காஷ்மீர்: ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் காவல்துறை
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம்.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ்

பட மூலாதாரம், Getty Images
கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராணுவத்தின் காவலில் இருந்தபோது கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 23 ராணுவத்தினர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை அனுமதி கோரியுள்ளது.
ஷபீர் அகமது மாங்கோ எனும் அந்த விரிவுரையாளரின் கிராமம் இரவு நேரத்தில் ராணுவத்தால் தாக்கப்பட்டபோது, அவரை ராணுவத்தினர் அழைத்துச் சென்றதாக அம்மாநில காவல்துறை கூறியுள்ளது.
ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டப்படி அரசின் அனுமதியின்றி காவல்துறையால் ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவோ, அவர்களை விசாரணை செய்யவோ முடியாது.

தி இந்து

பட மூலாதாரம், facebook
பெங்களூருவில் கடந்த ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட பெண் ஊடகவியலாளார் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் ஹிந்து யுவ சேனா எனும் அமைப்பின் நிறுவனர் கே.டி.நவீன் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது அந்த வழக்கின் முதல் கைதாகும்.
அவர் ஏற்கனவே கடந்த மாதம் ஒரு ஆயுதக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். தற்போது கௌரி லங்கேஷ் வழக்கிலும் அவர் இணைக்கப்பட்டுள்ளார்.

தினமணி

அதிமுகவின் டி.டி.வி.தினகரன் அணிக்கு அவர் விரும்பும் கட்சிப் பெயரையும், குக்கர் சின்னத்தையும் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தொடரப்பட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ஏதுவாக தங்களுக்கு குக்கர் சின்னம் வேண்டும் என்று தினகரன் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசியல் தளங்களில் நகைச்சுவை என்பது மகிழ்ச்சிக்கானதாக இல்லாமல் ஏளனம் செய்வதற்கான ஒன்றாக மாறி வருவதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆங்கில இதழின் நடுப்பக்கக் கட்டுரையில் எழுதியுள்ளார் கோபாலகிருஷ்ண காந்தி.
அண்மையில் மாநிலங்களவையில் பிரதமரின் உரையின்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ரேணுகா சௌத்திரி சிரித்ததற்கு பாரதிய ஜனதா உறுப்பினர்கள் கடுமையான எதிர்வினையாற்றியதைக் குறிப்பிட்டுள்ள கட்டுரையாளர், நகைச்சுவை அரசியல் கலந்துரையாடலுக்கான வாய்ப்பாக அல்லாமல் ஒரு ஆயுதமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












