கனிமொழி ஜாமீன் தொடர்பாக சிபிஐ விளக்கம்
இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்குவது நீதிமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றே தான் தெரிவித்ததாக, சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத்துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 17 பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண் இயக்குநர் ஷரத்குமார், குசேகான் நிறுவன இயக்குநர்கள் ஆஸிஃப் பால்வா மற்றும் ராஜீவ் அகர்வால், திரைப்படத் தயாரிப்பாளர் கரிம் மொரானி ஆகியோரது ஜாமீன் மனு மீதான விசாரணை, சிபிஐ நீதிமன்றத்தில் முடிவடைந்து, தீர்ப்பு 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், யுனிடெக் நிறுவனமேலாண் இயக்குநர் சஞ்சய் சந்திரா, ஸ்வான் டெலிகாம் நிறுவன இயக்குநர் வினோத் கோயங்கா உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனு மீது நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச சிபிஐ ஒரே மாதிரியான நிலைப்பாட்டை கடைபிடிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும் ஏழு ஆண்டுகள் தண்டனையாக இருந்தாலும், அவர்களுக்கு ஜாமீன் பெற உரிமை உண்டு என்று வாதிட்டார்.
மேலும், சிபிஐ நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணை நடைபெறும்போது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கூடாது என்ற நிலைப்பாட்டை சிபிஐ எடுக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கூறியது. ஆனால், அக்டோபர் 24-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில், கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேருக்கு ஜாமீன் வழங்குவதை சிபிஐ எதி்ர்க்கவில்லை என்று ராம்ஜெத்மலானி சுட்டிக்காட்டினார்.
அப்போது, நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எச்.எல். தத் குறுக்கிட்டு, அது உண்மையா என்று கேள்வி எழுப்பினார்கள். அக்டோபர் 24-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் நடந்த விசாரணை விவரங்களை செவ்வாய்க்கிழமை தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிடர் ஜெனரலுக்கு உத்தரவிட்டார்கள்.
அதன்படி, ஹரின் ராவல் இன்று உச்சநீதிமன்றத்தில் அதுபற்றிய விவரங்களைத் தெரிவித்தார். சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற ஜாமீன் மனு விசாரணையின்போது, கனிமொழி உள்ளிட்ட ஐந்து பேர் ஜாமீன் பெறுவதற்கு தகுதிபடைத்தவர்கள்தான் என்றும், அதே நேரத்தில், அதுபற்றி நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்ததாக, ஹரின் ராவல் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள் மீது பாய்ச்சல்
அதைத் தொடர்ந்து நீதிபதிகள் கருத்துத் தெரிவிக்கும்போது, நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை விவரங்களை இன்று ஊடகங்கள் திரித்து வெளியிட்டிருப்பதாகக் கடுமையாகச் சாடினார்கள். நேற்று நடந்த விசாரணை விவரங்கள், ஊடகங்களில் முழுக்க முழுக்க தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது. சிபிஐ நீதிமன்றத்தில் நடந்தது என்ன என்றுதான் இந்த நீதிமன்றம் கேட்டது. ஆனால், ஊடகங்கள் தங்கள் விருப்பம்போல் ஏதேதோ எழுதியிருக்கின்றன. இந்த நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தார்கள்.
அதே நேரத்தில், சஞ்சய் சந்திரா உள்ளிட்ட ஐந்து பேரின் ஜாமீன் மனு மீதான விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று இதுதொடர்பாக நடந்த விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்ட அந்த ஐந்து பேரும் வெளியில் விடப்பட்டால், சாட்சிகளை அழிக்க மாட்டார்கள் என சிபிஐ கருதும்பட்சத்தில் அவர்களை இன்னும் சிறையில் வைத்திருப்பது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.












