சிரியா: சிறையில் இருக்கும் ஜிகாதிகளை வெளியேற்றும் கிளர்ச்சியாளர்கள்

ஜெய்ஷ் அல்-இஸ்லாம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெய்ஷ் அல்-இஸ்லாம் கிளர்ச்சியாளர் குழுவைச் சேர்ந்தவர்கள்

கிழக்கு கூட்டாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஜிகாதி போராளிகளை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு சிரியா கிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அல்-இஸ்லாம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழு ஒன்றுடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சிரியாவில் நடந்த தாக்குதல்களில் கடந்த சில வாரங்களில் மட்டும் 900க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானதால், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளை மீட்பதற்குரிய நடவடிக்கைகளில் சிரியா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

Eastern Ghouta Damascus, Syria,

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, கிழக்கு கோட்டாவில் அரசு வாகனத்தில் ஏறும் 13 பேர் கொண்ட ஜிகாதி குழு

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அரசாங்க ஆதரவுப் படைகள் மீட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் நடைபெற்று வரும் பகுதிகளில் சுமார் நான்கு லட்சம் பேர் சிக்கியுள்ள நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தை அமல்படுவதற்கான முயற்சிகள் பல வாரங்களைக் கடந்துவிட்டன.

ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அல்-கய்தா அமைப்பிலிருந்து உருவான ஹயாத் தஹ்ரீர் அல்-ஷாம் (எச்.டி.எஸ்) என்னும் நுஸ்ரா முன்னணியால் நடத்தப்படும் பிரிவுகளின் கூட்டணியின் வசமுள்ள போராளிகளை இடமாற்றம் செய்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக ஜெய்ஷ் அல்-இஸ்லாம் அமைப்பு தெரிவித்துள்ளது.

Eastern Ghouta Damascus, Syria,

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சமீபத்தில் கிழக்கு கோட்டா பகுதிக்கு உதவிப் பொருட்கள் சென்று சேர்ந்தன

கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறையிலிருந்து போராளிகள் பேருந்து ஒன்றில் ஏறுகின்றனர் என்ற செய்தியை தாங்கிய புகைப்படங்களை சிரியாவின் அரச தொலைக்காட்சி வெள்ளிக்கிழமையன்று வெளியிட்டிருந்தது.

கிளர்ச்சி குழுக்கள் எவை?

கிழக்கு கூட்டாவிலுள்ள கிளர்ச்சியாளர்கள் ஒரு ஒருங்கிணைந்த குழுவாக செயல்படவில்லை. அங்குள்ள கிளர்ச்சியாளர்களிடையே ஜிஹாதிகளை உள்ளடங்கிய பல்வேறு பிரிவுகள் உள்ளன. மேலும், அவர்களிடையேயும் நடைபெற்று வரும் சண்டைகளே இதற்கு முந்தைய முறைகளில் அவர்கள் அரசாங்க படைகளிடம் தோற்கும் நிலைக்கு காரணமாக அமைந்தன.

ஜெய்ஷ் அல்-இஸ்லாம் மற்றும் அதன் போட்டியாளரான பாய்லாக் அல்-ரஹ்மான் ஆகியவையே அங்குள்ள இரண்டு மிகப் பெரிய கிளர்ச்சியாளர்கள் குழுவாகும்.

Map of Damascus and Eastern Ghouta

கிளர்ச்சியாளர்களின் கூடாரமாக விளங்கும் கிழக்கு கூட்டா பகுதி அந்நாட்டின் தலைநகரான டமாஸ்கஸுக்கு அருகிலுள்ளதால், அங்கிருந்து நடத்தப்படும் பீரங்கி தாக்குதல்கள் தலைநகரின் மையப்பகுதியை அடைந்து பல பொதுமக்களின் உயிரிழப்பிற்கு காரணமாக உள்ளது.

சிரியா அரசாங்கம் இந்த பிராந்தியத்தை மீண்டும் பெறுவதற்கு மிகவும் ஆவலாக இருந்தாலும், அதை மீட்பதற்கான தன்னுடைய முயற்சிகளுக்கு நேரடி தடையாக எச்.டி.எஸ் அமைப்பு இருப்பதாக அது தெரிவித்துள்ளது. இன்னும் அமல்படுத்தப்படாத நிலையிலுள்ள ஐநாவின் சமீபத்திய போர் நிறுத்த அறிவிப்பில் எச்.டி.எஸ் அமைப்பு சேர்க்கப்படவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: