அக்டோபர் 25-ல் 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி அறிவிப்பு: டெல்லி சிபிஐ நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images
இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள வழக்குகளின் தீர்ப்பு வழங்கப்படும் தேதி வரும் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்தியில் முன்பு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசு 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள்வரை ஆட்சியில் இருந்தது. அதில் முதலாவது ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.
தொடர்புடைய செய்திகள்
இதேபோல மத்திய அமலாக்கத் துறையும் தனியாக தொடர்ந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது.
இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக டெல்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
அதைத் தொடர்ந்து வழக்கின் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்டோர் மற்றும் புலனாய்வு அமைப்பான சிபிஐ மற்றும் மத்திய அமலாக்கத் துறை தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாத தாக்கல் செய்ய சிறப்பு நீதிபதி சைனி உத்தரவிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த நடைமுறைகள் முடிவடைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிக ஆவணங்களைக் கொண்ட வழக்கின் கோப்புகளை ஆராய்ந்து தீர்ப்பை இறுதி செய்வதில் தாமதம் ஆவதால் செப்டம்பர் 20-ஆம் தேதி தீர்ப்பு வழங்குவது தொடர்பான தேதி அறிவிக்கப்படும் என சிறப்பு நீதிபதி சைனி கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தபோது, "வழக்கின் தீர்ப்பு வழங்கப்படும் தேதி அக்டோபர் 25-ஆம் தேதி வெளியிடப்படும். வழக்கின் ஆவணங்கள் ஏராளமாக இருப்பதால் தீர்ப்பை எழுதும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒருவேளை அக்டோபர் 25-ஆம் தேதி தீர்ப்பு தேதியை அறிவிக்க முடியாவிட்டால் அதற்கடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்ப்பு அளிக்கப்படும்" என்று சிறப்பு நீதிபதி சைனி கூறி வழக்கை ஒத்திவைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
குற்றம்சாட்டப்பட்டோர் யார்?
முன்னதாக, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக 2011-ஆம் ஆண்டில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, மத்திய முன்னாள் தொலைத் தொடர்புத் துறைச் செயலர் சித்தார்த் பெஹுரா, ராசா அமைச்சராக இருந்த போது அவரது தனிச் செயலராகப் பணியாற்றிய ஆர்.கே. சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் ஷாஹித் உஸ்மான் பால்வா, டி.பி.ரியாலிட்டி நிறுவனர் வினோத் கோயங்கா ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு நிறுவன மேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏஜி நிறுவன இயக்குநர்கள் கௌதம் தோஷி, சுரேந்தர் பிப்பாரா, ஹரி நாயர், மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி, குசேகான் ஃபுரூட்ஸ் அன்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன இயக்குநர்கள் ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கலைஞர் டிவி முன்னாள் இயக்குநர் சரத் குமார், பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் கரீம் மொரானி ஆகிய 14 பேர் மீதும், ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ்-தமிழ்நாடு ஆகிய மூன்று நிறுவனங்கள் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
மூன்று வழக்குகள்: 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மொத்தம் மூன்று வழக்குகளை டெல்லி சிபிஐ நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
முதலாவதாக தொடர்ந்த வழக்கில் 2011-ஆம் ஆண்டு ஏப்ரலில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விதிகளை மீறி தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 122 உரிமங்களை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஒதுக்கியதால் மத்திய அரசுக்கு ரூ.30,984 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று சிபிஐ குறிப்பிட்டது
இந்த வழக்கில் ரிலையன்ஸ் ஏடிஏஜி தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, கார்ப்பரேட் இடைத்தரகர் நீரா ராடியா உள்பட மொத்தம் 154 சிபிஐ தரப்பு சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள், வழக்கு தொடர்புடைய சுமார் 4,000 பக்கங்கள் நீதிமன்ற விசாரணையின் போது பதிவு செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
இரண்டாவது வழக்கில், எஸ்ஸார் குழும மேம்பாட்டாளர்கள் ரவி ருய்யா, அன்ஷுமன் ருய்யா, லூப் டெலிகாம் மேம்பாட்டாளர்கள் கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான், எஸ்ஸார் குழும உத்திகள் திட்டமிடல் பிரிவு இயக்குநர் விகாஸ் சரஃப் ஆகியோர் மீதும் அவர்கள் சார்ந்துள்ள நிறுவனங்கள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
மூன்றாவதாக மத்திய அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி, சரத்குமார், ஷாஹித் பால்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், பி. அமிர்தம் ஆகிய 10 பேர் மீதும் ஒன்பது தனியார் நிறுவனங்கள் மீதும் 2014, ஏப்ரலில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிற செய்திகள்
- இந்தியா-பாகிஸ்தான் போர்: பல ஆண்டுகளுக்கு பிறகு வருத்தம் தெரிவித்த பாகிஸ்தானி விமானி
- எல்லை மீறினால் வடகொரியாவை அழிப்போம்: டிரம்ப்
- ரோஹிஞ்சா பிரச்சனை : 'சர்வதேச கண்காணிப்பு குறித்து அச்சமில்லை' - ஆங் சான் சூச்சி
- பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஆஃப்கன் பெண்களின் புகைப்படங்கள்
- அமேசான் அற்புதங்களை கொண்ட பிரேசிலின் பிரம்மாண்டம்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












