சிறைக் கைதிகளை உற்சாகமூட்டிய ஆடை அவிழ்ப்பு நிகழ்வு
சிறையில் நடந்த அதிகாரபூர்வ நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த ஆடை அவிழ்ப்பு சம்பவம், சன் சிட்டி என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்க சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது.

பட மூலாதாரம், DURBAN CRIME N ALL
சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள், ஜோஹனஸ்பர்க் நகரத்தில் உள்ள சிறைச்சாலையில், தொடை உயர பூட்ஸ் காலணிகளை அணிந்தும், அரைகுறை ஆடை அணிந்தும் காணப்பட்ட இரு பெண்கள், ஆரஞ்சு வண்ண உடையணிந்த ஆண்களை ( சிறைக்கைதிகளை) நெருக்கமாக கட்டியவாறு இருப்பதை காண்பித்தன.
சிறையில் உள்ள நன்னடத்தை துறை இப்படங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளது.
இந்த சம்பவம் குறித்தான முழு விசாரணை நடைபெற்று வருவதாக சிறை நன்னடத்தை துறையின் நடப்பு ஆணையாளரான ஜேம்ஸ் ஸ்மால்பெர்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
''இது தொடர்பாக சனிக்கிழமையில் இருந்து நாங்கள் சமூகவலைத்தளத்தில் பார்த்த காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று ஜேம்ஸ் ஸ்மால்பெர்கர் தெரிவித்தார்.
சிறையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 13 சிறை காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைத்துறையின் நடத்தை விதிகளின் ``முழு வீச்சை எதிர்கொள்ள வேண்டும்`` என்று ஜேம்ஸ் மேலும் குறிப்பிட்டார்.
மாதாந்திர இளைஞர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூன் 21-ஆம் தேதியன்று சிறையில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கைதிகளின் புனர்வாழ்வுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

பட மூலாதாரம், DURBAN CRIME N ALL
ஆனால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் மற்றும் நிகழ்ச்சியில் அவர்கள் அணிய தேர்ந்தெடுத்த உடைகள் ஆகியவை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சிறை கைதிகளின் புனர்வாழ்வு நிகழ்ச்சியில் உள்ளாடை அணிந்து வந்த பெண்கள்
இது குறித்து கட்டாங் மாகாண சிறைத்துறை நன்நடத்தைத்துறை பேச்சாளர் மொர்வானி உள்ளூர் செய்தித்தளமான `டைம்ஸ் லைவ்`விடம் கூறுகையில், ''சிறை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்த பெண் நடனக்காரர்கள் வந்தபோது, அவர்கள் உள்ளாடை மட்டும் அணிந்து வந்ததை கண்டோம். சிறையில் இருக்கும் தண்டனை பெற்ற குற்றவாளிகளை உற்சாகப்படுத்தும் விதமாக அவர்கள் ஆடை அவிழ்ப்புக் காட்சியை அரங்கேற்றினர்'' என்று தெரிவித்தார்.
அரைகுறை ஆடையுடன் தோன்றும் பெண்கள் கைதிகளை உற்சாகப்படுத்துவது போன்ற படங்கள் சமூகவலைத்தளத்தில் வலம்வரத் தொடங்கியவுடன், வெளியே இருப்பதை விட சிறையில் இருக்கும் வாழ்க்கை வசதியாக இருக்கும் என்று பலரும் ஊகம் செய்ய அக்காட்சிகள் காரணமாக அமைந்தன.
ஆனால், இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடத்த அனுமதிக்கப்படவில்லை என்று சிலர் கோபம் அடைந்துள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்மால்பெர்கர், சிறைக்கு தொடர்பில்லாத ஒரு வெளி முகமையால் அழைத்து வரப்பட்ட இப்பெண்களுக்காக வரிசெலுத்துபவர்களின் பணம் வீணடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.
''குற்றவாளிகளுக்கு முன்பு பெண்கள் அப்படி தோன்றுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று'' என்று அவர் தெரிவித்தார்.
''இதனை நடக்க இந்த நிகழ்ச்சியின் மேலாளர்கள் அனுமதித்திருக்கக்கூடாது. எங்கள் நடத்தை விதிகளில் எடுத்துரைத்தது போல உடனடியாக இது போன்ற ஆபாசமான கேளிக்கையை தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.
மேலும், இது குறித்து ஜேம்ஸ் கூறுகையில், ''சிறை நிகழ்ச்சி தொடர்பான பாதுகாப்பு திட்டம் மீறப்பட்டதும், இது தொடர்பான சிறையின் கொள்கைகள் மற்றும் நடத்தை விதிகள் மீறப்பட்டதும் இதன் மூலம் தெளிவாக தெரிகிறது'' என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












