ரவுண்டிங் ஆஃப், ஜிஎஸ்டி , இழப்பீடு நிதியம் - பேருந்து கட்டண உயர்வு நியாயமானதா?
- எழுதியவர், விவேக் ஆனந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகத்தில் தினமும் 2.02 கோடி பேர் பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 88.64 லட்சம் கி.மீ தூரத்துக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 22,509 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த போக்குவரத்துக் கழகங்களில் வரவுக்கும் செலவுக்கும் இடைவெளி இருப்பதால் நாள் ஒன்றுக்கு ஒன்பது கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக கூறி கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (19.01.18) அன்று பேருந்துக் கட்டண உயர்வு அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு .
மேலும் தமிழக அரசுப் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு வழங்கவும் சுங்கக் கட்டணங்களை செலுத்தவும் புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்நிலையில் இந்த கட்டண உயர்வை எதிர்த்து தமிழகத்தில் ஆங்காகே மாணவர்கள், திமுக உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்புகளைக் காட்டியும், போராட்டம் நடத்தியும் வருகின்றனர்.
பேருந்து கட்டண உயர்வு குறித்து ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான தேவசகாயம் ஐஏஎஸ் பிபிசி தமிழிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
'' தமிழகத்தில் தற்போது முறையான அரசு நிர்வாகமே இல்லை. நாட்களை கடத்தினால் போதும் என்ற நிலையில் ஓர் அரசு இருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அரசு இயந்திரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லை. அதிகாரிகளுக்கு பிரத்யேக அதிகாரங்களோ புதுமைகளை புகுத்தி திறம்பட ஒரு துறையை இயக்குவதற்கான சூழலோ தற்போது இல்லை. தமிழகத்தில் ஓர் அடிப்படை அரசோ, தொலைநோக்குப் பார்வையோ புதுமைகளோ திறம்பட இயக்கும் நிர்வாகமோ இல்லை.
ஒரு காலத்தில் இந்திய அளவில் போக்குவரத்து துறையில் தமிழகம் சிறப்பாக விளங்கியது. தற்போது புற்றுசெல்களைப் போல ஊழல் அனைத்து துறைகளிலும் பரவி பாதிக்கத் துவங்கியிருக்கிறது.
பொதுப் போக்குவரத்து லாபத்தை அபரிமிதமாக சம்பாதிக்க வேண்டிய துறை அல்ல. அதே சமயம் துறையை எந்தவிதத்திலும் நஷ்டமாக நடத்த வேண்டிய தேவையும் கிடையாது. பேருந்தைச் சரியாக இயக்காமல் இருப்பது, எரிபொருளை திறம்பட பயன்படுத்தாமை போன்றவையும் நஷ்டத்திற்கு காரணங்களே.
போக்குவரத்து மிகவும் முக்கியமான சேவை. மக்கள் எந்தவொரு வேலை தொடர்பாக பயணிப்பதற்கும் தேவையான அடிப்படைத் தேவை பொது போக்குவரத்து. ஒரு துறை நஷ்டத்தில் இருந்து மீள்வதற்கு செலவைக் குறைப்பதும், வீண் செலவுகளை நிறுத்துவதும் முக்கியமானது. அதைத் தொடர்ந்து தவிர்க்க முடியாத வகையில் செலவுகள் எகிறினால் மட்டுமே விலையேற்றம் அறிவிக்க வேண்டும்.

டீசலுக்கு தேவையின்றி பணம் வீண் விரயம் ஆகிறது. மத்திய அரசு மாநில அரசு இரண்டுமே பெட்ரோல் மற்றும் டீசலுக்கு வரி விதிக்கின்றன. இந்த பணம் எங்கே போனது என யாருக்கும் தெரியாது. ஒரு லிட்டரில் 15 -20 ரூபாய் அளவுக்கு வரி வசூலிப்பில் அரசுக்கு கிடைத்துவிடுகிறது. இதைக் குறைத்தாலே போக்குவரத்து துறை நஷ்டம் குறையும், பயணச் சீட்டு விலையையும் குறைக்க முடியும் என்றார் தேவசகாயம்.
எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கை காட்டுகிறது மாநில அரசு. ஆனால் மாநில அரசு எந்தவித புதுமையையும் சிக்கன நடவடிக்கையையும் எப்படி திறம்பட ஓர் துறையை இயக்குவது என்பது பற்றிய புரிதல் இல்லாமலும் இருக்கிறது. ஒரு மாபெரும் ஊழல் சாம்ராஜ்யமாக இருக்கிறது'' என்றார் அவர்.
பொதுப் போக்குவரத்து துறையை நஷ்டமின்றி லாபகரமாக இயக்குவது குறித்து தொடர்ந்து பேசிய தேவசகாயம் ஐ ஏ எஸ் '' முதலில் செலவுகளை குறைக்கும் வேலையில் ஈடுபடவேண்டும். பிறகு தவிர்க்கமுடியாத சூழ்நிலையில் வருடத்துக்கு சில பைசாக்கள் என்றஅளவில் கொஞ்சம் கொஞ்சமாக கட்டண உயர்வு செய்ய வேண்டும்,'' என்றார்.
இந்த விலை உயர்வினால், இனி நஷ்டம் குறைந்து பொதுப் போக்குவரத்து துறை லாபத்தில் இயங்குமா என தேவசகாயத்திடம் கேட்டபோது, '' பேருந்து கட்டண உயர்வால் முதலில் பயணிகள் எண்ணிக்கை 25% அளவுக்கு குறைய வாய்ப்பிருக்கிறது. ஆகவே உடனடியாக வருமானம் கூடிவிடாது. எதிர்பார்த்த வருமானம் வராது. நான்கு முதல் ஆறு மாதங்கள் கழித்தே அரசுக்கு இந்தப் பேருந்து கட்டண உயர்வால் கூடுதல் வருமானம் கிடைத்து லாபம் அதிகரிக்கிறதா என்பதை அந்தத் துறை கணக்கிட்டுச் சொல்ல முடியும்.
கட்டண உயர்வு வீதத்திற்கு ஏற்ப பேருந்து பயணிகளின் எண்ணிக்கை முதலில் குறையும். அடிக்கடி செல்ல வேண்டிய பயணத்தை தவிர்க்கத் துவங்குவார்கள். ரயில் போன்ற மாற்று வழிகளை நாடுவார்கள். அவசியத் தேவைகளுக்கு மட்டுமே பேருந்தில் செல்வார்கள். இது முக்கியமான பிரச்னை. ஒருவேளை வருமானம் கூடினாலும் கூட நிர்வாகம் சீரமைக்கப்பட்டு, செலவு குறைப்பு மற்றும் புதுமைகளை புகுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்காவிடில் மீண்டும் வேதாளம் முருங்கைமரத்தில் ஏறிய கதைதான் நடக்கும் '' என்று கூறினார்.
இந்தக் கட்டண உயர்வு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய, கோவை மாவட்ட நுகர்வோர் நல சங்கத்தின் செயலர் கதிர்மதியோன். ''அரசாணையில் அறிவிக்கப்பட்ட கட்டணமும் களத்தில் வசூலிக்கப்படும் கட்டணமும் முற்றிலும் வேறாக இருக்கிறது. பழைய டிக்கெட் விலையை விட தற்போது வசூலிக்கப்படும் தொகையானது 60% முதல் 125% வரை அதிகரித்துள்ளது என்பதே யதார்த்தம். பேருந்து பயண கட்டண உயர்வை முடிவு செய்த அதிகாரிகள் பேருந்தில் தொடர்ந்து பல நாட்கள் பயணம் செய்தவர்களல்லர்.

சமூகத்தில் நடுத்தர வர்க்கத்தினர் சிலர் கூட பேருந்தில் அடிக்கடி பயணிப்பது கிடையாது. இரு சக்கர வாகனம் முதலான மற்ற போக்குவரத்து சாதனங்களை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கீழ் நடுத்த வர்க்கத்தினரும் அடித்தட்டு மக்களும் நாள் கூலி வாரக்கூலிக்கு வேலை செல்பவர்களும் அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்பவர்களும் தொடர்ச்சியாக பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த பேருந்து கட்டண உயர்வால் இவர்களுக்கு ஏற்பட்ட வலியை பேருந்து கட்டண உயர்வை அமல்படுத்தியவர்கள் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை'' என்றார்.
ரவுண்ட் ஆஃப் குளறுபடி
''இந்த பேருந்து கட்டண உயர்விலும் சில குளறுபடிகள் நடந்திருக்கின்றன. ஒரு பயணச் சீட்டின் விலை 9.90 காசுகள் எனில் 90 காசுகள் தர நாணயப் புழக்கம் இல்லாததால் பத்து ரூபாயாக வசூலிப்பார்கள். இதனை ரவுண்டிங் ஆஃப் முறை என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த ரவுண்டிங் ஆஃப் முறையில் தற்போது முறைகேடுகள் நடந்து வருகின்றன. பொதுவாக ஐம்பது காசுக்கு மேற்பட்ட விலை எனில் உதாரணமாக 9.55 காசுகள் என்பது ஓர் பயணச் சீட்டின் விலை எனில், ரவுண்டிங் ஆஃப் முறையில் மீதமுள்ள 45 காசும் நுகர்வோரிடம் இருந்தே வசூலிக்கப்படும். ஒருவேளை பயணச் சீட்டின் விலை 9.18 காசு எனில் நுகர்வோரிடம் இருந்து 9 ரூபாய் மட்டுமே வாங்கவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images
ஆனால், தற்போதைய புதிய கட்டண உயர்வு அடிப்படையில் கிலோமீட்டருக்கான விலையின் அடிப்படையில் சில பயணச் சீட்டுகள் விலை முழு ரூபாயைத் தாண்டி சில காசுகள் உயர்ந்திருந்தாலும் ரவுண்டிங் ஆஃப் முறையில் நுகர்வோரே மீதமுள்ள காசையும் தர வேண்டியதாக இருக்கிறது. உதாரணமாக ஒரு பயணச் சீட்டின் விலை 9.02 காசு எனில் அந்த பயணச் சீட்டின் விலை 10 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது'' என ரவுண்டிங் ஆஃப் குளறுபடி குறித்து விவரிக்கிறார் கதிர்மதியோன்.
வார இறுதி கூடுதல் கட்டணம்
''பொதுவாக விழாக்காலங்களில் ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தாகச் சொல்லி சில பேருந்துகளுக்கு அபராதம் வசூலித்ததாக தமிழக அரசு சார்பில் கூறப்படும். தற்போது வெளிவந்துள்ள புதிய அரசாணையில் விழாக்காலங்கள், பண்டிகை நாட்கள் மற்றும் அதையொட்டிய வார இறுதி நாட்கள் போன்றவற்றில் வழக்கமான கட்டணத்தை விட ஒன்றரை மடங்கு கட்டணம் வசூலிக்க அரசே வழிவகை செய்துள்ளது'' எனக் கூறினார் கதிர்மதியோன்.
ஆண்டுக்கு 1460 கோடியா இழப்பீடு தேவை?
இழப்பீட்டுக்காக புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டதை ''மோசடி'' எனக் குறிப்பிட்ட கதிர்மதியோன் ''யார் வாகனம் வைத்திருந்தாலும் காப்பீடு மற்றும் இழப்பீடு போன்றவற்றுக்கான தொகையை சம்பந்தப்பட்ட நபரே செலுத்த வேண்டும்.

இந்நிலையில், தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பேருந்து கட்டண உயர்வு அறிவிப்பில் விபத்துகளால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை சரியான நேரத்தில் வழங்க முடியாததால் தற்போது 652 அரசுப் பேருந்துகள் பிணையில் இருப்பதாகவும் அதற்காக புதிய நிதியம் உருவாக்க ஒவ்வொரு பயணச் சீட்டிற்கும் நகரப் பேருந்துகளுக்கு ஒரு ரூபாயும் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் 25 ரூபாய் கட்டணத்துக்கு ஒரு ருபாய் என்ற வீதத்தில் கூடுதல் கட்டணம் பயணிகளிடமிருந்து வசூலிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
அரசுப் பேருந்துகள் விபத்து ஏற்படுத்தினாலும் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டிய சுமை இப்போது பொதுமக்கள் தலையில் விழுந்துந்துள்ளது. ஒரு நாளில் இரண்டு கோடி பேர் பயணம் செய்யும் நிலையில் ஒரு டிக்கெட்டுக்கு சராசரியாக இரண்டு ரூபாய் இழப்பீடுக்கான நிதியத்துக்குச் செல்வதாக வைத்துக்கொண்டால் கூட மாதத்திற்கு 120 கோடி ரூபாய், ஆண்டுக்கு சுமார் 1460 கோடி வசூலாகும். இந்த அளவுக்கு இழப்பீடு தேவைப்படும் அளவுக்கா தமிழகத்தில் விபத்துகள் நடக்கின்றன? அல்லது அப்படியொரு நிலையில் தமிழக பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? என்ற கேள்வி எழுகிறது'' என்றார்.
விதிகள் பின்பற்றப்படவில்லை
''ஒரு பேருந்துக்கு அனுமதி கொடுப்பது, டிக்கெட் விலையை நிர்ணயப்பது உள்ளிட்ட விஷயங்களில் பல விதிகள், நடைமுறைகள் உள்ளன. அவை எதுவும் முறையாக பின்பற்றப்படுவதே இல்லை. கோயமுத்தூரில் மட்டும் பேருந்துகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வாங்குகின்றன என்பதை நுகர்வோர் என்ற முறையில் நான் ஆதாரத்துடன் புகார் அளித்ததில் ஆயிரத்துக்கும் அதிகமான அரசு பேருந்துகள் அபராதம் கட்டியுள்ளன.

