பட்ஜெட் சிறப்புக் கட்டுரை: இந்திய ராணுவத்தின் போதாமைகள் என்னென்ன?
- எழுதியவர், ரஜ்னீஷ் குமார்
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமான தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர சலுகைக்கு செலவிடப்படுகிறது. ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான தொகை மிகவும் குறைவாகவே இருக்கும் நிலையிலும் கடந்த ஆண்டு ராணுவ பட்ஜெட்டில் 6,886 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீடு பற்றி அலசும் தொடர்.

பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைப்பகுதியில் பணிபுரிபவர்களுக்கு மோசமான உணவு வழங்கப்படுவதை எல்லை பாதுகாப்புப்படை வீர்ர் பஹதுர் யாதவ் கடந்த ஆண்டு ஜனவரி ஒன்பதாம் தேதியன்று சமூக ஊடகங்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த காணொளி ராணுவத்தின் பணிபுரிபவர்களின் நிலை மற்றும் அரசின் நிர்வாகம் பற்றிய பல கேள்விகளை எழுப்பியது.
பி.எஸ்.எஃப் எனும் எல்லை பாதுகாப்புப்படை துணை ராணுவப்படை என்றாலும்கூட இது இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர்களின் நிலைமையை பறைசாற்றுவதாக இருந்த்து.
மறுபுறத்தில் இந்தியப் பாதுகாப்பு தயார்நிலை பற்றிய அறிக்கையை சி.ஏ.ஜி கடந்த ஆண்டு ஜுலை 21ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அது, இந்திய ராணுவத்தின் தயார்நிலை பற்றிய கவலைகளை எழுப்பியது.

பட மூலாதாரம், Google
சீனா ராணுவத்தினர் பூட்டானில் டோக்கலம் எல்லையில் முகாம் அமைப்பது பற்றி இந்திய-சீன வீரர்களிடையே மோதல் போக்கு நிலவிய சமயத்தில் வெளியான சி.ஏ.ஜி அறிக்கை, இந்திய ராணுவத்தின் திறன் குறித்த கடுமையான கேள்விகளை எழுப்பியது.
ஐ.எல்-76 போக்குவரத்து விமானத்தை பராமரிப்பதில் குறைபாடுகள், பழைய போர் விமானங்கள் மற்றும் இந்திய ஏவுகணை அமைப்பின் நம்பகத்தன்மை பற்றிய கவலைகளை சி.ஏ.ஜி அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் வெளியான செய்தி ஒன்று, 'சீனா மற்றும் பாகிஸ்தானை எதிர்கொள்ள இந்திய ராணுவம் 42 கப்பல்களையும், 750 விமானங்களையும் வேண்டும் என்று கூறியது. ஆனால் மிக் -21 போன்ற பழைய விமானங்களை வைத்துக்கொண்டே இந்திய ராணுவம் இயங்குகிறது'.
1960களில் மிக்-21 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய ராணுவத்தில் இருந்து மிக்-21 விரைவில் அகற்றப்படலாம். ஆனால் ஒரு அறிக்கையின்படி, 2032 க்குள் 22 விமானங்களை மட்டுமே ராணுவம் வாங்கமுடியும்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய ராணுவத்தின் ஆயுத பலம் எவ்வளவு?
இந்தியாவிடம் இருக்கும் பழைய ராணுவ விமானங்கள் அடிக்கடி விபத்துகளால் பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட தகவல்களின்படி, அதற்கு முந்தைய நான்கு ஆண்டுகளில் 39 விமானங்கள் விபத்துக்குள்ளாகின. கடந்த செப்டம்பரில் மிக்-21 ரக விமானங்கள் இரண்டு விபத்துக்குளாகின.
சி.ஏ.ஜி அறிக்கையின்படி, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டெடில் இருந்து 80 ஏவுகணை அமைப்புகள் பெறப்பட்டன, இதில் 30 சதவீதம் ஆகாஷ் ஏவுகணை முறைமை அடிப்படையின் சோதனைகளில் தோல்வியடைந்தன.
அந்த ஏவுகணைகள் இலக்கை அடையத் தவறிவிட்டதாகவும், அவற்றின் வேகம் குறைவாக இருந்ததாகவும் சி.ஏ.ஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் முனையின் பிரச்சனை காரணமாக இரண்டு ஏவுகணைகள் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.
பரிசோதனையில் தோல்வியடைந்த ஏவுகணைகளை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சி.ஏ.ஜி அறிக்கை வெளியான பிறகு மார்ச் 2017இல் இந்திய விமானப்படை கூறியுள்ளது.
2016இல் இந்தோ-சீன எல்லையில் ஆகாஷ் ஏவுகணை நிறுவப்படுவதாக இந்திய அரசு அறிவித்திருந்ததை சுட்டிக்காட்டிய சி.ஏ.ஜி அறிக்கை, ஆனால் அந்தப் பணி இன்னும் முடியவில்லை என்று கூறியது.
இந்த அறிக்கையின்படி, இந்த ஏவுகணைகளின் தோல்வியானது சர்வதேச மதிப்பீடுகளைவிட மிகவும் அதிகம்.

பட மூலாதாரம், Getty Images
இரண்டு முனைகளில் போராட ராணுவம் தயாராக உள்ளது
பாதுகாப்புத் துறையில் இந்தியா தன்னிறைவு பெறுவது மற்றும் ஆயுதங்களை இறக்குமதி செய்வது தொடர்பான இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் திட்டத்திற்கு சி.ஏ.ஜி அறிக்கை அதிர்ச்சி ஏற்படுத்தியது என்றால் அது மிகையல்ல.
இத்தனைக்குப் பிறகும், இந்திய இராணுவம் இரு முனைகளில் ஒரே நேரத்தில் போராடத் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ராணுவத் தளபதி பிபின் ராவத் பலமுறை கூறியுள்ளார்.
எந்த அடிப்படையில் ராணுவம் இரு முனைகளிலும் போருக்குத் தயாராக இருக்கிறது என்று ராணுவ தளபதியின் இந்த கூற்று அனைவராலும் கேலி செய்யப்பட்டது.
இந்திய ராணுவத்திடம் பத்து நாட்களுக்குப் போரிடுவதற்கான ஆயுதங்கள் மட்டுமே உள்ளதாக கூறிய சி.ஏ.ஜி அறிக்கையை சீனாவும் ஆய்வு செய்திருக்கும்.
டோக்லம் பகுதியில் இந்தியாவுடன் பிரச்சினை ஏற்பட்ட சமயத்தில் இந்திய ராணுவம் பின்வாங்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று சீனா தொடர்ந்து கூறிவந்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைகழக்கத்தின் தெற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் சபிடா பாண்டே இதுபற்றிக் கூறுகையில், 'எந்த நாடுமே இரண்டு முனைகளில் போரை நடத்துவது என்பது எளிதானதல்ல' என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்திய ராணுவத் தளபதியின் கூற்று ஒருபுறம் என்றால், மறுபுறம், ராணுவத்தின் தயார்நிலை பற்றிக் கேள்விகள் எழுகின்றன. இதற்கிடையில், மத்திய அரசு பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கீடு செய்யும் தொகை அதிகம் என்றும் சர்ச்சைகள் எழுகின்றன.
இந்தியாவின் ஒருபுறம் சீனாவும் மறுபுறம் பாகிஸ்தானும் இருக்கும்போது, ராணுவத்திற்கு ஒதுக்கப்படும் தொகையும் குறைக்கப்பட்டால் இந்தியாவின் நிலை என்னவாகும்?
கடந்த நிதியாண்டின் மொத்த பட்ஜெட் தொகையில் 12.2 சதவிகிதம் பாதுகாப்புத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளில் ராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டதில் இதுதான் மிகவும் குறைவான சதவிகிதம்.
1988 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.18% பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது, அதற்குபிறகு அது தொடர்ந்து குறைந்து வருகிறது.
முந்தைய வரவு செலவு திட்டத்தில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவிகிதம் பாதுகாப்புக்காக செலவழிக்கப்பட்டது, அதே நேரத்தில் உலக அளவில் இது நிலை 2 முதல் 2.25 சதவிகிதமாக இருக்கிறது.
இந்தியாவுடன் ஒப்பிடுகையில், சீனா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1% சதவிகிதம் பாதுகாப்புக்காக செலவழிக்கிறது என்றால், பாகிஸ்தான் 2.36% செலவழிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
சீனாவுடன் ஒப்பிடுகையில் இந்திய ராணுவத்தின் நிலை என்ன?
இந்திய ராணுவம் நவீனமயமாக்கப்படுவதற்கான ஒதுக்கீடு 0.9% அளவு குறைக்கப்பட்டுள்ளது, இதுவே கடற்படையில் பற்றாக்குறை 12% விமானப்படையில் பற்றாக்குறை 6.4% ஆகும் என்று பாதுகாப்பு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு நிறுவனத்தின் (Institute for Defense Studies and Analysis) லக்ஷ்மண் குமார் பெஹரா தமது பேட்டியில் கூறியுள்ளார்.
போர் விமானங்கள், துப்பாக்கிகள், ஆயுதங்கள், குண்டு துளைக்காத கவசங்கள், மிதவைகள், ஏவுகணைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் போர்க்கப்பல்களின் பற்றாக்குறையால் இந்திய ராணுவம் ஏற்கனவே திண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
"சீனாவின் ராணுவ வலிமையுடன் ஒப்பிட்டால் இந்தியா மிகவும் பின்தங்கியிருக்கிறது. இந்தியாவைவிட பத்து லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள், ஐந்து மடங்கு அதிகமான நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் டாங்கிகள் சீனாவிடம் உள்ளன" என்று த டிப்ளமேட்டின் அறிக்கை கூறுகிறது.
"இந்தியாவைவிட இரு மடங்கு போர் விமானங்கள் மற்றும் போர்க் கப்பல்கள் சீனாவிடம் உள்ளன. அதேபோல் இந்தியாவைவிட மும்மடங்கு அணு ஆயுதங்கள் உள்ளன. இதைத்தவிர சீனாவின் பாதுகாப்புத் துறை பட்ஜெட் 152 பில்லியன் டாலர்கள் என்றால் இந்தியாவின் ராணுவ பட்ஜெட்டோ 51 பில்லியன் டாலர்கள்தான்.
இந்த ஆண்டு இந்திய பொருளாதாரத்தின் நிலை சற்று மந்தமாகவே இருப்பதால், பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு கூடுதல் ஒதுக்கீடு செய்யும் நிலையில் அரசு இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
ப்ளூம்பர்க் அறிக்கையின்படி, இந்தியாவின் பாதுகாப்புத்துறை பட்ஜெட்டில் 80 சதவீதத்திற்கும் அதிகமானத் தொகை ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதர சலுகைக்கு செலவிடப்படுகிறது.
இதன் பொருள் என்ன? ராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான தொகை மிகவும் குறைவாகவே இருக்கிறது. ஆனால் இந்த நிலையிலும் ராணுவ பட்ஜெட்டில் 6,886 கோடி ரூபாய் கடந்த ஆண்டு பயன்படுத்தப்படவில்லை!

பட மூலாதாரம், Getty Images
ஆயுதங்களை அதிகளவு இறக்குமதி செய்யும் இந்தியா
ராணுவத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக லெப்டினென்ட் ஜெனரல் ஷேகெட்கரின் தலைமையில் குழு ஒன்றை அமைத்தார் தற்போதைய அரசின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர்.
படைகளின் எண்ணிக்கையை குறைப்பது, ராணுவ செலவினங்களை குறைப்பது உட்பட இந்த குழு பரிந்துரைத்த 99 யோசனைகளில், 65ஐ 2019ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்துவதாக அரசு கூறியிருக்கிறது. தற்போது, இந்திய ராணுவத்தில் சுமார் 14 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.
இப்போது பிரதமர் மோதியின் அரசு பாதுகாப்புத் துறையில் 100 சதவிகித அன்னிய முதலீட்டிற்கு கதவைத் திறந்துவிட்டுள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையின்படி, கடந்த 14 ஆண்டுகளில், இந்தியாவின் பாதுகாப்புத் துறை 5 மில்லியன் டாலர் மட்டுமே அன்னிய முதலீட்டை பெற்றுள்ளது, ஆனால், தொலைத்தொடர்பு மற்றும் ஆட்டோமொபைல் தொழில்கள் தலா பத்து பில்லியன் டாலர் அன்னிய முதலீட்டைப் பெற்றுள்ளன.
