பிணையில் விடுதலையானார் பியூஷ் மனுஷ்

சேலம்- சென்னை எட்டுவழி நெடுஞ்சாலை அமைக்கும் திட்டத்தை எதிர்த்ததற்காக கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர் பியூஷ் மனுஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து அவர் இன்று வெள்ளிக்கிழமை சேலம் மத்திய சிறையில் இருந்து விடுதலையானார்.

பியூஷ் மனுஷ்
படக்குறிப்பு, சிறையில் இருந்து வெளியாகும் பியூஷ் மனுஷ்.

சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு உறவினர்கள், நண்பர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"பொதுமக்கள் வன்முறையில் ஈடுபடக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நாங்கள் வன்முறையை விரும்பவில்லை. மக்களை வன்முறைக்குத் தூண்டும் வகையில் ஒரு போதும் செயல்பட வில்லை. விமான நிலைய விரிவாக்கம், எட்டு வழிச் சாலை போன்ற விஷயங்களில் மக்கள் பயந்து போய் உள்ளனர். மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வது தவறான செயல். அரசிடம் விளக்கம் கேட்பவர்களை அரசு அச்சுறுத்தி வருகிறது" என்று கூறிய அவர், மரங்கள் அழிக்கப்படுவதை தடுக்க நீதிமன்றத்தை நாடப்போவதாகக் கூறினார்.

ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு ஓமலூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால், நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. எட்டுவழிச் சாலை அமைத்தால் எட்டுபேரை வெட்டுவேன் என்று பேட்டியளித்த வழக்கில் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையம் சுமார் 570 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதேபோன்று சேலத்தில் இருந்து சென்னை வரையில் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கபடுகிறது. இதனால், பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு விவசாயமும், விவசாயிகளும் பாதிக்கபடுவார்கள் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு ஆதரவாக சேலமே குரல்கொடு இயக்கத் தலைவர் பியூஷ் மனுஷ் போராட்டங்கள் நடத்தி வந்தார். மேலும், பல்வேறு தலைவர்களையும் அழைத்து வந்து கூட்டங்கள் நடத்தினார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 3-ம் தேதி சேலம் வந்த நடிகர் மன்சூர் அலிகான் சேலம் விமான நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான நிலங்களைப் பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து அவர் கூறும்போது விவசாய நிலங்களை அழித்து விரிவாக்கமோ, எட்டு வழிச்சாலையோ அமைத்தால் எட்டு பேரை வெட்டுவேன் என்றார். இதனை தொடர்ந்து கடந்த 17-ம் தேதி சேலமே குரல்கொடு இயக்க தலைவர் பியூஷ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான் ஆகியோர் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த தீவட்டிப்பட்டி போலீசார், அன்று காலையே சென்னை சென்று நடிகர் மன்சூர் அலிகானை கைது செய்ததனர்.

தொடர்ந்து 18-ம் தேதி இரவு பியூஷ் மனுஷ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ், நடிகர் மன்சூர் அலிகான் இருவரும் ஜாமீன் கேட்டு ஓமலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இன்று வெள்ளிக்கிழமை மதியம் விசாரணைக்கு வந்தன.

எட்டு வழிச்சாலை

இவற்றை விசாரித்த ஓமலூர் குற்றவியல் நடுவர் ரமேஷ், சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார். இவர் பத்தாயிரம் காப்புத் தொகை, தினமும் காலையும் மாலையும் ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையொப்பமிடுவது ஆகிய நிபந்தனைகளை விதித்து நடுவர் ரமேஷ் ஜாமீன் வழங்கினார்.

ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்று அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

திரைப்பட நடிகர் மன்சூர் அலிகான் கைது செய்யப்பட்ட வழக்கில் சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு எதிராகவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கூட்டங்களை நடத்தியதாக பியூஷ் மனுஷும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இவர் மீது அரசுக்கு எதிராகப் பேசுதல் 153, வன்முறையை தூண்டுதல் 189, கொலை மிரட்டல் விடுத்தல் 506 (ii), 7 ( 1 ) Cla Act ஆகிய பிரிவுகளில் தும்பிபாடி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :