களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

''அவனியாபுரம் ஜல்லிக்கட்டை என் ஆறு வயது மகள் ஹர்ஷிதாவுக்கு தொலைக்காட்சியில் காண்பித்தேன். நேரில் காணவேண்டும் என்று தனது ஆசையை கூறினாள். நானும், கணவர் அமல்ராஜும் உடனே முடிவு செய்து குழந்தைகளை கூட்டிக்கொண்டு அலங்காநல்லூருக்கு வந்துவிட்டோம். இது வித்தியாசமான அனுபவமாக இருந்தது'' என்றார் விசாலாட்சி.

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

அண்மையில் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காண குடும்பத்துடன் வெளியூரில் இருந்து வந்த பெண் கூறியது இது. இதே வேளையில், கடந்த ஆண்டு என்ன நடந்தது என்று சற்றே பின்னோக்கி பார்ப்போம்.

ஜல்லிக்கட்டு நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தமிழ்நாட்டில் 2017-ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டங்களும், அதன்பின் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டமும் ஒட்டுமொத்த இந்தியாவையும் கவனிக்க வைத்தது. தொடர்ந்து அந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் சில இடங்களில் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த ஆண்டின் (2018) முதல் ஜல்லிக்கட்டு போட்டி கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர், பொங்கல் பண்டிகை காலகட்டத்தில் மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் போன்ற ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற பகுதிகளில் இந்த போட்டிகள் நடைபெற்றன.

இதுவரை இல்லாத அளவில், இந்த ஆண்டு தமிழக முதல்வர் நேரடியாக அலங்காநல்லூர் வந்து ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வைத்தார். அதேபோல, மாடுபிடி வீரர்கள் யாரும் இறந்துபோகாமல், பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்பட்டு நேர்த்தியான முறையில் போட்டிகள் இந்த ஆண்டு நடைபெற்றன என மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டிகளைப் பார்க்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்திருந்தனர் என்று நம்புவதாக ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் தெரிவித்தார்.

விழா கோலம் பூண்ட கிராமங்கள்

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்குச் செல்லும் வழிகளில் காளைகளை வாழ்த்தி பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

அவனியாபுரம் மற்றும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் காலை எட்டு மணிக்கு தொடங்கி நான்கு மணிவரை நடைபெற்றன. அலங்காநல்லூரில் மட்டும் அதிக எண்ணிக்கையில் காளைகள் இருந்ததால், முதல்வரும், துணை முதல்வரும் போட்டியின் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டித்து உத்தரவிட்டனர். இதனால், போட்டி ஒன்பது மணிநேரம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு தொடங்கியதில் இருந்து இறுதிவரை பார்க்க பலர் குடும்பத்துடன் வந்திருந்தனர். மூன்று நாட்களும், காலை ஆறு மணி முதலே பார்வையாளர்கள் வரத்தொடங்கிவிட்டனர். அதோடு மூன்று கிராமங்களிலும் ஆங்காங்கே திரைகள் மூலம் போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன.

விதிகளின்படிநடந்த விளையாட்டு

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

ஒவ்வொரு சுற்றிலும் 75 முதல் நூறு வீரர்கள் என்ற கணக்கில் ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை வீரர்கள் மாற்றப்பட்டனர். குறைந்தபட்சம் இரண்டு காளைகளை பிடித்த நபர் அடுத்த சுற்றிலும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார். அதேபோல இரண்டு நபர்கள் சேர்ந்து ஒரு காளையை பிடித்தால், அந்த காளை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கொம்பு அல்லது வாலை பிடித்த இளைஞர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் காளையின் கழுதைப் பிடித்து தொங்கியதற்காக ஒரு காளையின் உரிமையாளர் ஒருவர், மாடு பிடி வீரரை அடித்தபோது, அவர்கள் இருவரும் அப்புறப்படுத்தப்பட்டனர்.

ஒவ்வொரு காளையும் அதிகபட்சமாக இரண்டு நிமிடங்கள் வரை விளையாட அனுமதிக்கப்பட்டது. வீரர்கள் காளையை வாடிவாசலில் இருந்து பிடித்து பத்து அடி தூரம் செல்லவேண்டும் அல்லது காளை துள்ளினால், மூன்று துள்ளல்கள் வரை காளையை பிடித்தவாறு இருந்தால், அந்த இளைஞர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

முதல் நாள் முதல் காட்சி

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இரண்டாவது சுற்றில் கடைசியாக வந்த லிங்கேஸ்வரன் சிவா என்பவரின் காளை வாடிவாசலில் இருந்து வெளியேற சில நிமிடங்கள் எடுத்தது.

வீரர்கள் சூழ்ந்து நின்றதால், அது வெளியேற அஞ்சுவதாக விழா கமிட்டியினர் அறிவித்து, வீரர்களை ஒதுங்கக் கூறிய சமயத்தில் பாய்ந்துவந்து இரண்டு வீரர்களை இழுத்துச் சென்று வெற்றிபெற்றது.

நான்காவது சுற்றில் பங்கேற்ற வெள்ளைமலைப்பட்டி விஜி என்பவரின் காளை வீரர்களை வென்ற பிறகு, மைதானத்தில் நின்று அவர்களை சிலமணித் துளிகள் பார்த்துவிட்டு, அதன் உரிமையாளர் சைக்கிள் பரிசை வாங்கும்வரை நின்றுவிட்டு, பின்னர் அவருடன் சென்றது.

இந்தப் போட்டியில் வடகம்பட்டி சொக்கன் என்பவர் தனது காளை தோற்றதால் இந்த ஆண்டு முழுவதும் தனக்கு சோதனைகள் தொடரும் என்று வருத்தத்தைத் தெரிவித்தார். ''நன்றாக விளையாடும் என்று எதிர்பார்த்தேன். கடந்த ஆண்டு கொம்பன் வெற்றிபெற்றது. வாடியில் இருந்து வெளியேறவே தாமதம் செய்துவிட்டது அதனால்தான் என் காளையை பிடித்துவிட்டார்கள். இந்த ஆண்டு எனக்கு மோசமான ஆண்டுதான்,'' என்றார்.

ஹைதராபாத்தில் இருந்து மதுரைக்கு

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

அவனியாபுரம் கிராமத்தில் போட்டி நடைபெறும் இடத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. போட்டியில் பங்கேற்று, வெளியேறிய காளைகள் கிராமத்தில் நுழைவதும், காளைக்கு சொந்தமானவர்கள் பரிசுகளுடன் காளைகளை துரத்தி கயறு வீசிப்பிடித்த கட்சிகளும் வெளியூர்களில் இருந்து வந்த பார்வையாளர்களுக்கு வியப்பை ஏற்படுத்தின.

ஜல்லிக்கட்டு மைதானத்தில் துள்ளிக்குதித்து, வீரர்களை முட்டிமோதிய காளைகள், அரங்கை விட்டுவெளியே வந்ததும், உரிமையாளர்களின் கட்டளையை ஏற்று, கயிற்றை ஏற்றுக்கொண்டு அமைதியாக நடந்து சென்றதும் வியப்பாக இருந்தது என்கிறார் ஹைதராபாத்தில் இருந்து போட்டிகளைப் பார்க்க வந்த ராகுல்.

'மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆவலில் வந்தேன். ஆண்டுக்கு ஒரு முறைமட்டுமே நடக்கும் இந்த போட்டியைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற ஆசை என்னை இங்கு கூட்டிவந்தது,'' என்று மகிழ்ச்சியுடன் கூறினார் ராகுல்.

இதுவரை டிவியில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை மட்டுமே பார்த்த சென்னைவாசி சுந்தருக்கு, ஜல்லிக்கட்டு விளையாட்டைப் நேரடியாக பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது என்றார். '' என் வயதை ஒத்த இளைஞர்கள்தான் போட்டியாளர்களாக இருக்கிறார்கள். தெருவில் ஒரு மாடு வந்தாலே, அதை பார்த்து நான் பயப்படுவேன். இவர்கள் சீறிவரும் காளையை பயப்படாமல் பிடிப்பதை பார்த்து ஆச்சரியப்பட்டேன்,'' என உணர்ச்சி ததும்ப கூறினார் சுந்தர்.

பாலமேடு ஜல்லிக்கட்டில் நடந்தது என்ன?

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில், நிகழ்வு தொடங்கியதுமுதல் காளை உரிமையாளர்களே பல பரிசுகளை வென்றனர். விழாவை தொகுத்து வழங்கிய விழா கமிட்டியைச் சேர்ந்தவர்கள், இளைஞர்கள் மாடுகளை பிடிக்காமல் இருப்பதாகவும், காளை உரிமையாளர்களுக்குப் பரிசுகள் குவிவதாகவும் பகடிசெய்தனர்.

பாலமேடு போட்டியில் முதல் சுற்றில், மதுரை மாவட்டம் நாவனிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பொன்னி மற்றும் பெரிய பொன்னி ஆகியோரின் காளை போட்டியிட்டது.

வாடிவாசலில் இருந்து வெளியேறிய உடன், மூன்றே நொடிகளில் இளைஞர்களின் கூட்டத்தை கலைத்து, இரண்டு வீரர்களை மூன்று அடி உயரத்திற்குத் தூக்கி வீசிச் சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பார்வையாளர் ஒருவர் மரணம்

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

பாலமேடு ஜல்லிக்கட்டு அரங்கில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வைக்கப்பட்டிருந்த தடுப்புக்கு வெளியே நின்றிருந்த காளிமுத்து (21) என்பவர் காளை முட்டியதில் பலியானார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு வேண்டும் என்ற போராட்டத்தில் காளிமுத்து ஈடுபட்டதாக அவருடன் வந்திருந்த உறவினர் வீரபாண்டி தெரிவித்தார். ''ஆர்வமிகுதியால் தடுப்புகளை விட்டு வெளியே நின்று போட்டிகளை காளிமுத்து பார்த்தார். முதுகில் காளை குத்தியதால் அதிக ரத்தம் வெளியேறிவிட்டது என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். அவனது தங்கையையும், அம்மாவையும் எப்படி சமாதானம் செய்வேன் என்று தெரியவில்லை,'' என்றார் வீரபாண்டி.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: திரைப்படத்தை விட திகிலூட்டிய நிமிடம்

1080 காளைகள் போட்டிக்காக பதிவுசெய்யப்பட்டு 571 காளைகள் பங்குபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 697 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images

இரண்டாம் சுற்றில் பங்கேற்ற காளை ஒன்று, ஒரு இளைஞரைத் தூக்கிவீசி, தனது தலையால் முட்டி, அவரின் தலையை தனது இரண்டு கொம்புகளால் பிடித்து நிறுத்தியது. பார்வையாளர்கள் அனைவரும் அமைதியானார்கள்.

மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் உடனடியாக அவசர மருத்துவஉதவி வாகனத்தை தயார் நிலையில் வைக்குமாறு அறிவித்தார். ஒரு நிமிடத்திற்கு பிறகு, அந்த காளை அமைதியாக சென்றது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது, வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் பலரும் ஜல்லிக்கட்டு போட்டிகளைப் பார்க்கவும், புகைப்படங்கள் எடுக்கவும் வந்திருந்தனர்.

கார் , பைக், செல்ஃபோன் என குவிந்த பரிசுகள்

ஒன்பது சுற்றுகள் நடந்த போட்டியில் வென்ற காளை உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் எல்ஈடி டிவி, குளிர்சாதன பெட்டி, கார், பைக்,செல்போன் உள்ளிட்ட பொருட்கள் பரிசாக அளிக்கப்பட்டன.

பத்து வயது பெண் குழந்தை ஒன்று கொண்டுவந்த காளை ஒன்று வெற்றிபெற்றதால், அந்த சிறுமிக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன.

தோற்றாலும் குறையாத நம்பிக்கை

செல்வராணி
படக்குறிப்பு, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த செல்வராணி(48).

கடந்த எட்டு ஆண்டுகளாக வெற்றி பெற்ற மேலூர் செல்வராணியின் காளை, இந்த ஆண்டு தோற்றதால், விழா கமிட்டியைச் சேர்ந்தவர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

''ஆயிரம் காளைகள் வந்ததால், என் காளையின் டோக்கன் எண் 800த் தாண்டியிருந்தது. முதல் நாள் பாலமேட்டில் நேரம் முடிந்துவிட்டதால், காளை பங்கேற்கவில்லை. அலங்காநல்லூரில் காலை ஆறு மணி முதல் நின்று மதியம் நான்கு மணிக்கு அரங்குக்குக் கொண்டுவரப்பட்டது என்பதால் சோர்வாகி இருந்தது. வருத்தமாக உள்ளது. ஆனால் அடுத்தஆண்டு என் காளை ராமு வெற்றிபெறுவான் என்று நம்புகிறேன்'' என்று சோர்வுடன் தெரிவித்தார் செல்வராணி.

இறப்பு எண்ணிக்கை எத்தனை?

போட்டியின் இடைவேளையில் காவல்துறையினர் பார்வையாளர்களை சோதனை செய்வது, மது அருந்தியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை எடுத்தனர்.

களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்: சுவாரஸ்ய தகவல்கள்

பட மூலாதாரம், ARUN SANKAR/AFP/GETTY IMAGES

வீரர்களை பிரித்து, அதிகபட்சமாக நூறுபேர் மட்டுமே ஒரு சமயத்தில் விளையாடமுடியும் என்ற விதிமுறையால், மதுரையில் நடந்த மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகளிலும், வீர்கள் மற்றும் பார்வையாளர்கள் காளையால் தாக்கப்பட்டு இறப்பது குறைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்தார்.

பாலமேட்டில் பார்வையாளர் ஒருவர் பலியானதை அடுத்து வேறு யாரும் இறந்ததாகவோ, பலத்த காயம் அடைந்ததாகவோ உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

ஒரே சுற்றில் எட்டு காளைகளைப் பிடித்த அலங்காநல்லூரைச் சேர்ந்த அஜய்க்கு தமிழக முதல்வர் வழங்கிய கார் பரிசாக அளிக்கப்பட்டது. மதுரை கூடல்நகர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரின் காளை சிறப்பாக விளையாடி, அனைத்து வீரர்களையும் தோற்கடித்தற்காக கார் பரிசாக அளிக்கப்பட்டது.

அலங்காநல்லூரில் போட்டியிட்ட வீரர் ஒருவர் இரண்டாம் சுற்றில் இருந்து எட்டாவது சுற்றுவரை பங்குகொண்டது குறிப்பிடத்தக்கது. ஆறு காளைகளை பிடித்த அந்த வீரர் காயமடைந்தபோது, நிகழ்வு சிலநிமிடங்கள் நிறுத்தப்பட்டு, முதலுதவி செய்து அவர் வெளியேகொண்டு சென்றபிறகு, நிகழ்வு தொடர்ந்தது.

சிறப்பாக விளையாடிய ஒன்பது காளைகளில், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் காளை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளை மற்றும் ஜல்லிக்கட்டுப் பேரவையைச் சேர்ந்த ராஜசேகரின் காளை ஆகியவை இடம்பெற்றன.

ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தியாகம் செய்த செல்வராணி

காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டு காளைக்காக திருமணத்தை தியாகம் செய்த செல்வராணி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :