“கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும்” - எச்சரிக்கும் செயற்பாட்டளர்கள்

பெருங்கடல் வாழ்வில்தான் நம் வாழ்வும் இருக்கிறது. மனித குலம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், பெருங்கடலின் சூழலியல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிறார் எழுத்தாளர் மார்கரெட் அட்வுட்.

"கடல் மரணித்தால் மனித குலமும் மரணிக்கும் "

பட மூலாதாரம், Science Photo Library

மார்கரெட் அட்வுட் கனடா நாட்டை சேர்ந்தவர்.

கவிஞர், நாவலாசிரியர், இலக்கிய விமர்சகர் மற்றும் சூழலியல் செயற்பாட்டாளர் என பன்முக திறமை கொண்டவர் மார்கரெட் அட்வுட்.

'மனிதன் ஒன்றும் இல்லை'

'தி மொமண்ட்' எனும் அவருடைய கவிதை மனித குலத்திற்கும், சூழலியலுக்கும் உள்ள தொடர்பை அழுத்தமாக மூன்று பத்திகளில் விவரிக்கும் . 'எல்லாவற்றையும் வென்றுவிட்டதாக, எல்லாவற்றையும் சொந்தமாக்கி கொண்டதாக மனிதன் கருதுகிறான். ஆனால், இயற்கைக்கு முன்னால் மனிதன் ஒன்றும் இல்லை' என்ற பொருளில் அந்த கவிதை செல்லும்.

தண்ணீர் எடுப்பதற்காக 200 மில்லியம் மணி நேரத்தை செலவிடும் பெண்கள்

பட மூலாதாரம், ANGELA DENNIS, COURTESY OF INVISIBLE DUST

படக்குறிப்பு, தண்ணீர் எடுப்பதற்காக 200 மில்லியம் மணி நேரத்தை செலவிடும் பெண்கள் என்கிறார் மார்கரெட் அட்வுட்

அவர் சமீபத்தில் லண்டன், பிரிட்டிஷ் நூலகத்தில் நடந்த 'Under Her Eye 'மாநாட்டில் கலந்து கொண்டு சூழலியலுக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து உரையாற்றினார்.

அந்த மாநாட்டில் கடலில் கொட்டப்படும் கழிவுகள் குறித்து, "இதை தடுக்க நாம் ஏதாவது செய்ய வேண்டும். பெருங்கடலின் இறப்பும், நம் இறப்பும் வெவ்வேறானது அல்ல" என்றார்.

பருவநிலை மாற்றமும், பெண்களும்

உலகளவில் பருவநிலை மாற்றமானது பெண்களை மிக மோசமான அளவில் பாதிக்கிறது. ஆனால், பருவநிலை மாற்றம் குறித்தான உயர்மட்ட உரையாடல்களில், பெண்களின் குரல் மிக அரிதாகவே கேட்கிறது என்ற குற்றச்சாட்டு நெடு நாட்களாக உள்ளது.

இதற்காக, பெண்களின் பார்வையில் சூழலியல் பிரச்சனைகளை அணுகவே இந்த மாநாடு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

பருவநிலையின் தாக்கம் தனது பல நாவல்களில் எழுதி இருக்கிறார், தொடர்ந்து எழுதியும் வருகிறார் மார்கரெட் அட்வுட்.

இந்த மாநாட்டில் பேசிய அவர், "இப்போது நிலவும் சூழ்நிலை பெண்கள் அனுகூலமற்றதாகவே உள்ளது" என்கிறார்.

"பெண்கள் உணவு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள், குடும்பத்தை கவனித்து கொள்பவராகவும் அவர்கள் இருக்கிறார்கள். பருவநிலை வெப்பமாகும்போது, அறுவடை குறையும். பெருமழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டால், அது நம்மை அழிதொழிக்கும்" என்று தெரிவிக்கிறார்.

ஏன் பெண்கள்?

இந்த மாநாட்டில் பேசிய மொரோக்கோவின் முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஹகிமா எல் ஹைதி, உலகம் முழுவதும் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக செல்லும் நேரத்தை மேற்கோள் காட்டி பேசினார். அதாவது உலகம் முழுவதும் பெண்கள், ஒரு நாளுக்கு தோராயமாக ஏறத்தாழ 200 மில்லியன் மணி நேரம் தண்ணீர் எடுப்பதற்காகவே செயல்படுகிறார்கள்.

தண்ணீர் எடுப்பதற்காக 200 மில்லியம் மணி நேரத்தை செலவிடும் பெண்கள்

பட மூலாதாரம், EPA

இதற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார் அவர்.

பசுமை கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரோலின் லுகாஸ் சுழலியல் தொடர்பான செயற்பாட்டில் பெண்களின் பங்கு மகத்தானது என்கிறார்.

மேலும், "பருவநிலை மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் பெண்கள்தான் முதல் வரிசையில் நிற்கிறார்கள். அவர்கள் தான் கூட்டங்களை ஒருங்கிணைக்கிறார்கள் மற்றும் போராடுகிறார்கள். ஒரு தீர்வு வேண்டுமானால் அதற்கு பெண்களின் பங்களிப்பு மிக அவசியம்" என்றார் கரோலின்.

பாரிஸ் ஒப்பந்தம் 2015- ல் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஐ.நா ராஜதந்திரி கிறிஸ்டியானா, "பருவநிலை மாற்றம் தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில், போதுமான அளவிற்கு பெண்கள் இல்லை" என்றார்.

SCIENCE PHOTO LIBRARY

பட மூலாதாரம், Science Photo Library

பருவநிலை தொடர்பான கொள்கை வடிவமைப்புகளில் பெண்களின் பங்கு மிக முக்கியமான ஒன்று என்று தான் கருதுவதாக கூறுகிறார்.

மேலும் அவர், "பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் பேரழிவுகளில் மரணிப்பவர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் என்பது தற்செயலானது இல்லை" என்று தெரிவிக்கிறார்.

பிஸாஸ்டிக் கழிவுகள்

மாதவிடாயின் போது பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்கள் மற்றும் மாதவிடாய் கோப்பைகளுக்கு மாற்றான மறு சுழற்சி செய்ய கூடிய பொருட்களை பிரபலப்படுத்த வேண்டும் என்கிறார் இவ்விதமான பொருட்களை தயாரிக்கும் மூன்கப் நிறுவனத்தை சேர்ந்த காத் கிளிமென்ட்ஸ்.

பெருங்கடல்களை மனித குலம் குப்பை தொட்டியாக பயன்படுத்துகிறது. இதனை தவிர்க்க ஏதாவது ஒன்றை உடனடியாக செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது மார்கரெட் அட்வுட்டின் வாதம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: