நான்கு மாதத்திற்குப் பிறகு மே 17 அமைப்பினர் விடுதலை

மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட நான்கு பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட நடவடிக்கையை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(செப்.19) ரத்து செய்ததை அடுத்து, புதன்கிழமை (செப்20 ) அவர்கள் நால்வரும் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

திருமுருகன்

பட மூலாதாரம், Thirumurugan

படக்குறிப்பு, திருமுருகன்

திருமுருகன், இளமாறன், அருண் மற்றும் டைசன் ஆகியோர் கடந்த மே 21ம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் மெழுவர்த்தி ஏற்றி ஈழத் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த சென்ற சமயத்தில் கைது செய்யப்பட்டு குண்டர்தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டனர்.

நினைவேந்தல் கூட்டம் நடத்தியவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை எதிர்த்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. மே 17 இயக்கத்தவரால் கடுமையாக விமர்சனத்துக்கு ஆளாகும் திமுககூட இதைக் கண்டித்திருந்தது.

நான்கு மாத சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டுள்ள இந்த நால்வரையும் அவர்களது அமைப்பைச் சேர்ந்தவர்கள் புழல் சிறை முன்பு திரண்டு நின்று வரவேற்றனர்.

விடுதலை ஆனதும், செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன் குண்டர் தடுப்புச் சட்டம் போன்ற சட்ட வழிகளைப் பயன்படுத்தி அரசின் மீதான விமர்சனங்களை நிறுத்த எண்ணுவது தவறு என்று குறிப்பிட்டார்.

''மாணவர்கள், பொதுமக்கள் என பலருக்கும் எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகளை நிச்சயமாக எதிர்ப்போம். தமிழகம் முழுவதும் பயணம் செய்து மாணவர்களை திரட்டுவோம். தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்,'' என்றார் அவர்.

''கடுமையான சட்டங்களைக் கொண்டு சிறையில் அடைத்தாலும் மக்களுக்கு எதிரான திட்டங்களை எதிர்த்துப் போராடுவதை நிச்சயம் தொடருவோம்,''என்றும் அவர் தெரிவித்தார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :