இந்தியா - பாகிஸ்தான் போரின்போது சீனத் தலையீட்டிற்கு அஞ்சிய இந்தியா

பட மூலாதாரம், SHASTRI MEMORIAL
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி
1965 செப்டம்பர் 26, டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்களிடம் உரையாற்றிய இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மிகவும் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தார்.
சாஸ்திரி கூறினார், "சர்தார் அயூப் வீறுநடை போட்டு டெல்லிக்கு வருவதாக அறிவித்திருந்தார். அவர் ஒரு பெரிய மனிதர், போற்றப்படக்கூடியவர், அவர் டெல்லிவரை நடந்து வரவேண்டாம் என்பதற்காக நமது வீரர்களை லாகூருக்கு அனுப்பி மரியாதை செய்தோம்."
சாஸ்திரி கிண்டல்
1965 யுத்தத்திற்கு பிறகு இந்தியத் தலைமையின் தன்னம்பிக்கையே சாஸ்திரியை இப்படி பேச வைத்தது. இப்படி கிண்டலாக பேசிய சாஸ்திரியின் குள்ளமான உருவத்தையும், குரலையும் அயூப் கான் ஏற்கனவே பரிகாசித்திருந்தார். மனிதர்களின் வெளித்தோற்றத்தை வைத்து அவர்களை மதிப்பிடும் வழக்கத்தை கொண்டிருந்தார் அயூப் கான்.

பட மூலாதாரம், USI
பாகிஸ்தானில் பணிபுரிந்த இந்திய தூதரக ஹை கமிஷனர் ஷங்கர் பாஜ்பாய் நினைவுகூர்கிறார்: "இந்தியா பலவீனமாக இருப்பதாக அயூப் கான் நினைத்தார். இந்தியர்கள் போரிடுவதை அறியாதவர்கள் என்பதோடு அரசியல் தலைமையும் பலவீனமாக உள்ளது என்று அவர் கருதினார். டெல்லிக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த அயூப் கான், நேருவின் மரணத்திற்கு பிறகு, அதனை ரத்து செய்துவிட்டார். அங்குபோய் யாரைப் பார்த்து பேசுவது என்று அவர் கிண்டல் செய்தார்."
"நீங்கள் வரவேண்டாம், நாங்களே வருகிறோம் என்று சாஸ்திரி சொன்னார்.
காஹிரா சென்றிருந்த சாஸ்திரி திரும்பி வரும் வழியில் கராச்சியில் ஒரு நாள் தங்கினார். சாஸ்திரியை விமான நிலையத்தில் வழியனுப்ப வந்த அயூப் கான், 'இவருடன் பேசுவதில் எந்தவித பயனுமில்லை' என்று சைகை மூலம் தனது சகாக்களிடம் சொன்னதை நான் நேரிடையாக பார்த்தேன்."
யுத்தத்தின் சூத்திரதாரி பூட்டோ
இதைத்தவிர மற்றொரு மாபெரும் தவறையும் ஆயூப் கான் செய்தார். காஷ்மீரில் தாக்குதல் நடத்தினால், இந்தியா சர்வதேச எல்லைக் கோட்டை தாண்டிவராது என்று அவரது அனுமானம் பொய்யானது.
கொள்கை ஆராய்ச்சி மையத்தின் ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார், "தங்கள் பலத்தின்மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார்கள் பாகிஸ்தான் தரப்பினர் என்பதும் அயூப் கான் ராணுவ ஜென்ரல் என்பதும் இதற்கு காரணம். நேருவின் மரணத்திற்கு பிறகு புதிய பிரதமர் வந்துள்ளார், அவருக்கு போரிடும் திறனும் தைரியமும் இருக்காது, அதிலும் குறிப்பாக, 1962 பின்னடைவுக்குப் பிறகு என்று அவர் நினைத்தார்.''

பட மூலாதாரம், Getty Images
ஸ்ரீநாத் ராகவன் மேலும் கூறுகிறார், "அயூப் கானின் வெளியுறவு கொள்கைகளுக்கான தலைமை ஆலோசகராக இருந்த ஜூல்ஃபிகார் அலி பூட்டோ வழங்கிய ஆலோசனை இது - இந்த நேரத்தில் இந்தியாவின்மீது அழுத்தம் கொடுத்தால், காஷ்மீர் பிரச்சினை நமக்கு சாதகமாக முடியும்."
பிரிகேடியர் ஏ.ஏ.கே செளத்ரி '1965 செப்டம்பர்' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார், "போருக்கு முன்னதாக போரின் சாதக பாதகங்கள் பற்றி ஆலோசனை நடத்தவில்லையா என்று போர் நடந்து பல ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் அமைச்சர் ஒருவர் அயூப் கானிடம் கேட்டார்.
அதற்கு, 'என்னுடைய பலவீனமான பக்கத்தை மீண்டும் நினைவுபடுத்தவேண்டாம்' என்று பெருமூச்சுடன், குரல் மங்கிய நிலையில் அவர் பதிலளித்தாக கூறப்படுகிறது."
பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நைய்யார் 1965 போருக்கு பிறகு பாகிஸ்தான் சென்றிருந்தார். அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார், "இந்த போரில் இறுதியில் வெற்றியடைய முடியாது என்பது நன்றாக தெரிந்த நிலையில் நீங்கள் ஏன் இந்த முடிவை எடுத்தீர்கள் என்று நான் அயூப் கானிடம் கேட்டேன். அதற்கு அவர், இந்த கேள்வியை என்னிடம் கேட்காதே, பூட்டோவை சந்திக்கும்போது அவரிடமே கேள் என்று சொன்னார்".

பூட்டோவின் உரை
பிறகு பூட்டோவுடனான சந்திப்பு குறித்தும் சொல்கிறார் குல்தீப் நைய்யார், "இந்தியாவுடனான போரை நடத்தியது பூட்டோ என்று அனைவரும் சொல்கிறார்களே என்று கேட்டதற்கு, அது குறித்து கவலையில்லை என்று பூட்டோ பதிலளித்தார்.
இந்தியாவை வெற்றிக் கொள்வது என்றால் இதைவிட சிறந்த சந்தர்ப்பம் வேறு ஏதும் இல்லை. இன்னும் சிறிது காலத்தில் இந்தியாவில் ஆயுத தொழிற்சாலைகள் அதிகமாக உருவாகும் சூழல் உள்ள நிலையில் இதற்கு பிறகு உங்களை எதிர்ப்பது சாத்தியமற்றதாகிவிடும்.
இந்த காரணங்களைத்தவிர, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு பாகிஸ்தான் படையினர் சென்றால், அங்குள்ள மக்கள் ஆதரவளிப்பார்கள் என்று நினைத்தேன், ஆனால் என் கணக்கு தப்புக்கணக்காகிவிட்டது என்றார் பூட்டோ."
இந்தியாவுக்கு எதிராக போர் நடத்தவேண்டும் என்று அயூப் கானை வலியுறுத்திய பூட்டோவுக்கு, பிறகு ஐக்கிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது பெரும் அவமானத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் அவருடைய பேச்சு நடுநிலை நாடுகளை ஏமாற்றமடைய செய்தது.
ஆனால், பூட்டோவின் அகங்காரம் மற்றும் அலட்சியத்தை அவரது பேச்சு வெளிப்படுத்துவதாக பாகிஸ்தானின் மக்கள் கருதினார்கள்.

பட மூலாதாரம், GOHAR AYUB KHAN
புறக்கணிக்கப்பட்ட சங்கேத குறியீடு
அயூப் கான் பற்றிய புத்தகம் எழுதிய அல்தாஃப் கெளஹர் கூறுகிறார், "டெல்லியில் பாகிஸ்தான் உயர் ஆணையர் மீயா அர்ஷத் ஹுஸைன், துருக்கி தூதரகம் வாயிலாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகத்திற்கு சங்கேத குறியீடு மூலம் 'செப்டம்பர் ஆறாம் தேதி பாகிஸ்தானை இந்தியா தாக்கப்போகிறது' என்ற ரகசிய செய்தியை அனுப்பினார். விதிகள்படி, வெளிநாட்டு தூதர்களிடம் இருந்து வரும் சங்கேத குறியீட்டு செய்திகள் அனைத்தையும் அதிபரிடம் காண்பிக்க வேண்டியது கட்டாயம்.
ஆனால், விரைவில் உணர்ச்சி வசப்படும் அர்ஷத் ஹூஸைன் காரணமில்லாமல் அச்சப்பட்டிருக்கலாம் என்று கருதிய பாகிஸ்தான் வெளியுறவு செயலர் அஜீஜ் அஹ்மத், இந்த செய்தி அயூப் கானின் காதுக்கு செல்லாமல் தடுத்துவிட்டார்."
"செப்டம்பர் 6 ம் தேதி 4 மணி அளவில் இந்திய தாக்குதல் பற்றிய செய்தி பாகிஸ்தான் அதிபர் அயூப் கானுக்கு கிடைத்தது. அதிபரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாகிஸ்தானிய விமானப்படை அதிகாரி ஒருவர், இந்திய வீரர்கள் லாகூர் நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதாக கூறினார்.
போரின் போது உபவாசம்
போருக்கு பின்னர் பாகிஸ்தானின் நிலைமை இப்படியிருக்க இந்தியாவிலோ பிரதமர் சாஸ்திரி மீது நேர்மறையான கருத்து தோன்றியது. நாடு, நேருவின் மரணத்தில் இருந்து மீண்டு வருவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த வேளையில், கட்சியில் சாஸ்திரியின் செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமாக பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், BHARATRAKSHAK.COM
இந்திய ராணுவத்தின் மேற்கத்திய கமாண்ட் தலைவர் ஜெனரல் ஹர்பக்ஷ் சிங் கூறுகிறார், "சிறிய உயரத்தை கொண்ட மனிதர் எடுத்த மிகப்பெரிய போர் முடிவு லாகூர் நோக்கி செல்வது". இந்தப் போரில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களையும் ஒத்த கருத்துடன் இணைத்து செல்வதற்கான முயற்சிகளை பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி எடுத்தார்.
லால் பகதூர் சாஸ்திரியின் மகன் அனில் சாஸ்திரி நினைவுகூர்கிறார், "1965ஆம் ஆண்டு யுத்தத்தின் போது, அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன், பிரதமர் சாஸ்திரிக்கு அச்சுறுத்தல் விடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக போரிட்டால், பி.எல்.480 கீழ் இந்தியாவிற்கு கொடுக்கப்படும் சிவப்பு கோதுமையை நிறுத்தி விடப்போவதாக கூறினார்.
நம் நாட்டில் கோதுமை இருப்பு அதிகமாக இல்லாத நேரம் அது. சுயமரியாதை உணர்வு கொண்ட சாஸ்திரி இந்த அச்சுறுத்தலை கேட்டு மிகவும் வருத்தமடைந்தார்."

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபரின் இந்த அச்சுறுத்தலுக்கு பிறகு சஸ்திரி இந்திய மக்களுக்கு ஒரு கோரிக்கை வைத்தார்.
'ஒரு வாரத்திற்கு தினசரி ஒரு வேளை உணவை துறந்து உபவாசம் இருப்போம். அமெரிக்காவில் இருந்து வரும் கோதுமை வரத்து இல்லையென்றாலும் பற்றாக்குறை ஏற்படாமல் உறுதியாக நிற்போம்'.
அனில் சாஸ்திரி மேலும் கூறுகிறார், "ஆனால் நாட்டு மக்களிடையே இந்த கோரிக்கையை வைப்பதற்கு முன்னதாக என் அம்மா லலிதா சாஸ்திரியிடம் ஒரு வேண்டுதலை வைத்தார் அப்பா.
'இன்று இரவு உணவை நீ தயாரிக்காதே, நாளை காலை நம் நாட்டு மக்களிடம் இதே கோரிக்கையை நான் வைக்கப்போகிறேன். அதற்கு முன்னால், நம் வீட்டு குழந்தைகள் ஒருவேளை உணவு இல்லாமல் பசியுடன் இருக்க முடியுமா இல்லையா என்று தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்'.
அப்பாவின் வார்த்தையை அம்மா ஏற்றுக் கொண்டார். நாங்கள் ஒருவேளை பசியை தாங்கிக் கொள்ளமுடியும் என்பதை பார்த்த அப்பா, அதன்பிறகே, ஒருவேளை உபவாச கோரிக்கையை மக்களின் முன்வைத்தார்."

பட மூலாதாரம், SHASTRI MEMORIAL
தவறான ஆலோசனை
'கட்ச்-டூ-டாஷ்கண்ட்' என்ற புத்தகத்தை எழுதிய பாரூக் பாஜ்வாவின் கருத்தின்படி, இந்திய அரசின் சில துறைகள் சிறப்பாக செயல்பட்டால் வேறு சில சுமாராகவே செயல்பட்டன. பாதுகாப்பு மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டாலும், இரண்டும் மிச சிறப்பாக வேலை செய்தன என்று கூறினால் அது தவறு என்கிறார் அவர்.
இந்தப் போரில், உலக நாடுகளில் பல இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததால், வெளியுறவு அமைச்சகத்தின் பங்கும் முக்கியமானதாக இருந்தது.
இந்தியாவின் செயல்பாடுகள் கட்டுக்குள் இருந்ததாகவே கருதுகின்றனர் ராணுவ பார்வையாளர்கள். இந்தியா, கிழக்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்திருக்கமுடியும் என்பது அவர்களின் கோணம்.

ஆனால் யுத்தத்தில் சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கலாம் என்ற அச்சமே கிழக்கு பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதில் இருந்து இந்தியாவை தடுத்தது.
போரின் இறுதிக் கட்டத்தில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளுமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது.
அப்போது, இந்த கட்டத்தில் போரை தொடர்ந்து நடத்துவதில் இந்தியாவிற்கு அனுகூலம் இருக்கிறதா என்று ராணுவத் தளபதி ஜெனரல் செளத்ரியிடம் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆலோசித்தார்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம் என்றே ஜெனரல் செளத்ரி கூறினார். ஆயுத இருப்பு குறைவதாக செளத்ரி கருதினார். ஆனால், 1965 போரில் இந்தியாவின் 14% ஆயுதங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












