நாளிதழ்களில் இன்று: "கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்"
முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், AFP
"நமக்கு கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்" என்று தலைப்பிட்ட தலையங்கத்தை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நாம் அரசியல் தலைவர்களை காரணமேயின்றி ஆதரிப்பதும் அல்லது அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமலே ஏளனம் செய்யும் நிலைப்பாடு நிலவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தி இந்து (தமிழ்) - வரி விகித மாற்றம் குறித்து ஜிஎஸ்டி கூட்டத்தில் முடிவு

பட மூலாதாரம், AFP
டெல்லியில் நேற்று (வியாழக்கிழமை) மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடந்த 25-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 29 பொருட்கள் மற்றும் 53 சேவைகளுக்கான வரியை குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தி இந்து தமிழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அதில் மேலும், மகாராஷ்டிராவின் கோண்டியா மாவட்ட ஊராட்சித் தலைவருக்கான தேர்தலில் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வைத்துள்ளதாகவும் இதுகுறித்து விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அம்மாநில காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளது குறித்தும் செய்தி பதிப்பிக்கப்பட்டுள்ளது.

டைம்ஸ் ஆஃப் இந்தியா - சம்பா சாகுபடியில் கடும் வீழ்ச்சி

பட மூலாதாரம், AFP
காலதாமதமாக தொடங்கிய பருவ மழை மற்றும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பதில் ஏற்பட்ட தாமதம் ஆகிய காரணங்களால் டெல்டா மாவட்டங்களில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களில் இதுவரை 1.75 சதவீதமே சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்த காலக்கட்டத்தில் 50 சதவீத பயிர்கள் சாகுபடி செய்யப்படுவது வழக்கமென்றும், தற்போது மேட்டூர் அணையிலுள்ள நீர் முழுவதுமாக திறந்துவிடபட்டாலும் கூட அது சம்பா சாகுபடிக்கு போதாதென்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி - எல்லை தாக்குதலில் தமிழக வீரர் பலி

பட மூலாதாரம், AFP
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான் ராணுவம் குண்டு வீசி நடத்திய நடத்திய தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த தமிழக வீரரான சுரேஷ் என்பவர் பலியானது குறித்த செய்தியை தினமணி தனது பிரதான செய்தியாக பதிப்பித்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வந்த சுரேஷின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் அவரின் குடும்பத்திற்கு 20 லட்ச ரூபாயை வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமலர் - 'கார்ட்டூன்'

பட மூலாதாரம், DINAMALAR
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி நியமித்த நியமன சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க முதல்வர் நாராயணசாமி விதித்துள்ள தடை குறித்து கார்ட்டூன் வெளியிட்டுள்ளது தினமலர் நாளிதழ்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












