''பேருந்து கட்டண குறைப்பு கண்துடைப்பு நடவடிக்கை'' - ஸ்டாலின்
பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளதாக தமிழக அரசு செய்துள்ள அறிவிப்பு ஒரு கண்துடைப்பு நடவடிக்கை என்றும் உயர்த்தப்பட்ட கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெறாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களை நடத்தப்போவதாக திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், DMK
கடந்த ஜனவரி 20ம் தேதி சுமார் அறுபது சதவீதம் வரை உயர்த்தப்பட்ட பேருந்துக் கட்டணத்தில், சிறிதளவு குறைக்கப்பட்டு, புதிய கட்டண விவரம் நேற்று(ஜனவரி 28)அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னையில் குறைந்தபட்ச கட்டணம் ரூ 5 ஆகவும், பிற மாவட்டங்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.4 ஆகவும், விரைவு மற்றும் சொகுசு பேருந்து கட்டணங்களில் ஐந்து பைசா வரை குறைக்கப்பட்டுள்ளது என்று அரசு அறிவித்தது.
தமிழகத்தில் ஆறாயிரம் வழித்தடங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் தினமும் சுமார் இரண்டு கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளாக உயர்த்தப்படாத பேருந்து கட்டணம் இந்த ஆண்டு கட்டாயமாக உயர்த்தவேண்டிய நிலை ஏற்பட்டதால், கட்டண உயர்வு தவிர்க்கமுடியாதது என்று அரசு தெரிவித்திருந்தது.
எரிபொருள் செலவு, பேருந்துகளை இயக்கும் செலவு, ஊழியர் சம்பளம் என பல காரணங்களை அரசு தெரிவித்தாலும், சமீபத்தில் எம்எல்ஏகளின் மாதசம்பளத்தை ரூ.1.05 லட்சமாக உயர்த்திக்கொண்ட அதிமுக அரசு, பொதுமக்களிடம் அதிக கட்டணத்தை பெருமளவு உயர்த்தியுள்ளது கண்டிக்கத்தக்கது என்று போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் விமர்சனம் செய்தன. சமூக வலைதளங்களிலும் கருத்துக்கள் வெளியாகின.

பட மூலாதாரம், DMK
இதனைத் தொடர்ந்து, அறுபது சதவீதம்வரை உயரத்தப்பட்ட கட்டணம் பெயரளவில் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது என்று கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று (ஜனவரி 29) எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல்தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், மதிமுக தலைவர் வைகோ, உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கொளத்தூர் பகுதியில் மறியல் போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், உயரத்தப்பட்ட பேருந்து கட்டணம் குறைக்காவிட்டால், அனைத்துக் கட்சியினர் இணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கூறினார்.
''தமிழக அரசு ஒரு கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. விரைவு மற்றும் சொகுசு பேருந்து கட்டணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கிலோ மீட்டருக்கு 32 பைசாவாக இருந்தது. இப்போது 80 பைசாவாக உயர்த்தப்பட்டது. அதாவது 48 பைசா ஏற்றிவிட்டு, இப்போது ஐந்து பைசா குறைத்திருக்கிறார்கள். அதிசொகுசு பேருந்து கட்டணம் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கிலோ மீட்டருக்கு 38 பைசாவாக இருந்தது. இப்போது 90 பைசாவாக உயர்த்தப்பட்டது. 52 பைசா ஏற்றிவிட்டு, இப்போது வெறும் ஐந்து பைசா குறைத்திருக்கிறார்கள். இப்படியொரு கபட நாடகத்தை நடத்தியிருக்கிறார்கள். இதை நாங்களும் நம்பவில்லை, பொதுமக்களும் நம்புவதற்குத் தயாராக இல்லை,'' என்று அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் பல்வேறு மாணவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதோடு சென்னை,கோவை, மன்னார்குடி, கும்பகோணம், திருப்பூர் என பல இடங்களில் அரசுக்கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், DMK
இதற்கிடையில், மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழக அரசு சிறிதளவு கட்டணத்தைக் குறைத்திருந்தாலும், எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே போராட்டத்தில் ஈடுபடுகின்றனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதிதாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்து துறைக்கு தினமும் ரூ. நான்கு கோடி வரை அதிகசெலவாகும் நிலையிலும் அரசு அந்த சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது என்றார். போக்குவரத்து துறை சந்தித்துவரும் நஷ்டம் குறித்து போராட்டம் நடத்தும் திமுகவுக்கும் தெரியும் என்றும் தமிழகத்தில் உயரத்தப்பட்ட பேருந்து கட்டணம் பிற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் குறைவு என்றும் முதல்வர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பிற செய்திகள்:
- குப்பைக்கு பதிலாய் கோலங்கள்: வண்ணமயமாகும் மாநகரம்
- விற்பனைக்கு ட்விட்டர் `லைக்ஸ்`: விசாரணைக்கு உத்தரவு
- வேறு சுகம் தேடிச்சென்ற கணவன்.. என்ன செய்தாள் இந்தப் பெண் #HerChoice
- 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார் ரோஜர் பெடரர்
- காந்தியின் மதம் என்னவென்று உங்களுக்கு தெரியுமா?
- ஆண்களை அச்சுறுத்துகிறதா பெண்களின் அரசியல் பிரவேசம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












