டெல்லி தீ விபத்து: "4 பேரை காப்பாற்றினேன்; ஆனால் சகோதரனை மீட்க முடியவில்லையே..."

- எழுதியவர், அனந்த் பிரகாஷ்
- பதவி, பிபிசி
"என்னுடைய சகோதரன் இப்படி என்னை விட்டுவிட்டு போய்விடுவான் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. அவன் எதை செய்தாலும், 'பையா! நான் இதை செய்கிறேன்! பையா! நான் அதை செய்கிறேன்! என்று கூறுவான்.' தீப்பற்ற தொடங்கியபோது கூட, அவன் என்னை அலைபேசியில் அழைத்து, 'பையா! என்னை காப்பாற்றுங்கள்' என்று சொன்னான். ஆனால், என்னால் அவனை காப்பாற்ற முடியவில்லை."
டெல்லியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தீ விபத்தில் தனது சகோதனை இழந்த ஒருவர் இப்படி யாரோ ஒருவரிடம் அலைபேசியில் சொல்லி அழுது கொண்டிருந்தார். அவரது அருகே இருந்த இருவர், அவருக்கு ஆதறுதல் தெரிவித்து கொண்டிருந்தனர்.
தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்த உடனேயே தான் சம்பவ இடத்தை அடைந்துவிட்ட போதிலும், தனது சகோதரன் பப்லுவை காப்பாற்ற முடியவில்லையே என்று முஹம்மது ஹைதர் கடும் துயரத்தில் இருக்கிறார்.
"நான் நேரத்திற்கு அங்கு சென்றுவிட்டேன். அப்போது, அங்கு இருந்த ஒருவர், 'உன்னுடைய சகோதரன் மீட்கப்பட்டுவிட்டான்' என்று கூறினார். உடனடியாக எனக்கு பதற்றம் விலக ஆரம்பித்தது. அதன் பிறகு, நான் தனிப்பட்ட முறையில் 3-4 பேரை காப்பாற்றினேன்; ஆனால், என்னுடைய சகோதரன் உள்ளே இருப்பது எனக்குத் தெரியவில்லை. சில மணிநேரங்களுக்கு பின்பு, எனது சகோதரனை பிணவறையில்தான் பார்க்க முடிந்தது" என்று ஹைதர் கூறுகிறார்.
மறுமுனையில், யாரிடமோ அலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் ஒருவர், கனத்த குரலில், "பப்லு இறந்துவிட்டான். ராஜு இறந்துவிட்டான். தாகுயிரும் இறந்துவிட்டான்" என்று கூறினார்.
இந்த தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து, மீட்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்த அவர்களது அன்புக்குரியவர்கள், கள நிலவரத்தை தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
டெல்லி தானிய சந்தையில் உள்ள பயணப்பை மற்றும் பொம்மை செய்யும் தொழிற்சாலை ஒன்றில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தொழிலாளர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வீங்கிய கண்கள், மனமுடைந்தவர்களின் முகங்கள், இடைவிடாத வேதனைகள் அந்த மருத்துவமனை வளாகத்தில் எங்கும் தென்பட்டது.
"இனி எனக்கு யார் தொழில் சொல்லி கொடுப்பார்?"
28 வயதாகும் முஹம்மத் அப்சத், தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் தையல் பணி செய்து வந்தார். அந்த வேலையை, தெரிந்துகொள்வதற்காக அவரது தம்பி சமீபத்தில்தான் டெல்லிக்கு வந்திருந்தார்.
நேற்று நடந்த தீ விபத்தில் அப்சத் உயிரிழந்துவிட்டதால், அவருக்கு தையல் கலையை சொல்லி கொடுப்பதற்கு வேறு யாருமில்லை.

எல்என்ஜேபி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தனது அண்ணனின் உடலை பார்க்க வந்த அவர், "அவரது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை கொண்டுவருமாறு என்னிடம் கேட்டிருந்தனர். ஆனால், அதற்கு நான் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும்" என்று கூறினார்.
"திங்கட்கிழமை அன்று அவர் எங்களது சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தது. அதற்காக பயணச்சீட்டு கூட முன்பதிவு செய்தாயிற்று."
"எங்களது அம்மா, அப்பா, சகோதரி, அண்ணனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இவரையே நம்பியே இருந்தனர். எங்களது குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் இவர்தான்" என்று அவர் கூறினார்.
இந்த கோர தீ விபத்தில் தனது சித்தப்பா மகன் இறந்ததால் அவரது உடலைப் பார்ப்பதற்காக மருத்துவமனை வந்திருந்தார் முஹம்மத் சதாம்.
டெல்லியிலுள்ள முக்கிய கடை வீதிகளில் ஒன்றான சாந்தினி சவுக் பகுதியிலுள்ள கண்ணாடி கடையொன்றில் சதாம் வேலை செய்கிறார்.
"சம்பவம் குறித்து அறிந்து, நான் உடனடியாக தொழிற்சாலைக்கு சென்றேன். ஆனால், அவரை இறந்த நிலையிலேயே பார்க்க முடிந்தது. அவருக்கு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருந்தது. தனது குழந்தையை பார்ப்பதற்காக திங்கட்கிழமை சொந்த ஊருக்கு செல்வதாக இருந்தார் அவர். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரே நபர் அவர் மட்டுந்தான்" என்று சதாம் மேலும் கூறினார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள்…
இந்த தீ விபத்து ஒரே வீட்டைச் சேர்ந்த அண்ணன் தம்பி இருவரை காவு கொண்டது என்று கூறுகிறார்கள் அவரது குடும்பத்தினர்.
இந்த இரண்டு சகோதரர்கள் பிகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் பணிநிமித்தமாக டெல்லியில் வசித்து வந்ததாகவும் அவர்களது உடல்களை மருத்துவமனையில் பார்க்க வந்த உறவினர்களான மொமினா, ரக்சனா ஆகியோர் தெரிவித்தனர்.

"இந்த தொழிற்சாலையில், தையல் வேலை செய்துகொண்டிருந்த அவர்கள் இருவரும், ஒரு மாதத்துக்கு 20,000 - 25,000 ரூபாய் சம்பாதித்து கொண்டிருந்தனர். இவர்களை தவிர்த்து அவர்களது வீட்டில் சம்பாதிக்கும் நிலையில் யாரும் இல்லை. இவர்களை நம்பியே பெற்றோர், நான்கு சகோதரிகள் இருந்தனர்."
தீ விபத்தில் உயிரிழந்த இரண்டு சகோதர்களின் உடல்களை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்கு தங்களிடம் பணம் இல்லை என்று மொமினா, ரக்சனா ஆகியோர் கூறுகின்றனர். தங்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் மட்டுமே உடல்களை பெற்றுக்கொள்வது சாத்தியம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
'குடும்பத்தினரை பார்த்துக்கொள்'
தனது நண்பர் முஹம்மத் முஷ்ரப் தீ விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாக அவரது நண்பர் சோபித் குமார் கூறுகிறார்.
தையல் வேலையை செய்து வந்த 32 வயதாகும் சோபித்துக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்பட நான்கு குழந்தைகள் உள்ளன.
தீ ஏற்பட்ட உடன் தன்னை அழைத்து பேசிய முஷ்ரப், "எங்களது தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நான் இறந்துவிட்டால் எனது குடும்பத்தை கவனித்து கொள்" என்று கூறியதாக சோபித் சொல்கிறார்.

அப்போது, தான் உடனடியாக கட்டடத்திலிருந்து குதித்து உயிர் தப்பிவிடுமாறு முஷ்ரப்பிடம் கூறியதாகவும், ஆனால் அவர் குதிப்பதற்கு இடமேதுமில்லை என்று தெரிவித்ததாகவும் சோபித் கூறுகிறார்.
"ஒருவேளை விபத்து நேர்ந்த தொழிற்சாலையில், அவசர வழி ஏதாவது இருந்திருந்தால், பலர் தத்தமது உயிரை காப்பாற்றி கொண்டிருப்பர்" என்று அவர் கூறுகிறார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன், டெல்லிக்கு வந்த முஷ்ரப்பின் உறவினர் காலித் ஹுசைன், கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முஷ்ரப் டெல்லியில் பணியாற்றி வருவதாகவும், ஆனால் எத்தனை ஆண்டுகளாக தற்போது விபத்து ஏற்பட்ட தொழிற்சாலையில் அவர் பணியாற்றி வந்துள்ளார் என்று தனக்கு தெரியாது என்று கூறுகிறார்.
"அவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். முஷ்ரபை தவிர்த்து அவரது குடும்பத்தில் வேறு யாரும் பணிக்கு செல்லவில்லை. இவரது குழந்தைகளுக்கு ஐந்துக்கும் குறைவான வயதே ஆகிறது" என்றும் அவர் கூறினார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:












