ஆண்டாள் : வைரமுத்து மீதான புகார்களை விசாரிக்கத் தடை
பன்னிரு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் குறித்து தாம் எழுதிய கட்டுரை ஒன்றில் கவிஞர் வைரமுத்து எடுத்துக்காட்டியிருந்த மேற்கோள் ஒன்று சர்ச்சை ஆகியுள்ளது. இதையடுத்து அவருக்கு எதிராக காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் மீது போலீசார் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முன்னதாக காலை இவ்வழக்கு குறித்து விசாரித்த உயர்நீதிமன்றம், ஆண்டாள் குறித்த கவிஞர் வைரமுத்துவின் கருத்தில் சர்ச்சைக்குரியதாக ஏதும் இருப்பதாகத் தெரியவில்லையென கருத்துத் தெரிவித்தது.

பட மூலாதாரம், FACEBOOK
கடந்த 8ஆம் தேதியன்று தினமணி நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் தெரிவித்திருப்பதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, வைரமுத்துவுக்கு எதிராக பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா மோசமான வார்த்தைகளில் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் இதன் பின் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதோடு, எதிர்ப்புகளையும் பதிவுசெய்தும் வந்தனர்.
இந்நிலையில், சமூக நல்லிணக்கப் பேரவை என்ற அமைப்பைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் கொளத்தூர் காவல்நிலையத்தில் தனக்கு எதிராக வழக்குப் பதிவுசெய்துள்ளார். அந்த வழக்கை ரத்துசெய்ய வேண்டுமென வைரமுத்து சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டு குழந்தைகள் தமிழை கட்டாயமாக படிக்க வேண்டும் - வைரமுத்து
அந்த வழக்கு இன்று நீதிபதி எம்.எஸ். ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைரமுத்து சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தினமணி கட்டுரையை வாசித்துக் காண்பித்தார்.
இதைக் கேட்ட நீதிபதி, இதில் வைரமுத்து தானாக சர்ச்சைக்குரிய எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. வேறொருவர் எழுதியதையே அவர் மேற்கோள் காட்டியிருக்கிறார். இதில் குற்றவியல் சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? என்று காலை அமர்வின்போது நீதிபதி கருத்துத் தெரிவித்தார்.
மீண்டும் பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைரமுத்து தவறாக ஏதும் பேசவில்லையென்பதை வைரமுத்துவின் வழக்கறிஞர் மீண்டும் சுட்டிக்காட்டினார். இது தொடர்பாக பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வேண்டுமென்றும் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக்கூடாது என்றும் கோரப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் அரசுத் தரப்பு தனது கருத்தை முன்வைக்க வேண்டுமென்று கூறி, வழக்கை அன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார். அதுவரை வைரமுத்துவுக்கு எதிரான வழக்குகளை காவல்நிலையங்களில் விசாரிக்கக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













