‘பொறியியல் - 35 கல்லூரிகளில் ஒரு மாணவர்கூட சேரவில்லை’
இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பொறியியல் - ஆர்வாம் காட்டாத மாணவர்கள்'

பட மூலாதாரம், Getty Images
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஒரு தரவினை மேற்கோள்காட்டி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2018 ஆம் ஆண்டு, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 226 தனியார் பொறியியல் கல்லூரிகளில் 10 சதவீத சீட்டுகள் கூட நிரம்பவில்லை என்கிறது அந்நாளிதழ் செய்தி.
12 கல்லூரிகளில் மட்டுமே 90 சதவீத சீட்டுகள் நிரம்பி இருக்கின்றன, 35 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


பட மூலாதாரம், இந்து தமிழ்

தினத்தந்தி: 'கூவம் ஆறுக்கு கீழே டிசம்பரில் மெட்ரோ ரெயில் இயக்கம்'
சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மேலும் ஒரு திகில் பயணமாக கூவம் ஆறுக்கு கீழே டிசம்பரில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடக்கிறது என்கிறது தினத்தந்தி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
அண்ணா சாலையில் இருந்து அரசினர் தோட்டம் வழியாக சென்ட்ரல் வரும் மெட்ரோ ரெயில் கூவம் ஆறுக்கு கீழே சுமார் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் டிசம்பர் மாதம் இயக்கப்பட உள்ளது என்று அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது.


இந்து தமிழ்: 'ஒரே நேரத்தில் தேர்தல் சாத்தியம் இல்லை'
அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் மக்களவை, சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார் என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி.
"மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண் டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. அப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், அதற்கு வசதியாக சில மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் குறைக்கப்படவோ அல்லது நீட்டிக்கப்படவோ வேண்டும். இதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும். அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லை.மேலும், வாக்காளர்களுக்கு தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ரசீது வழங்கக் கூடிய விவிபாட் வசதியுடன் கூடிய 100 சதவீத வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவை. அதே போல, மக்களவையுடன் மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால் அதற்கு ஏற்றபடி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட கூடுதலான போலீஸ் படையினர் தேவை. போதுமான அளவுக்கு தேர்தல் பணியாளர்களும் தேவைப்படு வார்கள்." இவ்வாறு தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.

தினமணி: 'மேக தாதுவில் அணை: கர்நாடக முதல்வர் குமாரசாமி உறுதி'
மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது உறுதி என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியதாக கூறுகிறது தினமணி நாளிதழ் செய்தி.

பட மூலாதாரம், Getty Images
"தமிழகத்துக்கு தேவைப்படும் நேரத்தில் தண்ணீர் திறந்துவிடுவதற்காக கிருஷ்ணாராஜ சாகர் அணை கட்டவில்லை. கர்நாடக மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அந்த அணை கன்னட மக்களின் தேவைக்கே அதிக அளவு பயன்பட வேண்டும்.
மேக தாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். அனுமதி கிடைத்தவுடன் அணைக் கட்டப்படும். இதில் எந்த மாற்றமுமில்லை. மாநிலத்தில் பல மாவட்டங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அதிக அளவு பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் கூறியதாக விவரிக்கிறது அந்நாளிதழ் செய்தி.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :












