ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரும் வேதாந்தா நிறுவனம்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூட உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட்

பட மூலாதாரம், Reuters

இந்த மேல் முறையீடு நிலுவையில் இருக்கும் காலகட்டத்தில், ஆலையை பராமரிக்கவும் பிற இடைக்கால நிவாரணங்களை வழங்கவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அனுமதியை ஸ்டெர்லைட் நிர்வாகம் கோரியுள்ளது என்று ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா லிமிடெட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியின் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால் அந்த ஆலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழல் மாசு உண்டாவதாகவும், அப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறு ஏற்படுவதாகவும் கூறி தூத்துக்குடியில் பொதுமக்கள், அந்த ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தின் நூறாவது நாளான மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பொதுமக்கள் நடத்திய ஊர்வலம் பெரும் வன்முறையில் முடிவடைந்தது. அப்போது தமிழக காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசு மே 28ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்குவதற்கான இசைவாணை மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், அதைப் புதுப்பிக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் விண்ணப்பித்ததாகவும், ஆனால், ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த மாசுக்கட்டுப்பாடு விதிமுறைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் தமிழக அரசு கூறியிருந்தது.

ஸ்டெர்லைட்

எனவே, ஆலை இயங்குவதற்கான இசைவாணையை புதுப்பிப்பதற்கான விண்ணப்பம், ஏப்ரல் 9ஆம் தேதி நிராகரிக்கப்பட்டதாகவும், ஆலைக்கான மின்சார இணைப்பு மே 25ஆம் தேதியன்று துண்டிக்கப்பட்டதாகவும் தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்தது.

1974ஆம் வருடத்தின் தண்ணீர் சட்டத்தின்படி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மூடல் உத்தரவை அரசு ஏற்பதாகவும், ஆலையை மூடி சீல்வைக்க உத்தரவிடுவதாகவும் அப்போது தமிழக அரசு கூறியிருந்தது.

அன்றைய தினமே அந்த ஆலையின் வாயிலில் இந்த உத்தரவு ஒட்டப்பட்டு, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது நிரந்தரமான மூடல் என்று தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரியும் கூறியிருந்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் தாக்கல் செய்துள்ள மேல் முறையீடு தொடர்பான சட்ட விவகாரங்களை, குர்கானில் உள்ள தங்கள் சட்டக்குழு கையாண்டு வருவதாக, மும்பையிலுள்ள வேதாந்தா நிறுவனத்தின், தகவல் தொடர்புக் குழுவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டபோது தெரிவிக்கப்பட்டது.

குர்கானில் உள்ள வேதாந்தாவின் கிளை நிறுவனமான கேர்ன் இந்தியா (Cairn India) நிறுவனத்தை பிபிசி தமிழ் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது, தொலைபேசியில் பேசிய நபர் சட்டக் குழுவினரிடம் யாரும் பேச முடியாது என்று கூறி கூடுதல் தகவல்களைத் தர மறுத்துவிட்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :