நாளிதழ்களில் இன்று: 2018 - 19 மருத்துவ கலந்தாய்வின் போது ஆதார் கட்டாயம்
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்து (ஆங்கிலம்) : மருத்துவ கலந்தாய்வின் போது ஆதார் கட்டாயம்

பட மூலாதாரம், Getty Images
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேர அடுத்த மாதம் நடைபெற உள்ள மருத்துவ கவுன்சிலிங்கின் போது மாணவர்கள் தங்கள் ஆதார் அட்டைகளை சமர்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று பொய்யான தகவல்கள் தருவதால், இங்குள்ள மாணவர்களுக்கு அனுமதி கிடைக்காமல் போய்விடுவதாக கடந்த ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.
2018 - 19 ஆண்டிற்கான மருத்துவ கலந்தாய்வின் போது ஆதார் மற்றும் அதன் நகல் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி இதுகுறித்து இரண்டு நாட்களுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

தினமலர்: அமைக்கப்பட்டது காவிரி ஆணையம்

பட மூலாதாரம், STR
கர்நாடகா தரப்பில் பெயர்கள் ஏதும் தரப்படாத நிலையில், தலா ஒன்பது பேர் அடங்கிய காவிரி மேலாண்மை ஆணையமும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரை தலைமையிடமாக வைத்து செயல்படும்.
காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவதாக அரசாணை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணையர் மசூத் ஹூசைன் செயல்படுவார். இந்த ஆணையத்தின் தலைமையகம் தில்லியில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி மேலும் விவரிக்கிறது.

தினமணி : நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பட மூலாதாரம், TWITTER@SUN PICTURES
சர்கார் திரைப்படத்தின் போஸ்டரில் புகைப்பது போன்று தோன்றியுள்ள நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எஎன புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு, மாநில கண்காணிப்புக்குழு மற்றும் இந்திய திரைப்பட தணிக்கைக் குழு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் புகைப்பது போல தோன்றியுள்ள போஸ்டர், புகையிலை விளம்பர தடை சட்டத்தை மீறும் செயல் என்று புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு கூறியுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