உலகின் முன்னணி ஆயுத இறக்குமதியாளர்களில் இந்தியாவும் ஒன்று. இந்தியா தனது ஆயுதங்களின் தேவைகளில் 60 சதவிகிதத்தை இன்னமும் இறக்குமதி செய்கிறது

பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் ஆயுத இறக்குமதி
ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆய்வு நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2010-2014 காலகட்டத்தில் உலக ஆயுத இறக்குமதியில் இந்தியாவின் பங்களிப்பு 15 சதவீதம் ஆகும். இத்துடன் சேர்த்து பார்த்தால் இந்தியா ஆயுத இறக்குமதியில் முதலிடம் வகிக்கிறது.
மறுபுறத்தில், ஆயுத ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸ், ஜெர்மனிக்கு அடுத்து சீனா உலகின் மூன்றாவது பெரிய ஆயுத ஏற்றுமதியாளராக உருவெடுத்திருக்கிறது. பட்டியலில் இங்கிலாந்தையும் சீனா பின்தள்ளிவிட்டது.
நாட்டிற்கு தேவைப்படும் ஆயுதங்களில் 70 சதவீதத்தை உள்நாட்டிலேயே தயாரிக்கவேண்டும் என்ற இலக்கை 2005 ம் ஆண்டிலேயே நிர்ணயித்த இந்தியா, தற்போது 35-40 சதவீதத்தை மட்டுமே எட்டியிருக்கிறது.
உலகம் முழுவதும் ராணுவ செலவுகள் ஆண்டுதோறும் 1.2% அதிகரித்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த அறிக்கையின்படி, உலகம் முழுவதும் ராணுவத்திற்காக மேற்கொள்ளப்படும் செலவில் 43 சதவீதம் அளவு அமெரிக்கா மட்டுமே செய்து உலக நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளது.
அடுத்த இடங்களில் ஐ.நா பாதுகாப்பு சபையின் நான்கு நிரந்தர உறுப்பு நாடுகள் இருக்கின்றன. இருந்தாலும் ஐ.நா பாதுகாப்பு சபையின் பிற உறுப்பு நாடுகள் எதுவுமே அமெரிக்காவிற்கு அருகில் கூட வரவில்லை.

பட மூலாதாரம், AFP
சீனா ஏழு சதவிகிதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதையடுத்து, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ரஷ்யாவின் பங்கு நான்கு சதவிகிதமாக இருக்கிறது.
இந்த அறிக்கையின்படி, சீனாவின் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 23 லட்சம் என்ற மாபெரும் அளவில் இருந்தபோதிலும், சீனாவின் ராணுவ செலவினங்கள் அமெரிக்காவை விட மிகவும் குறைவே.
அமெரிக்க ராணுவ செலவினத்திற்கும், சீனாவின் ராணுவ செலவிற்குமான மிகப்பெரிய வித்தியாசத்தை புரிந்துகொள்வது எளிதுதான்.
அமெரிக்காவைப் போல சர்வதேச உதவிக்கும், ராணுவத் தலையீட்டிற்கும் சீனா தனது படைகளை பயன்படுத்துவதில்லை.
முக்கியமாக அமெரிக்காவைப் போன்று உலகம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான ராணுவ தளங்களை சீனா வைத்துக் கொள்ளவில்லை. தேசிய மற்றும் பிராந்திய நடவடிக்கைகளுக்கு மட்டுமே சீனா இதுவரை தனது ராணுவத்தைப் பயன்படுத்தியிருக்கிறது.
காஷ்மீர் மற்றும் சீனாவுடன் இந்தியாவுக்கு எப்போதுமே பிரச்சனை தொடர்கிறது. ஆனால் சீனாவோ தனது ராணுவத்தை இந்திய பெருங்கடல், தென்சீனக் கடல், ஆர்க்டிக் என விரிவுபடுத்தியுள்ளதை பல வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பிரதமர் மோதி தலைமையிலான அரசு பிப்ரவரி முதல் நாளன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, இந்த சவால்களை புறக்கணிக்க முடியாது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













