பெரும் உயிர் தியாகத்துடன் வரலாற்று சிறப்புமிக்க டோக்ரை போரை வென்றது இந்தியா
- எழுதியவர், ரெஹான் ஃபஜல்
- பதவி, பிபிசி
இந்தியா-பாகிஸ்தான் இடையே 1965-இல் நடைபெற்ற போர் தொடர்பான 22 கட்டுரைகள் கொண்ட தொடரின் 12-ஆவது பாகம் இது.

பட மூலாதாரம், USI
1965 செப்டம்பர் ஆறாம் தேதியன்று காலை ஒன்பது மணிக்கு ஜாட் ரெஜிமெண்டின் மூன்றாவது பிரிவினர் இச்சாஹில் கால்வாயை நோக்கி முன்னேறத் தொடங்கினார்கள்.
கால்வாயின் கரைப்பகுதியில் நடைபெற்ற யுத்தத்தில் பாகிஸ்தான் விமானப்படை, இந்திய தரப்பின் கனரக ஆயுதங்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் 11 மணிக்குள் கால்வாயின் மேற்குப் பகுதியில் பாடாநகரையும் பிறகு டோக்ரையையும் இந்திய வீர்ர்கள் கைப்பற்றினார்கள்.
ஆனால், இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகளுக்கு வெற்றி பெற்ற தகவல் சென்றடையவில்லை. ராணுவப் பிரிவு தலைமையகத்திற்கு சில தவறான தகவல்கள் கிடைத்ததால், டோக்ரையில் இருந்து 9 கிலோமீட்டர் பின்வாங்கி சந்த்புராவில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது.
பாகிஸ்தானிய படையினர் கடுமையான தாக்குதல் அழுத்தத்தை கொடுத்தபோதிலும், இந்திய வீரர்கள் பதுங்கு குழிகளை அமைத்து அங்கேயே இருந்தார்கள்.
டோக்ரை மீது மீண்டும் தாக்குதல்

செப்டம்பர் 21ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு மீண்டும் டோக்ரை தாக்கப்பட்டு மீண்டும் கைப்பற்றப்பட்டாலும், பலத்த உயிர் சேதம் ஏற்பட்டது.
உலகின் சிறந்த போர்களில் ஒன்றாக இந்தப் போர் கருதப்படுகிறது என்பதோடு, பல ராணுவ பள்ளிகளின் பாடத்திட்டங்களிலும் சேர்க்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் இந்தப் போர் குறித்த பல நாட்டுப்புறப் பாடல்கள் வழக்கில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
குண்டுகளுக்கு மத்தியில் வீறுநடை

மேஜர் ஜெனரல் வர்மா நினைவுகூர்கிறார்: "செப்டம்பர் 21 மற்றும் 22 இரவு, நாங்கள் அனைவரும் எங்கள் பதுங்கு குழிகளில் உட்கார்ந்திருந்தோம், தலைமை அதிகாரி லெஃப்டினெண்ட் கர்னல் ஹெட், பதுங்குக் குழியின் மீது கால் வைத்திருந்தார். பாகிஸ்தானியர்களின் துப்பாக்கி சூடு தொடங்கியவுடன், தலைக்கவசத்தை அணிந்துகொண்டு, குண்டுகளுக்கு மத்தியில் வீறுநடை பயின்றார்."
"யாரைப் பார்த்தும் பயம் இல்லை என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்காகவே அவர் இவ்வாறு நடந்தார். 'என்னை கொல்வதற்காக படைக்கப்பட்டிருக்கும் குண்டில் இருந்து நான் தப்பிக்கமுடியாது என்பது எப்படி உண்மையானதோ, அதேபோல் அதைத்தவிர பிற குண்டுகளால் என்னை ஒன்றும் செய்யமுடியாது' என்று அவர் அடிக்கடி சொல்வார்."
1965 ஆம் ஆண்டு போர் குறித்த புத்தகம் எழுதிய ரச்னா விஷ்ட் ராவத் கூறுகிறார், "செப்டம்பர் 21 அன்று, தனது படையினரிடம் உரையாற்றிய அவர், வீரர்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்தார். ஒருவரும் பின்வாங்கக்கூடாது என்பது முதல் கோரிக்கை. டோக்ரையில் உடலாகவோ அல்லது சடலமாகவோ சந்திக்கவேண்டும் என்பது அவரது இரண்டாவது கோரிக்கை."
"நீங்கள் அனைவரும் ஓடிவிட்டால்கூட நான் தனியாக நின்று போரிடுவேன் என்று சொன்ன அவர், புறமுதுகிட்டு உங்கள் கிராமத்திற்குச் சென்றால், தலைமை அதிகாரியை போர்க்களத்தில் தனியாக விட்டு வந்ததற்காக கிராம மக்கள் உங்கள் முகத்தில் உமிழ்வார்கள்" என்று கூறினார்.
தலைமை அதிகாரி இறந்துவிட்டால் என்ன செய்வது?
அதன் பின்னர் உணவருந்திய பிறகு, வீரர்களின் கூடாரத்திற்கு சென்ற மேஜர் ஷெகாவத், "நாம் போரில் உயிர் துறந்தால் அது நல்ல மரணம். பிறப்பும், இறப்பும் ஒருமுறைதான். நமது படாலியன் உங்கள் குடும்பங்களை கவனித்துக் கொள்ளும், எனவே கவலைப்படாமல் கடமையாற்றுங்கள்" என்று சொன்னார்.

போர் நினைவுகளை பற்றி கூறுகிறார் கர்னல் ஷெகாவத், "ஹெட்டின் வார்த்தைகளில் உத்வேகம் அடைந்த வீரர்களில் ஒருவர், நாளை எங்கு சந்திக்கவேண்டும் என்று கேட்டார். டோக்ரையில் என்று பதில் கிடைத்தது".
"அந்த சமயத்தில் ஜாட் மக்கள் பேசும் மொழியை ஹெட் ஓரளவு கற்றுக் கொண்டிருந்தார். தலைமை அதிகாரி காயமடைந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று அவர் புன்னகையுடன் கேட்க, அவரை தூக்கிக்கொண்டு செல்வோம்" என்று ஒருவர் பதிலளித்தார்.
"அதாவது, உயிருடனோ, சடலமாகவோ டோக்ரை செல்லவேண்டும் என்ற உத்தரவை வீரர்கள் சரியாக புரிந்து கொண்டார்களா என்பதற்கான தேர்வுக் கேள்வி அது."
தாக்குதல் தொடங்கிவிட்டது

காலாட்படையின் 54வது பிரிவினர் இரண்டு கட்டங்களாக தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். முதலில் பஞ்சாப் ரெஜிமெண்டின் 13வது பிரிவு, 13வது மைல்கல்லில் பாதுகாப்பாக இருக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை முறியடிக்க வேண்டும். பின்னர் ஜாட் ரெஜிமெண்டின் மூன்றாவது பிரிவு டோக்ரையை கைப்பற்றவேண்டும்.
ஆனால் ஹெட் முதலிலேயே பிரிகேட் கமாண்டிடம் சொன்னது என்ன தெரியுமா? பஞ்சாப் ரெஜிமெண்டின் 13வது பிரிவு தாக்குதலில் வெற்றியடையாவிட்டாலும், ஜாட் பிரிவினர் இரண்டாம் கட்ட தாக்குதலில் ஈடுபடுவார்கள்.
அவர் சொன்னதுபோலவே, பஞ்சாப் ரெஜிமெண்டின் தாக்குதல் தோல்வியடைந்த்து. அன்று இரவு தாக்குதலை நடத்த வேண்டாம் என்று பிரிகேடியர் வயர்லெஸ் மூலம் ஹெட்டுக்கு உத்தரவிட்டார்.
உத்தரவை ஏற்க மறுத்த ஹெட், தாங்கள் தாக்கப்போவதாக சொன்னார். ஆனால் உண்மையில் தாக்குதல் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
உயிர் பிழைத்தது 27 பேர் மட்டுமே
சரியாக ஒரு மணி நாற்பது நிமிடங்களுக்கு தாக்குதல் தொடங்கியது. டோக்ரைக்கு வெளியே, சிமெண்டால் உருவாக்கபட்ட பாதுகாப்பு சாவடிகளில் (Pillbox) இருந்து பாகிஸ்தானியர்கள் தீவிரமான தாக்குதல் நடத்தினார்கள்.
சுபேதார் பாலே ராம் கத்தினார், 'அனைவரும் வலப்புறத்தில் என்னுடன் சேர்ந்து தாக்குங்கள்'. கேப்டன் கபில் சிங் தாபாவும் அதே நேரத்தில் தாக்கினார்.
குண்டடிபட்டு வீழ்ந்தவர்களை அப்படியே விட்டுவிட்டு மற்றவர்கள் தொடர்ந்து சண்டையிட்டனர். பாலே ராமின் மார்பிலும், வயிற்றிலும் ஆறு குண்டுகள் துளையிட்டபோதும் அவர் தன்னுடைய வீரர்களுக்கு வழிகாட்டுவதை, கட்டளையிடுவதை நிறுத்தவில்லை.
போர் தொடங்குவதற்கு முன் 108 ஆக இருந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை 27 ஆக குறைந்துவிட்டது. கர்னல் ஹெட் தனது புத்தகத்தில் இந்த போரை பற்றி குறிப்பிட்டிருக்கிறார், "அது நம்பமுடியாத தாக்குதலாக இருந்தது. அந்த சண்டையில் நான் பங்கு பெற்றதும், அதை மிகவும் நெருக்கத்தில் இருந்து பார்த்ததும் எனக்கு கிடைத்த வரம் என்றே கருதுகிறேன்."
ஆசாராம் தியாகியின் வீரம்
தலைமை அதிகாரிக்கு பின்னால் 18 கெஜ தொலைவில் நடந்து வந்த கேப்டன் பி.ஆர்.வர்மாவின் வலப்புறத்தில் இருந்து திடீரென பல தோட்டாக்கள் தாக்கியதில் அவர் தரையில் வீழ்ந்தார்.
கம்பனி கமாண்டர் மேஜர் ஆசாராம் தியாகியையும் இரண்டு தோட்டாக்கள் தாக்கின. ஆனால் தொடர்ந்து சண்டையில் ஈடுபட்ட அவர், பாகிஸ்தான் மேஜர் ஒருவரை தாக்கினார்.

