"முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு இல்லை" - கொல்லப்பட்ட இளைஞரின் தந்தை

பட மூலாதாரம், FACEBOOK
- எழுதியவர், ஹர்ஷ் மந்தர்
- பதவி, பிபிசி
ஜூன் 3ம் தேதி மாலை டெல்லியின் வட பகுதியிலுள்ள, ரக்னுபிர் நகர் குடியிருப்பு ஒன்றில் 300 டெல்லிவாசிகள் குழுமியிருந்தனர்.
ரமலான் மாதத்தில் முஸ்லிம்களின் நோன்பை முறிக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த நிகழ்வுக்காகதான் அவர்கள் குழுமியிருந்தனர்.
இந்த ரமலான் மாத நோன்பு முறிவு நிகழ்வுக்கு அதிக தனிச்சிறப்புமிக்க பண்புகள் பல இருந்தன.
முஸ்லிம் அல்லாத மதத்தை சேர்ந்த பலர் பங்குகொண்ட நிகழ்வு இது என்பது இதன் தனிச்சிறப்புகளில் ஒன்று.
இதனை மிகவும் தனிச்சிறப்புடையதாக உருவாக்கியது இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த நபர்தான்.
அவர்தான் யாஷ்பால் ச்செனா. சரியாக 4 மாதங்களுக்கு முன்னால், இப்போது இஃப்தார் விருந்து கொடுக்க அமர்ந்திருக்கும் சில நூறு மீட்டர்களுக்கு முன்னால் நிகழ்நத கொடூர கொலையால் தன்னுடைய 23 வயது ஒரே மகனை இவர் இழந்தார்.

23 வயதான அன்கித் என்கிற இளம் புகைப்படக்கலைஞரான மகன் கொலையுண்டபோது, எல்லா மதங்களின் அடையாளங்களுடன் அவருடைய முகம் அலங்கரிப்பட்டதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
"அவாரா பாயிஸ்" என்று தங்களை அழைத்துகொண்ட நண்பர்கள் குழு இவ்வாறு செய்திருந்தனர்.
இறந்துபோன அன்கித்தும் தன்னுடைய தந்தை ஏற்பாடு செய்த இந்த இஃப்தார் விருத்தை நிச்சயம் மகிழ்சியோடு அனுமதித்திருப்பார்
தன்னுடைய மகன் அன்கித்தை இழந்த 2018 பிப்ரவரி 2ம் தேதி அன்று மாலை நடந்தவை, அவரது நினைவுகளில் இன்னும் நீங்காமல் உள்ளது.
அவரது மகனை காப்பாற்ற வேண்டுமானால், அவர்கள் உடனடியாக விரைந்து செல்ல வேண்டும் என்று யாரே ஒருவர் தொலைபேசியில் அன்கித்தின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.

