பிரதமர் சம்மதம் பெற்றே 2ஜி முடிவுகளை எடுத்தேன்: ஆ,ராசா விளக்கம்

ஆ.ராசா
படக்குறிப்பு, ஆ.ராசா

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் பலமுறை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து விவாதித்ததாகவும், அவரது சம்மதத்துடனேயே தான் ஒதுக்கீடு குறித்த அனைத்து முடிவுகளையும் எடுத்ததாகவும் இந்தியாவின் முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கூறியிருக்கிறார்.

2-ஜி எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுக்கள் எழ, ராசா பதவி விலக நேரிட்டது.

பின்னர் அவர், திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட பலர் அப்பிரச்சினையில் கைதானார்கள். ஆனால் திமுக மத்திய அரசின் மீதோ காங்கிரசின் மீதோ குறை கூறுவதைத் தவிர்த்து வந்தது.

ஆனால் அண்மையில் மத்திய அரசு இலங்கை தமிழர் மீது போதிய அக்கறை காட்டவில்லை எனக்கூறி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து வெளியேறியதன் பின்னர் திமுக அவ்வப்போது பிரதமரையும் மத்திய அரசின் நடவடிக்கைகளையும் விமர்சித்து வருகிறது.

இதனிடையே, அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கவென நியமிக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் இறுதி அறிக்கை, பிரதமருக்குத் தவறான தகவல்களைக் கொடுத்து, தவறான அரசு முடிவுகளுக்கு வழிவகுத்தவர் ராசா என்று கூறுவதாக செய்திகள் கசிய, கசிவுக்குக் காரணமான கூட்டுக்குழுத் தலைவர் காங்கிரசைச் சேர்ந்த சாக்கோ பதவி விலகவேண்டும் என திமுக அண்மையில் கோரியது.

தன்னிலை விளக்கம்

இப்போது கூட்டுக்குழுவின் முன் சாட்சியமளிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட ராசா, குழுவிற்கு 112 பக்க தன்னிலை விளக்கமொன்றை எழுதியிருப்பதாகவும், அக்கடிதத்தில் தான் நவம்பர் 2007க்கும் ஜூலை 2008க்கும் இடையில், அலைக்கற்றை தொடர்பில் பல முறை பிரதமரை சந்தித்து விவாதித்தது, மேலும் கடிதங்கள் எழுதியது குறித்து விளக்கமாகக் கூறியிருப்பதாகவும் இந்து நாளேடு செய்தி வெளியிட்டிருக்கிறது.

இதுவரை பிரதமர் அத்தகைய தனிச் சந்திப்புக்கள் குறித்து எதுவும் கூறவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் பிரதமர் அலுவலகத்துடன் சுயாதீனமாக ஒதுக்கீடு குறித்து விவாதித்திருக்கின்றனர் என்று ராசா கூறியுள்ளதாகவும், பிரதமர் அலுவலகக் குறிப்புக்கள் அடங்கிய ஆவணங்களை கூட்டுக்குழுவுக்கு எழுதியிள்ள கடிதத்தில் ராசா மேற்கோள் காட்டியிருக்கிறார் என்றும் இந்து நாளேட்டின் செய்தி தெரிவிக்கிறது.

2007 ஒதுக்கீடு தொடர்பாக பிரச்சினை எழுந்தும் தான் 2009 தேர்தல்களுக்குப் பிறகு மீண்டும் தொலைத்தொடர்பு அமைச்சராக நியமிக்கப்பட்டதை நினைவுகூறும் ராசா, தான் தவறாக பிரதமரை வழிநடத்தியிருந்தால் அல்லது அவரது மனம் புண்படும்படி நடந்ததிருந்தால் எப்படி அதே துறைக்கு நான் மீண்டும் அமைச்சராகியிருக்க முடியும் என்றும் வினவியிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.