'ஆசாராம் தியாகியை மேலும் இரண்டு தோட்டாக்கள் தாக்கின, பாகிஸ்தானி வீரர் ஒருவர் அவரது வயிற்றில் தாக்கினார்' என்று சொல்கிறார் ரச்னா பிஷ்ட்.
தோட்டாக்களால் துளைக்கப்பட்டு, ஏறக்குறைய திறந்திருந்த வயிற்றோடு, கீழே விழுந்த ராம் சிங், ஒரு பெரிய கல்லை எடுத்து, வயிற்றில் தாக்கிய பாகிஸ்தான் வீரரின் தலையை பதம்பார்த்தார்.
மேஜர் வர்மா கூறுகிறார், "தியாகிக்கு அவ்வப்போது நினைவு வந்தது, நானும் தீவிரமாக காயமடைந்திருந்தேன். காயமடைந்தவர்களை அங்கிருந்து அகற்றி சிகிச்சைக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் தொடங்கியபோது, மேலதிகாரியான நீங்கள்தான் முதலில் செல்லவேண்டும் என்றார் தியாகி. அவரை பேசாமல் இருக்கச் சொல்லிவிட்டு, முதலில் அவரை அங்கிருந்து வெளியேற்றினேன்."
மேஜர் ஷெகாவத் கூறுகிறார், "தியாகிக்கு தீவிரமான காயம் ஏற்பட்டிருந்தது. 'உயிர் பிழைக்கமாட்டேன், என்னை சுட்டுவிடுங்கள், உங்கள் கையால் உயிர் துறக்க விரும்புகிறேன்' என்று சொன்னார், ஆனால் அவர் உயிருடன் இருக்க வேண்டும் என்று அனைவரும் விரும்பினோம்."
அவரை காப்பாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. செப்டம்பர் 25ஆம் தேதியன்று தன் உயிரை தியாகம் செய்தார் தியாகி.
பாகிஸ்தான் கமாண்டிங் அதிகாரி பிடிப்பட்டார்
காலை 3 மணியளவில் இந்திய வீரர்கள் டோக்ரையை கைப்பற்றினார்கள். காலை 6 மணி 15 நிமிடங்களுக்கு இந்திய டாங்கிகள் அங்கு சென்றடைந்தன. இச்சாஹில் கால்வாயின் மற்றொரு கரையில் குண்டு தாக்குதல் தொடங்கியது. அங்கிருந்து இந்திய தரப்பினர் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டனர்.
குடிசைகளில் பதுங்கியிருந்த பாகிஸ்தானி வீரர்களை ஜாட் ரெஜிமெண்ட் வீரர்கள் கைது செய்தனர். அதில் பாகிஸ்தானின் பஞ்சாப் (படான்) ரெஜிமெண்டின் 16வது பிரிவின் தலைமை அதிகாரி லெஃப்டினெண்ட் கர்னல் ஜே.எஃப் கோல்பாலாவும் அடங்குவார்.
இச்சாஹில் கால்வாயில் லான்ஸ் நாயக் ஓம்பிரகாஷ் இந்தியக் கொடியை ஏற்றினார். அங்கிருந்த வீரர்களின் வாழ்க்கையில் அது பெருமைமிகு தினமாக சரித்திரத்தில் பதிவானது.

பட மூலாதாரம், MOD
டோக்ரை போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களை நினைத்தால் கண்கள் கலங்குகின்றன.
இந்தப் போரில் பங்கேற்ற லெஃப்டினெண்ட் கர்னல் டி.எஃப் ஹெட், மேஜர் ஆசாராம் தியாகி, கேப்டன் கே.எஸ் தாபா ஆகியோர் மஹாவீர் சக்ர விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்கள்.
ஹுஸைன் உருவாக்கிய சித்திரம்

2013இல் கர்னல் ஹெட் மறைந்தார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்த அவரை ரச்னா பிஷ்ட் சந்தித்தார்.
அந்த நினைவை பகிர்ந்து கொள்கிறார் ரச்னா, "ஜான் க்ரீஷ்மின் புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் கொண்டவர் கர்னல் ஹெட். பிராணிகள் மீது அன்பு கொண்ட அவர் 45 நாய்களை வளர்த்துவந்தார். கோட்த்வாருக்கு அருகில் இருக்கும் அவருடைய கிராமத்தின் அருகே ஓடும் கால்வாய் நீரில் தனது செல்லப் பிராணிகளை குளிக்க வைப்பார். தனது வாழ்வின் இறுதி கணம் வரை அவர் கம்ப்யூட்டரையோ, மொபைல் போனையோ பயன்படுத்தியதே இல்லை."
"புகழ்பெற்ற ஓவியர் எம்.எஃப் ஹுசைன் யுத்தகளத்திற்கு சென்று வரைந்த ஒரே ஓவியம் கர்னல் ஹெட்டுடையது. அந்த ஓவியம் இப்போதும் பரேலி ரெஜிமெண்டல் மையத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது".
பிற செய்திகள்
- தனது குழந்தைகளை பாதுகாக்க பயங்கரமான எதிரிகளை சமாளிக்கும் தவளை
- இலங்கையில் விவாகரத்துக்கு காரணமாகும் சமூக வலைத்தளங்கள்
- ஆங் சாங் சூச்சியின் பேச்சு: உலக தலைவர்கள் விமர்சனம்
- நான்கு மாதத்திற்குப் பிறகு மே 17 அமைப்பினர் விடுதலை
- 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவு வழக்கில் சிறுமியின் இன்னொரு மாமா கைது
- செக்ஸ் பொம்மை வாடகை சேவையை சீன நிறுவனம் நிறுத்தியது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













