தாய்மை, உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு உருக்கமான திறந்த கடிதம் எழுதிய செரீனா வில்லியம்ஸ்!

செரீனா

சமீபத்தில் தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த பிரபல டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், தாய்மை மற்றும் உடல் தோற்றம் குறித்து தனது தாய்க்கு திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தான் எழுதிய பதிவு ஒன்றில், "எனக்கு தெரிந்ததிலேயே மிகவும் வலிமையான பெண்" என்று செரீனா வில்லியம்ஸ் தனது தாயைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

தனது உடல் தோற்றத்தின் காரணமாக தான் ஆண் என்று அழைக்கப்பட்டபோது மற்றும் போதை மருந்து உட்கொண்டதாக கூறப்பட்டபோதும் அச்சூழ்நிலையை தனது தாய் கம்பீரமாக கையாண்டதாக பெருமையுடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

35 வயதான செரீனாவுக்கு சமீபத்தில் அலெக்ஸிஸ் ஒலிம்பியா ஒஹானின் என்று பெயரிடப்பட்டுள்ள பெண் குழந்தை பிறந்துள்ளது. செரினாவின் கணவர் ரெட்டிட் என்னும் சமூக வலைதளத்தின் இணை நிறுவனரான அலெக்ஸிஸ் ஒஹானின் ஆவார்.

செரீனா குழந்தை

"அவள் என்னுடைய கைகள் மற்றும் கால்களை வைத்துள்ளாள்! மிகச் சரியாக என்னைப் போன்றே வலிமை, தசை, சக்தி, உணர்ச்சிமிக்க கைகள் மற்றும் உடலை கொண்டிருக்கிறாள்" என்று தனது மகளை பற்றி செரீனா வில்லியம்ஸ் எழுதியுள்ளார்.

மற்றொரு பிரபல டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷரபோவா தனது சமீபத்திய சுயசரிதையில், செரீனா "தடிமனான கைகள் மற்றும் தடிமனான கால்களை கொண்டிருந்ததாக" எழுதியதன் காரணமாகவே அதற்கு பதிலளிக்கும் வகையில் செரீனா இவ்வாறு எழுதியுள்ளதாக கூறுகின்றனர்.

தான் மரியா ஷரபோவாவுக்கு நேரடியாக பதில் கூறுவதாக குறிப்பிடாத செரீனா, "நான் கடினமாக உழைக்கிறேன், நான் இந்த கெட்ட சரீரத்துடன் பிறந்தேன், அதனால் பெருமையும் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

"ஆனால் என் தாயே, ஒரு கறுப்புப் பெண்ணின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உணர்வை அறியாமலே இருந்த ஒவ்வொருவரையும் நீங்கள் எப்படி சமாளித்தீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை".

செரீனா தாய்

பட மூலாதாரம், Getty Images

"நாங்கள் வளைந்த இடுப்புடைய, தசையுள்ள, உயரமான, சிறிய என்று சராசரியான அனைத்தையும் உடையவர்கள்; நாங்கள் பெண்கள். அதனால் பெருமையும் கொள்கிறோம்" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"ஒரு நன்மையைப் பெறுவதற்காக, நேர்மையற்ற முறையில் நடந்து கொள்ளக் கூடாது என்பதில் நான் எப்பொழுதும் மிகுந்த நேர்மையுடன் இருந்தேன்" என்று தான் போதை மருந்து விவகாரத்தில் சிக்கியது குறித்தும் அவர் எழுதியுள்ளார்.

ஒரு தடை செய்யப்பட்ட பொருளை உட்கொண்டதாக கண்டுபிடிக்கப்பட்டதால் மரியா ஷரபோவா 15 மாதங்களுக்கு டென்னிஸ் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டார்.

செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸின் பயிற்சியாளர் மற்றும் தாயான ஒரசின் ப்ரைஸ், செரீனாவின் இந்த கடிதம் "அனைத்து பெண்களுக்கும் உரிய அழகான ஒன்று " என்று தனது ட்விட்டர் கணக்கு மூலமாக பதிலளித்துள்ளார்.

23 ஒற்றையர் பட்டங்கள், 14 இரட்டையர் பட்டங்கள் மற்றும் இரண்டு கலப்பு இரட்டையர் பட்டங்கள் என 39 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை செரீனா வில்லியம்ஸ் இதுவரை வென்றுள்ளார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஆனால், தனது இளம் வயது முதலே தன்னுடைய உடல் தோற்றம் குறித்த கேள்விகளுக்கு எதிர்கொள்ள வேண்டியிருந்த நிலை, தனது குழந்தைக்கு ஏற்பட்டு விடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

"என்னுடைய 15-ஆவது வயதிலிருந்து எதிர்கொண்டவைகளை என்னுடைய குழந்தையும் எதிர்கொண்டால் அதை நான் எப்படி அணுகுவேன் என்று தனக்கு தெரியவில்லை" என்று செரீனா எழுதியுள்ளார்.

"நான் உங்களை போன்று மென்மையாகவும், வலிமையாகவும் இருக்கிறேனா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒரு நாள் அந்நிலையை அடைவேன்" என்று தனது தாய் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :