தடை விலக்கு பெற முடியாத பட்சத்தில் வட கொரியா தனது செயற்கைக்கோளை ஏவலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர். நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளை ஏவி சர்ச்சையில் சிக்குவதற்கு பதிலாக இதுபோன்ற செயற்கைக் கோள்களை ஏவி அமெரிக்காவை லேசாக ஆத்திரமூட்டியும், அதேசமயம் தனது ராக்கெட் திறனை சோதித்து பார்க்கும் முயற்சியிலும் வட கொரியா ஈடுபடலாம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












