ஜப்பானில் தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரே சம்பளமா?
ஜப்பானைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்? ஜப்பானில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரே சம்பளமா? கடந்த வருடம் ஜப்பான் முழுவதும் ரயில்களின் தாமத காலம் வெறும் 6 நொடிகள் மட்டும் தானா?

பட மூலாதாரம், Getty Images
இந்த கேள்விகளுக்கு அரபு நாட்டு வலைத்தளங்களில் ''ஆம்'' என்றுதான் பதில் வரும் என்கிறார் ஹசன். ஜப்பானை பற்றி சமூக வலைத்தளங்களில் உலவும் கட்டுக்கதைகளை உடைப்பதற்காக, ''ஜப்பான் பற்றிய கட்டுக்கதைகள்'' என்ற அரேபிய ஹாஷ்டாக்கை ஹசன் தொடங்கினார்.
நிப்பான்.காம் என்ற பன்மொழி வலைதளத்தில் ஹசன் பணியாற்றுகிறார். ஜப்பான் நாட்டின் சமுதாயம் மற்றும் கலாசாரம் பற்றிய துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக அர்பணிக்கப்பட்ட வலைத்தளம் என நிப்பான்.காம் தன்னை பற்றிக் கூறுகிறது.
''எங்களது அரேபிய ட்விட்டர் கணக்கில், ஒரு வருடத்திற்கு முன்பு இந்த ஹாஷ்டாக்கை தொடங்கினேன். ஆனால், சில மாதங்களுக்கு முன்பே மக்கள் இதை கண்டுகொள்ள ஆரம்பித்தார்கள்'' என்கிறார் ஹசன்.
ஜப்பானில் 20 நிமிடம் மின் வெட்டு ஏற்பட்டதற்காக, அந்நாட்டு மின்சாரத்துறை அமைச்சர், மக்கள் முன்னிலையில் 20 நிமிடம் தலை வணங்கி நிற்கிறார் எனக் கூறிப் பரப்பப்பட்ட படத்தை முதலில் குறிவைத்தார் ஹசன்.

பட மூலாதாரம், TWITTER
ஆனால் உண்மையில், 2015-ம் ஆண்டு ஹோண்டா நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது வணக்கம் வைக்கும் புகைப்படம் இது.
இந்த படத்தை ரீ-ட்வீட் செய்த ஹசன், இதன் உண்மையை உடைத்தார். ஹோண்டாவின் லோகோ பின்னால் இருப்பதைப் புகைப்படத்தில் பார்க்கலாம்.
''கட்டுக்கதையுடன் பரப்பப்பட்ட இந்த புகைப்படம் 1200 பேரால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது. ஆனால், உண்மையைக் கூறிய பதிவிற்கு எத்தனை ரீ-ட்வீட் கிடைக்கும்'' என்று புலம்புகிறார் ஹசன்.
ஜப்பானியர்களால் மூன்று நிமிடங்களில் தங்களது பாஸ்போர்ட்டை தானாக அச்சிட முடியாது என்றும், உணவகங்களில் கண்ணாடி கூண்டுகளில் மட்டுமே புகைபிடிக்க முடியும் என கூறுவது தவறு என்றும் பல ட்வீட்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், @THEARABHASH
''இந்த புகைப்பிடித்தல் புகைப்படம் ஒரு அமெரிக்க நகைச்சுவை செய்தி வலைதளத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது. இதற்கும் ஜப்பானுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை'' என்கிறார் ஹசன்
ஜப்பானை பற்றிய இதுபோன்ற தவறான கருத்துகள் கேலிக்காக பரப்பப்படுவதாகத் தெரியவில்லை. அரபு மொழி பேசும் நாடுகளில் ஜப்பானுக்கு அதிக மரியாதை இருப்பதன் அறிகுறிகள் இவை.
''ஜப்பானும் ஒரு சாதாரண நாடுதான். இங்குள்ள மக்களுக்கும் நல்ல, கெட்ட பழக்கங்கள் உள்ளன என அரபு மக்களிடம் புரிய வைக்க விரும்புகிறோம். ஜப்பான் கலாசாரத்திற்கு உயர்ந்த அம்சங்கள் உள்ளன. ஆனால், இந்த கட்டுக்கதைகள் அதை சிதைக்கின்றன'' என்கிறார் அவர்.

பட மூலாதாரம், @ALRA
ஜப்பானை பற்றிய தவறான கருத்துக்கள் பிரஞ்ச், ஆங்கில சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பரப்பப்படுகின்றன என்கின்றார் அவர்.
ஜப்பானில் உள்ள அற்புதமான நீரூற்று எனக் கூறி, ட்விட்டரால் அங்கீகரிக்கப்பட்ட கணக்கில் இருந்து ஒரு வீடியோ பதிவிடப்பட்டுள்ளது.
இந்த 3டி டிஜிட்டல் வடிவமைப்பு ஒரு அமெரிக்க கலைஞரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது எனக் கூறும் ஹசன்,'' இதுபோன்ற ஒரு நீரூற்று ஜப்பானில் மட்டுமல்ல, உலகில் எங்கும் இல்லை'' என்கிறார்.
இந்த திருத்தங்களுக்கு மக்களின் எதிர்வினை என்ன? தெரிந்து வைத்திருந்த கருத்துக்கள் உண்மை இல்லை என தெரிந்து பலர் அதிர்ச்சியடைந்தனர் என்கிறார் ஹசன்.
''சீன கம்யூனிஸ்ட் மாநாட்டின் புகைப்படத்தை, ஜப்பான் நாடாளுமன்றம் எனக் கூறி ஒரு பிரபல அரேபிய தொலைக்காட்சி நிறுவனம் ஒருமுறை ட்வீட் செய்திருந்தது. ஜப்பானை பற்றிய எவ்வளவு மோசமான தகவல் இது. இதை சரி செய்யவே நாங்கள் இருக்கிறோம்'' என்கிறார் ஹசன்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