அவர்களின் வீட்டை நெருங்கியுள்ள நெடுஞ்சாலை ஒட்டியிருக்கும் பாதை வழியாக முடிந்த அளவுக்கு அவர்கள் விரைவாக ஓடினார்கள்.
அந்த இடத்தை சென்றடைந்தபோது, சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தங்களின் அண்டை வீட்டாராக வாழ்ந்து வந்த முஸ்லிம் பெண்ணொருவரின் குடும்பத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டு தன்னுடைய மகன் அடிக்கப்படுவதை அவர்கள் கண்டார்கள்.
தங்களின் மகன், கல்லூரி மாணவியான முஸ்லிம் பெண் ஒருவருடன் காதலில் விழுந்திருக்கிறான் என்றும், அவர்கள் திருமணம் செய்ய விரும்பியுள்ளனர் என்றும் அதுவரை இவர்களுக்கு தெரியாது.
இந்த இருவரும் அடுத்தடுத்து தெருக்களில் வாழ்ந்தவர்கள், குழந்தைகளாக இருக்கும் சமயத்தில் அடிக்கடி ஒருவருக்கொருவரின் வீடுகளில் விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் பெண்ணின் குடும்பம் சற்று தொலைவுக்கு அப்பால் வாழ தொடங்கியபோதும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் சந்தித்து வந்துள்ளனர்.
காதலில் விழுந்த அவர்கள், இது பற்றி தங்களின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. ஆனால், அந்தப் பெண்ணின் குடும்பம் இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அன்கித் கொல்லப்பட்ட அந்நாளில், தான் காதலித்தவரை திருமணம் செய்துகொள்ள போவதாக கூறிவிட்டு, தன்னுடைய குடும்பத்தாரை வீட்டில் வைத்து அடைத்து விட்டு அந்தப் பெண் வெளியேறியுள்ளார்.
ஆனால், அந்தப் பெண் அன்கித்தை சென்றடைவதற்கு முன்னரே, வீட்டை உடைத்து வெளியேறிய குடும்பத்தினர் ஸ்டுடியோவிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அன்கித்தை பிடித்து கொண்டனர்.
மகனை அடிப்பதை பார்த்தவுடன், இருவரின் தாய்மாரும் சண்டையிட அன்கித்தின் தாய் தரையில் சாய்ந்துள்ளார்.
தன்னுடைய தாயை தூக்குவதற்கு அன்கித் சென்றபோது, பெண்ணின் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் கத்தியை எடுத்து அன்கித்தின் தொண்டையில் குத்தினார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அன்கித்தை காப்பாற்ற உதவுவதற்கு அக்கம்பக்கத்தினரை அவர்கள் மன்னறாடி கேட்டுகொண்ட பின்னரும் யாரும் முன்வரவில்லை.

கடைசியில் மின்சாரம் மூலம் இயங்குகின்ற ஆட்டோ ரிக்க்ஷா உதவயுடன், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அன்கித்தை அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவர்கள் அன்கித் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தபோது. துக்கத்தால் வாயடைத்து போயினர்.
இந்த சம்பவத்துக்கு மத சாயம் பூசி, முஸ்லிம் சமூகத்தினருக்கு ஏதிராக மக்களை திரட்டுவதற்கு ஒரு வாய்ப்பாக இந்த சம்பவத்தை பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி கிளை பார்த்தது.
இந்த கொலைக்கு மதச்சாயம் வழங்கும் வகையில் அரசியல்வாதிகள் கருத்துக்களை தெரிவித்ததாக தி வயர் செய்தி ஊடகத்தின் செய்தியாளர் கவுரவ் விவேக் தெரிவிக்கிறார்.
'சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட மதம்' என்று கூறப்படும் மதத்தினரால் 23 வயது அன்கித் ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொருள்படும் வகையில் பாரதிய ஜனதா கட்சியின் அகாலி சட்டமன்ற உறுப்பினர் மனிந்தர் சிங் சர்சா டுவிட்டர் பதிவிட்டிருந்தார்.
இந்த குடும்பத்தை நேரில் சென்று சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் டெல்லி தலைவர் மனோஜ் திவானி, பெரும்பான்மை சமூகத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகும்போது, டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் ’அமைதி’ காப்பதை விமர்சனம் செய்தார். அன்கித் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
அன்கித்தின் வீட்டிற்கு சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் அந்த குடும்பத்திற்கு 5 லட்சம் வழங்குவதாக அறிவித்தார். அதேவேளையில், பாஜ்ராங் தால் செயற்பாட்டளர்கள் அந்த பகுதியில் வலம்வந்து, முஸ்லிம் மக்களுக்கு மிரட்டல் விடுக்க தொடங்கினர்.

எளிய மனிதரின் மனிதநேயம்
தன்னுடைய துயரமான இந்த நேரத்திலும், அன்கித்தின் தந்தை யஷ்பால் சக்சேனா தீவிர மனிதநேய உணர்வோடு நடந்து கொண்டார்.
டெல்லி பிஜேபி தலைவர் மனோஜ் திவானி தன்னை சந்திக்க வந்துபோது, தன்னுடைய மகனின் கொலைக்கு மதச்சாயம் பூச வேண்டாம் என்று யஷ்பால் சக்சேனா வேண்டிகொண்டார்.
"எனக்கு ஒரேயொரு மகன்தான். எனக்கு நீதி கிடைத்தால் நல்லது. இல்லாவிட்டாலும், எந்த சமூகத்திற்கு எதிராகவும் எனக்கு வெறுப்புணர்வு இல்லை. என்னிடம் மதசார்பு எண்ணம் எதுவுமில்லை. இந்தப் பிரச்சனையை ஊடகங்கள் மதச்சாயம் பூசி ஏன் வெளியிடுகின்றன என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை" என்று யஷ்பால் சக்சேனா தெரிவித்தார்.
தன்னுடைய ஒரேயொரு மகன் அன்கித் சக்சேனா காதலித்த முஸ்லிம் பெண்ணின் குடும்பத்தால் கொல்லப்பட்டாலும், முஸ்லிம்கள் பற்றி தனக்கு எந்தவொரு மோசமான எண்ணமும் இல்லை என்பதை யஷ்பால் சக்சேனா உறுதி செய்வததன் மூலம் மத சார்ப்பு வெறுப்புணர்வுக்கு மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் கருத்தை அவர் முறியடித்துவிட்டார்.

"எங்கள் வீட்டுக்கு மேல்மாடியில் குடியிருப்போர் முஸ்லிம் குடும்பத்தினர். இந்த சோக நிகழவுக்கு பின்னர் தங்களின் வீட்டுக்கு கூட செல்லாமல், ஒரு குடும்பத்தினரைவிட மேலாக எங்களை அவர்கள் கவனித்து கொண்டனர்" என்று யஷ்பால் சக்சேனா தெரிவித்தார்.
"அவர் என்னுடைய சகோதரி. அவரை நான் எப்படி வெறுக்க முடியும்? நான் ஏன் அவரை வெறுக்க வேண்டும்?" என்று யஷ்பால் சக்சேனா கேள்வி எழுப்புகிறார்.
அன்கித் இந்த குடும்பத்திற்கு ஒரேயோரு மகன். இனி அவரது பெற்றோருக்கு வயதான காலத்தில் ஆதரவு அளிக்க யாரும் இல்லை.
பிஜேபி அரசியில்வாதிகளோ, டெல்லி அரசோ இந்த குடும்பத்திற்கு எதிர்கால ஆதரவு பற்றி எந்தவொரு வாக்குறுதியும் வழங்கவில்லை.

இந்த குடும்பத்திற்கு ஆதரவு அளிக்க பொது மக்களின் நிதி திரட்டும் பரப்புரைகள் இரண்டு நடைபெற்று வருகின்றன.
ஆனால், 'அவாரா பாயிஸ்' என்கிற நண்பர்கள் குழு தங்களுடைய நம்பிக்கையில் உண்மையாக இருந்துள்ளனர்.
தங்களுடைய நண்பரின் உருவத்தை கொண்ட டிசர்ட்டை அணிந்துகொண்டு, இந்த நண்பர்கள் குழு எல்லா விருந்தினருக்கும் இஃப்தார் விருந்தை பரிமாறினர்.
பசியோடும், தாகத்தோடும் அவதிப்படுவோரை புரிந்து கொள்வதற்கு ஒருவர் முஸ்லிம்களின் நோன்பு பற்றி விளக்கினார்.
சரியாக மாலை 7.17 மணிக்கு ஒருவர் செபம் சொல்ல தொடங்கிவிட்டார்.
மக்கள் அனைவரும் ஒன்றாக, சிறந்த சகோதர உணர்வோடு இஃப்தார் விருந்து உண்ண தொடங்கினர்.
கலவரக் காலங்களில் நாம் அனைவரும் நடக்க வேண்டிய பாதைகளை யாஷ்பால் சக்சேனா சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