இவ்வளவு நடந்தும் மீண்டும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அரசு பேருந்துகள் அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன. காலத்திற்கு ஏற்ப, விலைவாசி உயர்வுகளுக்கு ஏற்ப பயணக் கட்டணம் உயர்வதில் தவறில்லை. நான் கடந்த ஆண்டு அரசுக்கு பேருந்து கட்டணத்தை உயர்த்தச் சொல்லி கடிதமும் எழுதியிருக்கிறேன். ஆனால் அரசாணையில் கூறப்பட்டுள்ள கட்டண உயர்வும் நிஜத்தில் வசூலிக்கப்படும் கட்டணத்திற்கும் இடையில் வேறுபாடு இருப்பதும், கூடுதல் விலை கொடுத்தும் அரசு பேருந்தில் நல்ல சேவையை பெறமுடியாமல் போவதும் நுகர்வோர்களை நொந்து போக வைத்துள்ளது'' என்கிறார் கதிர்மதியோன்.
சிஐடியூ தொழிற்சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சவுந்திரராஜன் இந்த விலை உயர்வு மற்றும் இதன் விளைவுகள் பற்றி பிபிசி தமிழிடம் பேசியபோது ''அரசு நிர்வாகம் சரியில்லை. ஒரு பக்கம் தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை சரியாக வழங்காமல் வட்டியைத் தராமல் இழுத்தடிக்கும் அரசு இப்போது பேருந்துக் கட்டணத்தையும் உயர்த்தி மக்களையும் சிரமத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
வரி உயர்வுக்கு மேல் விலை உயர்வு
மத்திய அரசு பல பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிகபட்ச ஜிஎஸ்டி வரியாக 28% விதித்தாலும் கூட போக்குவரத்து கழகங்களின் செலவு பெருமளவு குறைந்துவிடும். நஷ்டத்தை கண்டிப்பாக குறிப்பிடத்தக்க அளவில் சரிகட்டிவிட முடியும். இந்த நடைமுறைகள் மக்கள் மீது மீண்டும் மீண்டும் வரியை சுமத்துவதாக அமைகின்றன. ஒரு பக்கம் டீசலுக்கு அதிக வரி. அதைக்காட்டி பயணச் சீட்டுக்கு கடுமையாக விலை உயர்வு என அரசு அறிவித்திருக்கிறது.

விலைவாசி உயர்வுக்கு மிக முக்கியக் காரணமே பெட்ரோல், டீசலுக்கு விதிக்கப்படும் அதிக வரிகளே. பேருந்துகள் ஈட்டும் லாபத்தில் சுமார் 50% அளவுக்கு டீசலுக்கே செலவாகிவிடுகிறது. இதனை அரசு கண்டுகொள்வதில்லை. போக்குவரத்து துறை மக்களுக்கு சேவை செய்யும் துறை. அப்படியானால் எதற்காக டீசலுக்கு இவ்வளவு வரி?'' என என கேள்வி எழுப்பினார்.
"நிர்வாகம் சரியில்லாததே செலவுகள் கூடக் காரணம்"
'''அரசிடம் தொலைநோக்குப் பார்வை இல்லை. அரசு வரி உயர்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டது. ஆனால் பயணிகளின் எதிர்வினைகளை சந்திக்க வேண்டியது போக்குவரத்து தொழிலாளர்களே. பயணிகளிடம் பொறுமையாக நடந்துக் கொள்ளும்படியே நாங்கள் போக்குவரத்து தொழிலாளர்களிடம் அறிவுறுத்தியிருக்கிறோம்.
பழுதான பழைய பேருந்துகள், டயர் உட்பட பழுதான உதிரி பாகங்களுக்கு கூட மாற்றாக தரமான உதிரி பாகங்கள் பொருத்த வழி இல்லாத நிலை நீடித்துவரும் நிலையில், இதே நிலை தொடரும்போது செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் என்பதே யதார்த்தம். போக்குவரத்து தொழிலாளர்களால் எந்த வித நஷ்டமும் கிடையாது. அவர்கள் கூடுமானவரை சிக்கனத்தை கடைபிடிக்கிறார்கள் . நிர்வாகம் சரியில்லை என்பதே போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்க காரணம்'' என சவுந்திரராஜன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அரசுக் கல்லூரி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் சலுகையும், தனியார் கல்லூரி மாணவர்களுக்கான 50% கட்டண சலுகை ஆகியவை தொடர்ந்து வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு செலவாகும் ரூ540.99 கோடி நிதியை தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானியமாக வழங்கும் எனவும், கட்டண உயர்வால் பொது மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை கருத்தில் கொண்டு 498 விரைவு மற்றும் சொகுசுப் பேருந்துகள், சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளாக மாற்றம் செய்யப்பட்டு அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
அண்மையில் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை எதிர்த்து தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வரும் சூழ்நிலையில், தமிழக அரசு பேருந்து கட்டணத்தை குறைத்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












