பிரபல சஞ்சிகையின் அட்டைப்படத்தில் செரீனா 'நிர்வாண போஸ்'

கர்ப்பமாக உள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள `வேனிட்டி ஃபேர்` சஞ்சிகையின் அட்டைப்படத்தில் நிர்வாணமாக தோன்றியுள்ளார்.

Serena Williams

பட மூலாதாரம், Annie Leibovitz/Vanity Fair

படக்குறிப்பு, ஆகஸ்ட் மாத வேனிட்டி ஃபேர் சஞ்சிகை ஜுலை 7 முதல் விற்பனையில் கிடைக்கும்

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் தொடருக்கு சற்று முன்னதாக, பிரபல அமெரிக்க சமூக வலைதளமான ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனர் அலெக்ஸிஸ் ஒஹானியனுடனான தனது முதல் குழந்தையை தான் கருத்தரிப்பதை செரீனா கண்டறிந்தார்.

டென்னிஸ் பயிற்சி பெறும் போது டென்னிஸ் மைதானத்தின் அருகே தலைசுற்றல் ஏற்பட்டதற்கு முன்புவரை, தான் கர்ப்பமாக இருப்பதாக நினைக்கவேயில்லை என்று வேனிட்டி ஃபேர் சஞ்சிகையிடம் செரீனா தெரிவித்தார்.

ஆனால், அவரது நண்பர் செரீனா கர்ப்பமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தி, அவரை மருத்துவ சோதனை எடுத்துக் கொள்ள ஆலோசனை அளித்தார்.

Serena Williams

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செரீனா வில்லியம்ஸ்

ஆஸ்திரலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் உள்ளாடை நிறுவனத்துக்காக ஃபோட்டோ ஷூட் (புகைப்படம்) எடுத்துக் கொண்டிருந்தபோது கர்ப்ப சோதனை நடத்திய செரீனா, கர்ப்ப சோதனையின் முடிவுகளால் ''எனது இதயம் கிட்டத்தட்ட நழுவிவிட்டது'' என்று தெரிவித்தார்.

''அட கடவுளே! இப்படிப்பட்ட முடிவு வந்திருக்கக்கூடாது. நான் இன்னும் ஒரு போட்டி தொடர் விளையாட வேண்டும்'' என்று குறிப்பிட்ட செரீனா, ''ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் நான் எவ்வாறு விளையாட போகிறேன்? இந்த ஆண்டில் நடக்கவுள்ள விம்பிள்டன் தொடரை வெல்வதற்கு நான் திட்டமிட்டுள்ளேன்'' என்று செரீனா தெரிவித்தார்.

Serena Williams

பட மூலாதாரம், Annie Leibovitz/Vanity Fair

படக்குறிப்பு, ஆகஸ்ட் மாத வேனிட்டி ஃபேர் சஞ்சிகை ஜுலை 7 முதல் விற்பனையில் கிடைக்கும்

இதன் பிறகு, செரீனா கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்யவும், அவரை சமாதானப்படுத்தவும், அவரது தோழி ஜெசிக்கா அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் உள்ள மருத்துக்கடைக்கு சென்று மேலும் 5 கர்ப்ப சோதனை கருவிகளை வாங்கி வந்தார்.

ஆனால், அனைத்து சோதனைகளிலும் செரீனா கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

கடந்த 2015-ஆம் ஆண்டில், செரீனா வில்லியம்ஸ் மற்றும் அலெக்ஸிஸ் ஒஹானியன் ஆகிய இருவரும் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததையும் வேனிட்டி ஃபேர் சஞ்சிகையில் வெளியான கட்டுரை வெளிப்டுத்தியுள்ளது.

Alexis Ohanian and Serena Williams

பட மூலாதாரம், Getty Images

தாங்கள் முதன் முதலாக சந்தித்து பேசிக் கொண்ட இத்தாலியில் உள்ள கேவாலியரி ஹோட்டலின் குறிப்பிட்ட உணவு மேசையில், கடந்த டிசம்பரில் தனது காதலை அலெக்ஸிஸ் ஒஹானியன் செரீனாவிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, டென்னிஸ் போட்டிகளில் ஆண்களுக்கான பிரிவில் போட்டியிட்டால், உலக தரவரிசை பட்டியலில் 700-வது இடத்தை பிடிக்கக் கூட செரீனா திணறுவார் என முன்னாள் டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ தெரிவித்துள்ள கருத்திற்கு செரினா வில்லியம்ஸ் பதிலடி கொடுத்துள்ளார்.

`அவர் ஆண்களுக்கான பிரிவில் விளையாடினால், தரவரிசையில் 700-வது இடத்துக்குத் தள்ளப்படுவார் .`என டென்னிஸ் போட்டிகளில் தற்போது முதலிடம் வகிக்கும் வீராங்கனையும், தற்போதைய தொழில் முறை டென்னிஸ் போட்டி சகாப்தத்தில் 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்றவருமான செரினா வில்லியம்ஸ் குறித்து, அமெரிக்காவின் என்.பி.ஆர் வானொலி நிலையத்திற்கு அளித்த பேட்டியில் ஏழு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முன்னாள் டென்னிஸ் வீரரான ஜான் மெக்கன்ரோ கூறியுள்ளார்.

ஜான் மெக்கென்ரோ

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜான் மெக்கென்ரோ

மெக்கன்ரோவின் இந்த கருத்துக்கு பின்னர் டிவிட்டர் வாயிலாக பதிலளித்துள்ள வில்லியம்ஸ், ``மதிப்பிற்குரிய ஜான், உங்களை வணங்குகிறேன் ;மதிக்கிறேன். ஆனால், அடிப்படை உண்மை இல்லாத உங்கள் கருத்துக்களில் தயவு செய்து என்னை இழுக்காதீர்கள்.` என தெரிவித்துள்ளார்.

''அந்த தரவரிசை பட்டியலில் (ஆடவர்களுக்கான தரவரிசை பட்டியல்) இருக்கும் யாருடனும் இது வரை நான் விளையாடியதில்லை, எனக்கு அதற்கான நேரமும் இல்லை. நான் தற்போது கர்ப்பிணியாக இருப்பதால், என்னையும் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் மதியுங்கள். இந்த நாள் சிறந்த நாளாக அமையட்டும்.'' என்று செரீனா தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஜனவரியில் மீண்டும் டென்னிஸ் ஆடுகளத்துக்கு திரும்புவதற்கு தான்எண்ணியுள்ளதாக செரீனா தெரிவித்தார்.

தொடர்பான செய்திகள்:

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்