நம்பிக்கை வாக்கெடுப்புக்குத் தடை: எடப்பாடி அரசுக்கு நெருக்கடியா, ஆசுவாசமா?

தினகரன் தரப்பைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு யாருக்கு சாதகம், யாருக்குப் பாதகம் என்பது அரசியல் வட்டாரத்தில் விடைகாண்பதற்கு கடினமான விவாதத்தைக் கிளப்பிவிட்டிருக்கிறது.
தகுதி நீக்கத்துக்கு உடனடியாகத் தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம் அதே நேரத்தில், அதை சாதகமாக்கிக்கொண்டு தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் இல்லாமலே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி முடித்துவிடுகிற வாய்ப்பையும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு மறுத்துள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் இடங்கள் காலியாகிவிட்டதாக அறிவிக்கவும்
இரண்டு வார காலத்துக்கு விதிக்கப்பட்டத் தடை அரசியல் நெருக்கடிகளில் சிக்கியுள்ள அரசு மூச்சுவிடுவதற்கு கிடைத்த வாய்ப்பாக சிலர் கருதுகிறார்கள். வேறு சிலரோ எதிரணி எம்.எல்.ஏ.க்களை நினைத்தபடி நீக்கிவிட்டு வாக்கெடுப்பு நடத்த முடியாமல் போனது அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவாக கருதுகிறார்கள்.
பல லட்சம் கட்டணம் வாங்கும் டில்லி வழக்குரைஞர்களை வைத்து அரசியல் கட்சிகள் நடத்திய சட்டமோதலின் முதல் சுற்று யாருக்கும் உறுதியான, விவாதத்துக்கு அப்பாற்பட்ட முன்னிலையைத் தந்துவிடவில்லைதான். ஆனால், அடுத்த சில மாதங்களில் தமிழக அரசியல் எந்த திசையில் பயணிக்கும், மாநில அரசின் ஆயுள் எப்படி இருக்கும் என்று கணிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது.

தற்காலிக நிம்மதி
இது உண்மையில் தமிழக அரசியலை எப்படி நகர்த்தும் எனக் கேட்டபோது பிபிசிக்குப் பதிலளித்த திமுக செய்தித்தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "இது எடப்பாடிப் பழனிச்சாமிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு நிம்மதியைத் தந்திருக்கும். ஆனால், இது நிரந்தர நிம்மதி அல்ல," என்றார். இதனால், அரசுக்கு நிரந்தர ஸ்திரத்தன்மையெல்லாம் வந்துவிடாது என்கிறார் அவர்.
நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையை நீதிமன்றம் எடுத்துக்கொள்வது சரியா என்று கேட்டபோது, சட்டமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட்டு தீர்ப்பு வழங்குவதற்குப் பல முன்னுதாரணங்கள் உள்ளன என்று கூறிய ராதாகிருஷ்ணன் அதேநேரம் "ஆளுமையும், மனப்போக்கும், சட்ட நிபுணத்துவமும் இருந்தால் சபாநாயகர் நீதிமன்ற உத்தரவை மீற முடியும். இதெல்லாம் சபாநாயகர் தனபாலுக்கு இருக்குமா தெரியவில்லை," என்றார்.
முதல்வர் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தெரிவித்து தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் அளித்தாலும், சட்டமன்றத்தில் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரவேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடவில்லை.
இந் நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி திமுக உயர்நீதிமன்றத்தை நாடியது.
நீதிமன்ற உத்தரவால் ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளவேண்டிய தேவை ஏற்பட்டிருந்தால் அரசு தப்பிப் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாகவே இருந்தது.
இந்நிலையில் 18 பேரின் தகுதி நீக்கம், அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வதற்கான ஒரு குறுக்கு வழியை அளித்தது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
இடைத் தேர்தலை எதிர்கொள்வது அரசுக்கு எளிதா?
அது வெற்றி பெற்றிருந்தால்கூட அரசு சில மாதங்களில் ஏற்கெனவே காலியாக இருக்கிற ஆர்.கே. நகரையும் சேர்த்து 19 தொகுதிகளில் இடைத் தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலை வந்திருக்கும். தற்போதுள்ள நிலையல் இந்த 19 என்ற எண்ணிக்கை அரசின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போதுமானது.

