தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் கடும் உயர்வு

தமிழகத்தில் உள்ள பொதுப் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துக் கட்டணங்கள் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளன. சனிக்கிழமை முதல் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

பஸ்

பட மூலாதாரம், Getty Images

தொடர்ந்து இழப்பைச் சந்தித்துவருவதால் இந்தக் கட்டண உயர்வு அமலுக்குவருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின்படி, வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் 30 கி.மீ. தூரத்திற்கு முன்பு 17 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 24 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சொகுசுப் பேருந்துகளில் 30 கி.மீக்கு 18 ரூபாயாக இருந்த கட்டணம் 27 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகளில் 30 கி.மீ. தூரத்திற்கு 27 ரூபாயாக இருந்த கட்டணம் 42 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

நகரப் பேருந்துகளைப் பொறுத்தவரை சென்னை நகரில் குறைந்தபட்சக் கட்டணமாக இதுவரை 3 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது அது 5 ரூபாயாகவும் அதிகபட்சக் கட்டணம் 14 ரூபாயிலிருந்து 23 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

பிற மாவட்டங்களில் குறைந்தபட்சக் கட்டணம் 3 ரூபாயிலிருந்து 5 ரூபாயாகவும் அதிகபட்சக் கட்டணம் 12 ரூபாயிலிருந்து 19 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

உள்ளூர் குளிர்சாதன பேருந்துகளில் குறைந்தபட்சக் கட்டணம் 15 ரூபாயிலிருந்து 25 ரூபாயாகவும் அதிகபட்சக் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 150 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய நிதியம்

இவை தவிர, தமிழகத்தில் அரசுப் பேருந்துகளால் ஏற்படும் விபத்துகளில் இழப்பீடு வழங்கவும் சுங்கக் கட்டணங்களைச் செலுத்தவும் புதிய நிதியம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விபத்துகளால் ஏற்படும் இழப்பீட்டினை சரியான நேரத்தில் வழங்க முடியாததால் தற்போது 652 அரசுப் பேருந்துகள் பிணையில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

பயணியர்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிதியத்திற்காக நகரப் பேருந்துகளில் 1 ரூபாயும் வெளியூர்களுக்குச் செல்லும் பேருந்துகளில் 25 ரூபாய் கட்டணத்திற்கு 1 ரூபாய் என்ற வீதத்திலும் கூடுதல் தீர்வையை வசூலிக்கப்போவதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

இந்தப் புதிய கட்டண உயர்வு ஜனவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருமென தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 22,509 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் போக்குவரத்துக் கழகங்களில் 1,40,615 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 88.64 லட்சம் கி.மீ. தூரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தினமும் 2.02 கோடி பேர் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

இந்தப் போக்குவரத்துக் கழகங்களில் செலவுக்கும் வரவுக்கும் இடைவெளி இருப்பதால் நாள் ஒன்றுக்கு 9 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாக தமிழக அரசு கூறுகிறது.

தமிழகத்தில் இதற்கு முன்பாக பேருந்துக் கட்டணம் 18.11.2011 அன்று அதிகரிக்கப்பட்டது.

தமிழக போக்குவரத்துக் கழகங்களின் இழப்புகளை ஈடுகட்ட தமிழக அரசு மானியமாக 12,059.17 கோடி ரூபாயை அளித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :