2 ஜி வழக்கு ஜாமீன் : உச்சநீதிமன்றம் கேள்வி

இந்திய உச்சநீதிமன்றம்
படக்குறிப்பு, இந்திய உச்சநீதிமன்றம்

இரண்டாம் தலைமுறை செல்லிடத் தொலைபேசி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை அரசு எதிர்க்கிறதா இல்லையா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சில நிறுவனங்களின் பிரதிநிதிகள் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் ஜி.எஸ். சிங்வி மற்றும் எச்.எல். தத் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரண நடைபெற்ற நேரத்தில், நீதிபதிகள் குறுக்கிட்டு, இன்று ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக கேள்வி எழுப்பினார்கள்.

இன்று வெளியாகியுள்ள செய்தியில், அமைச்சர் தெரிவித்திருக்கும் கருத்து மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று கூறிய நீதிபதிகள், அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை அரசு இன்னும் எதிர்க்கிறதா, இல்லை தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுவிட்டதா என்று கேள்வி எழுப்பினார்கள்.

"அவர்களுக்கு ஜாமீன் வழங்குவதை அரசு எதிர்க்கவில்லை என்றால், அவர்களை விடுதலை செய்யுமாறு கூறி அரசு ஒரு மனுவைத் தாக்கல் செய்யலாம். அவர்களை நேரடியாக விடுதலை செய்துவிடுகிறோம்", என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தார்கள்.

அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரது ஜாமீனை எதிர்க்கப் போவதில்லை என சிபிஐ கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதாகவும், அது உண்மையா என்றும் கேட்டார்கள். அது உண்மை இல்லை என்றால், தவறு என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள். அதுபோன்ற செய்திகள் தினமும் வெளியாகி வருகின்றன என்று நீதிபதிகள் அறிவுறுத்தினார்கள்.

கூடுதல் சொலிசிடர் ஜெனரல் ஹரின் ராவல் பதிலளிக்கும்போது, அந்தச் செய்தி தொடர்பாக தான் விசாரித்துவிட்டதாகவும், அது உண்மை அல்ல என்றும் தெரிவித்தார்.

ஏற்கெனவே, சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்துள்ள மனுவில், கனிமொழி, சினியூக் பிலிம்ஸ் நிறுவனர் கரீம் மொரானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரி சுரேந்திர பிபாரா ஆகியோரது ஜாமீன் மனு தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கட்டும் என்று தெரிவித்துள்ளது.

கனிமொழி பெண் என்பதாலும், பள்ளி செல்லும் குழந்தையைக் கவனிக்க வேண்டியிருப்பதாலும், மற்ற இருவருக்கும் உடல்நலன் அடிப்படையிலும் ஜாமீன் மனுக்களை எதிர்ப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறப்பட்டது. அது தவறு என்று உச்சநீதிமன்றத்தில் அரசு தெரிவித்திருக்கும் நிலையில், கனிமொழியின் ஜாமீன் மனு வரும் 17-ம் தேதி சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.