தயாளு அம்மாள் டில்லி செல்லவேண்டாம்

திமுக தலைவர் மு.கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் சென்னையில் நீதிபதிகள் குழு முன்பு சாட்சியமளிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டாம் தலைமுறை தொலைபேசி அலைகற்றை ஒதுக்கிடு விவகாரத்தில்வழக்கில் சிபிஐ சாட்சியாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு சம்மன் வழங்கப்பட்டது. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவர் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரனைக்கு வந்தது.
நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அமர்வுக்கு முன்பு இம்மனு விசாரிக்கப்பட்டது. தயாளு அம்மாள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிப்பதில் இருந்து நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது. அதே நேரத்தில் சென்னையில் நீதிபதிகள் குழு முன்பு சாட்சியமளிக்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தலைமுறை தொலைபேசி அலைகற்றை ஒதுக்கிடு விவகாரத்தில் கலைஞர் தொலைக்காட்சிக்கு சட்டவிரோதமாக பணம் கைமாறியதாக கூறப்படும் இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் ஷரத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர். இதே வழக்கில் கலைஞர் டிவியின் நிர்வாகிகள் ராஜேந்திரன், அமிர்தம் ஆகியோர் ஏற்கனவே சாட்சியம் அளித்துவிட்டனர்.
கலைஞர் தொலைகாட்சியில் 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளையும் சாட்சியாக வழக்கில் இணைத்து இருந்தனர். இந்நிலையில் உடல் ஆரோக்கியத்தை காரணம் காட்டி நீதிமன்றம் சென்ற தயாளு அம்மாளை, உச்சநீதிமன்றம் தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவின் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
அனில் அம்பானி
இதே நேரத்தில் இன்று இந்த 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியும் அவரது மனைவி டினாவும் தில்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
பெரும்பான்மையான கேள்விகளுக்கு, ஞாபகத்தில் இல்லை என அனில் அம்பானி தெரிவித்தார். அதை சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி சைனி முன்னிலையில் அதிகாரிகள் பதிவு செய்தனர். சிபிஐ சாட்சியாக வழக்கில் சேர்க்கப்பட்ட அனில் அம்பானி, வழக்கு விசாரணை தொடர்பில் ஒத்துழைப்பு அளிக்காத சாட்சியாளர் என சிபிஐ அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை அனில் அம்பானி மனைவி டினா சாட்சியம் அளிக்க உள்ளார்.