தற்போது நிலவும் பொது மன நிலையில், அதிமுக வாக்குகள் பிளவுபட்டுள்ள சூழலில், இத்தனை தொகுதிகளில் இடைத் தேர்தலை எதிர்கொள்வது அரசுக்கு அவ்வளவு எளிதாக இருந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது.
ஆனால், நீதிமன்றம் 18 எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தை திரிசங்கு நிலையில் நிறுத்தியிருக்கிறது. உடனடியாக அவர்கள் தங்கள் பதவியையும் திரும்பப்பெறவும் முடியாது, அதே நேரம் அவர்களது இடத்துக்கான தேர்தலை சந்திக்கும் நெருக்கடியும் அரசுக்கு இருக்காது.
தொடர்புடைய செய்திகள்:
இது அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியா இல்லையா என்று மூத்த பத்திரிகையாளர் ப.திருமாவேலனிடம் கருத்துக் கேட்டபோது அவர் "இல்லை" என்றார்.
"நம்பிக்கை வாக்கெடுப்பு கோர நீதிமன்றம் தடைவிதிக்கும் என்பது அரசு எதிர்பார்க்காத ஒன்று. சபாநாயகரின் முடிவில் தலையிடமுடியாது என்று நீதிமன்றம் சொல்லும் என்பதுதான் அவர்கள் நினைத்தது. அதற்கு மாறாக, முதல்முறையாக நீதிமன்றம் இந்த விஷயத்தில் சபாநாயகருக்கும், முதல்வருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது" என்றார் அவர்.
"இந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமில்லாமல் அதிமுக சின்னத்தில் ஜெயித்த அதிமுக சாராத எம்.எல்.ஏ.க்கள் சிலர் ஏற்கெனவே அரசுக்கு எதிராக உள்ளனர்; அதிமுக எம்.எல்.ஏ. மதுரை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தை விமர்சித்துள்ளார். அவருக்கு மேலும் சில எம்.எல்.ஏ.க்களிடம் செல்வாக்கு உள்ளது. எனவே, உடனே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி முடிக்கமுடியாமல் போனது அரசுக்குப் பின்னடைவுதான். இரண்டு மாதத்துக்கு மேல் இந்த அரசு நீடிக்கும் வாய்ப்பு இல்லை," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவது தொடர்பான விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவது சரியான முன்னுதாரணமா என்று அவரிடம் கேட்டபோது, "தவறான நடவடிக்கைகளை எடுக்கும் அரசு, அதை சரிசெய்யாத சபாநாயகர், நடவடிக்கை எடுக்க மறுக்கும் ஆளுநர், இதையெல்லாம் மேலிருந்து ஆட்டிவைக்கும் மத்திய அரசு, இவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்க்கும் ரப்பர் ஸ்டாம்பாக குடியரசுத் தலைவர் என்ற நிலை இருக்கும்போது, நீதிமன்றம் தலையிடுவதைத் தவிர வேறு வழியில்லையே," என்றார் அவர்.
அனுபவமின்மை
அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கவர்னரிடம் கடிதம் கொடுத்தால், அவர்கள் பதவியையே சபாநாயகர் பறித்துவிட்டார். அதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் சென்றால், தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடியும் அரசுக்கு உடனடியாக இல்லாமல் போகிறது என்பது மற்றொரு கருத்து.
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுகவின் தினகரன் தரப்பு நீதிமன்றத்தை நாடியது நிச்சயமாக அவர்கள் முன் இருந்த ஒரே சட்டவாய்ப்புதான்.
ஆனால், அதுதான் அவர்கள் முன் இருந்த ஒரே அரசியல் வாய்ப்பா, வேறெப்படி அவர்கள் செயல்பட்டிருக்க முடியும் என்று கேட்டபோது, அவர்கள் தரப்பில் அரசியல் அனுபவமும் சாதுர்யமும் மிக்க தலைவர்கள் இல்லாதால் அவர்களால் சரியான அரசியல் முடிவுகளை எடுக்க முடியாமல் போய்விட்டது. கூட்டம் கூட்டுவதும், மேடையில் பேசுவதும் மட்டும் அரசியல் நடத்தப் போதுமானது அல்ல என்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
பிற செய்திகள்
- 'கிம் ஜாங் உன்' மீம்ஸ், ஏவுகணை சோதனை - வடகொரியா சென்ற பெங்களூரு எஃப் சி வீரரின் சுவாரஸ்ய அனுபவம்.
- தாய்மை, உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு உருக்கமான திறந்த கடிதம் எழுதிய செரீனா வில்லியம்ஸ்!
- பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இந்திய பெண், கருக்கலைப்புக்குப் பிறகு ஆபத்தான நிலையில்
- கொல்கத்தா கிரிக்கெட்: இந்தியாவின் அசத்தல் வெற்றி எப்படி சாத்தியமானது?
- 'மெர்சல்': இந்தியா முழுவதும் வைரலாகும் முன்னோட்டக் காட்சி
- கெஜ்ரிவாலிடம் கமல்ஹாசன் அரசியல் ஆலோசனை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












