உலகப் பார்வை: பதவி விலகுகிறார் ஆப்பிரிக்காவின் ஒரே பெண் தலைவர்
கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம்.
பதவி விலகுகிறார் ஆப்பிரிக்காவின் ஒரே பெண் தலைவர்

பட மூலாதாரம், AFP
நிதி முறைகேட்டில் சிக்கியுள்ள ஆப்பிரிக்க கண்டத்தின் ஒரே பெண் தலைவரான மொரீசியஸ் அதிபர் அமீனா குரிப்-பாகிம் தனது பதவி விலகவுள்ளார்.
தொண்டு நிறுவனமொன்று அளித்த வங்கி அட்டையை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான டாலர்களுக்கு தனக்கு வேண்டியவற்றை வாங்கி குவித்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள அந்நாட்டின் 50வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு பிறகு அவர் பதவி விலகுவார்.

பிரிட்டன்: கொலை முயற்சி நடந்த இடத்தில் ராணுவம் குவிப்பு

பட மூலாதாரம், Getty Images
பிரிட்டனில் முன்னாள் உளவாளி ரஷ்ய மற்றும் அவரது மகள் ஆகியோரை கொல்வதற்கு முயற்சி செய்யப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு உதவும் வகையில் சுமார் 180 படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு குவிக்கப்பட்டுள்ள ராணுவ வீரர்கள் அனைவரும் ரசாயன போர் மற்றும் கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கையாள்வதில் பிரிட்டனின் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த வல்லுநர்களாவர்.

சிரியா: ஜிகாதி போராளிகளை வெளியேற்ற சம்மதம்

பட மூலாதாரம், EPA
கிழக்கு கூட்டாவில் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ஜிகாதி போராளிகளை வேறிடத்திற்கு மாற்றுவதற்கு சிரியா கிளர்ச்சி குழுவான ஜெய்ஷ் அல்-இஸ்லாம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழு ஒன்றுடன் நடந்த கலந்துரையாடலை தொடர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

பட மூலாதாரம், Reuters
ஒரு ஊழல் விவகாரம் குறித்து புலனாய்வு செய்த பத்திரிகையாளர் ஒருவர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, ஸ்லோவேக்கியாவில் அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு தலைநகர் ப்ராடிஸ்லாவாவில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
ஜன் குசியாக் என்ற அந்த பத்திரிகையாளர், அந்நாட்டின் அரசியல் ஊழல் ஒன்றை இத்தாலிய மாஃபியா கும்பலுடன் தொடர்புப்படுத்தும் புலனாய்வு கட்டுரைக்கான வேலையில் ஈடுபட்டிருந்தபோது கொலை செய்யப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












