ராணுவ வீரர்களின் ரகசிய நடவடிக்கைகளை வெளியிட்ட செயலியால் பரபரப்பு

பட மூலாதாரம், Strava
உலகம் முழுவதுமுள்ள ராணுவ வீரர்கள் தங்களுக்கு தெரியாமலேயே தாங்கள் ராணுவ முகாம்களின் உள்ளேயும், வெளியேயும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி பாதைகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
உடற்பயிற்சி கண்காணிப்பு இணையதளமான ஸ்ட்ராவா, தனது சேவையை பயன்படுத்துபவர்கள் மேற்கொள்ளும் ஓடுதல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக இந்த இணையதளத்தின் சேவையை பயன்படுத்தும் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செயல்படும் வெளிநாடுகளின் ராணுவ தளங்களில் பணியாற்றும் வீரர்களின் செயல்பாடுகளின் மூலம் அதன் வரைபடத்தை வெளியிட்டுள்ளது ஸ்ட்ராவா.
ஸ்ட்ராவா வெளியிட்டுள்ள வரைபடம் குறித்து அமெரிக்க ராணுவம் ஆராய்ந்து வருவதாக அதன் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட தரவுகளாக குறிக்கப்பட்ட கணக்குகளின் செயல்பாடுகள் இந்த வரைபடத்தில் சேர்க்கப்படவில்லை என்று ஸ்ட்ராவா தெரிவித்துள்ளது.
ஸ்ட்ராவாவை பயன்படுத்துபவர்கள் தங்களது செயல்பாடுகளை பொதுவெளியில் பகிர்வதற்கும், தனிப்பட்டதாக வைத்துக்கொள்வதற்கும் தெரிவுகள் உள்ளன. தனிப்பட்டதாக குறிக்கப்பட்ட கணக்குகளின் விவரங்கள் இதுபோன்ற அறிக்கைகளில் பயன்படுத்தப்படுவதில்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைபடமானது உலகம் முழுவதுமுள்ள பல ராணுவ வீரர்கள் தங்களது செயல்பாடுகளை பொதுவெளியில் பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை காட்டுகிறது.
இதுபோன்ற வரைபடங்களின் சமீபத்திய பதிப்பு கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதமே வெளிவந்துவிட்டது என்றாலும், இதன் காரணமாக ராணுவ வீரர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து தற்போதுதான் பேசப்பட்டு வருகிறது.
தான் வரைபடக்கலை சார்ந்த வலைப்பதிவுகளை பார்க்கும்போது இந்த வரைபடத்தை கண்டதாக கூறுகிறார் இந்த செய்தி மீண்டும் விவாதத்திற்குள்ளாவதற்கு காரணமான ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாணவர் நாதன் ருசர் என்பவர்.

பட மூலாதாரம், Strava
"அதை நான் பார்த்தவுடனேயே அது அங்கே இருக்கக்கூடாது என்று எண்ணினேன்" என்று பிபிசியிடம் பேசிய அந்த மாணவர் கூறினார்.
ராணுவ தளங்களின் இருப்பிடங்கள் ஏற்கனவே உள்ள தகவல் தளங்கள் மற்றும் கூகுள் எர்த் போன்ற நிகழ்கால இருப்பிடம் அறியும் சேவை அளிக்கும் இணையதளங்கள் வாயிலாக அறியவியலும்.
மேற்கூறியவற்றையெல்லாம் தவிர்த்து, இந்த வரைபடத்தினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு காரணமே, அதில் ராணுவ வீரர்கள் மேற்கொண்ட பயிற்சியின் அளவீடு மற்றும் அவர்கள் ராணுவத் தளங்களுக்குள்ளே மேற்கொண்ட நடவடிக்கைகளையும் தெரிவிக்கிறது என்பதேயாகும்.
சிரியா மற்றும் இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் தளங்கள், பால்க்லாந்திலுள்ள பிரிட்டனின் தளம் மற்றும் நைஜரிலுள்ள பிரான்சின் தளமும் இந்த வரைபடத்தின் மூலம் தெரியவந்துள்ளது. சிரியாவின் மெமிம் பகுதியிலுள்ள ரஷ்யாவின் ராணுவ தளத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சார்ந்த வரைபடமும் வெளிவந்துள்ளது.
லட்சக்கணக்கானோர் தாங்கள் உடற்பயிற்சி செய்யும்போது அந்த இடம் சார்ந்த தரவை பிட்னெஸ் ட்ராக்கர்களை மணிக்கட்டில் அணிந்துக் கொண்டோ அல்லது தங்களது திறன்பேசிகளின் வழியாகவோ அளிக்கின்றனர். அவ்வாறு பெறப்படும் தகவல்கள் தானாகவே பதிவேற்றம் செய்யப்படுகிறது.
ஸ்ட்ராவா தான் நவம்பர் மாதம் வெளியிட்ட வரைபடத்திற்காக 100 கோடி செயல்பாடுகள், அதாவது 27 பில்லியன் கிலோ மீட்டர்கள் மேற்கொள்ளப்பட்ட ஓட்டம், தொடர் நடைப்பயிற்சி அல்லது நீச்சலின் மூலம் மூன்று ட்ரில்லியன் தரவுகளை திரட்டி உருவாக்கி பதிப்பித்துள்ளது என்று பொறியியல் வலைப்பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஸ்ட்ராவா வெளியிட்டுள்ள விளக்கத்தில், இவ்விவகாரத்தில் "தனிப்பட்ட தகவல்கள் சார்ந்த தரவுகளாக பயனர்களால் குறிக்கப்பட்டவை வரைபடத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதது" பற்றிய குறிப்பிடப்படுவதில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது.
"மக்களுக்கு எங்களது செயலியின் செயல்பாடுகளை விளக்குவதன் மூலம் அவர்கள் எதை பகிர்கிறார்கள் என்பது குறித்த கட்டுப்பாட்டை அளிப்பதற்கு நாங்கள் உதவுகிறோம்" என்று ஸ்ட்ராவா மேலும் விவரித்துள்ளது.
ஸ்ட்ராவா செயலியில் பயனர்கள் தாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கு விருப்பமில்லையென்றால் அதிலிருந்து விலகுவதற்குரிய தெரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், உடற்பயிற்சி மேற்கொள்ளும் சில பகுதிகளை மட்டும் பதிவு செய்யாமல் தனிப்பட்ட பகுதிகளாக குறித்து வைப்பதற்குரிய தெரிவும் அதில் கொடுக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












