திமுகவில் சலசலப்பு: துர்கா ஸ்டாலின் கோரிக்கையால் உண்ணாவிரதத்தை கைவிட்டாரா ஜீயர்?

பட மூலாதாரம், Facebook
ஆண்டாள் குறித்த சர்ச்சை தொடர்பாக உண்ணாவிரதம் இருந்துவந்த திருவில்லிபுத்தூர் ஜீயர், மு.க. ஸ்டாலினின் மனைவி துர்காவின் கோரிக்கையின் பேரில் கைவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியிருக்கும் விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டிசம்பர் 8ஆம் தேதியன்று தினமணி நாளிதழில் வைரமுத்து எழுதிய கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. அந்தக் கட்டுரையில், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் தேவதாசி குலத்தைச் சேர்ந்தவர் என அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் தெரிவித்திருப்பதாக கூறியிருந்தார்.
இதையடுத்து, வைரமுத்துவுக்கு எதிராக பா.ஜ.கவின் தேசியச் செயலர் எச். ராஜா மோசமான வார்த்தைகளில் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த விவகாரம் இதன் பின் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து வைரமுத்துவுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தியதோடு, எதிர்ப்புகளையும் பதிவுசெய்தும் வந்தனர்.
வைரமுத்து மன்னிப்புக் கேட்கும்வரை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக திருவில்லிபுத்தூர் ஜீயர் அறிவித்து, உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டார். பிறகு அந்த உண்ணாவிரதத்தை சில மணி நேரங்களில் கைவிட்டார்.

பட மூலாதாரம், FACEBOOK
இந்த நிலையில் தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன், இந்த விவகாரம் தொடர்பாக தன்னுடைய ஆழ்வார்கள் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் இதுபோன்ற விபரீத ஆய்வுகள் வேண்டாம் என்றும் குறிப்பிட்டவர், "கடந்த 10 நாட்களாய் படர்ந்த வேதனையின் விளைவாய் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு தம்மை வருத்திக்கொள்ள முனைந்த எம் வழிபாட்டுக்குரிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா விண்ணப்பித்து கேட்டுக்கொண்டதன் பேரில், தம் உண்ணா நோன்பை கைவிட்டுள்ளார்கள்" என்றும் தெரிவித்தார்.
அவரது அறிக்கை தி.மு.கவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் தி.மு.க. ஆதரவாளர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்ட மு.க. ஸ்டாலின் வைரமுத்துவும் சம்பந்தப்பட்ட நாளிதழும் வருத்தம் தெரிவித்த பிறகும், "ஒரு சிலர் தாங்கள்தான் ஒட்டு மொத்த இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் கவிஞர் வைரமுத்து மீதும், அக்கட்டுரையை வெளியிட்ட நாளிதழ் மீதும் அராஜகமான கருத்துகளைத் தெரிவிப்பது, பத்திரிக்கை அலுவலகத்தை முற்றுகையிடுவோம் என்று மிரட்டுவது மிகவும் அருவருக்கத்தக்க செயல் என்று திமுக சார்பில் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், M. K. Stalin
இதற்கு அடுத்த நாள் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், தனது முந்தைய நாள் அறிக்கையில் ஒரு பகுதியை ஊடகங்கள் சரியாக வெளியிடவில்லை என்று கூறியதோடு, எந்த மதத்தையும் புண்படுத்தக்கூடாது என்பதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்று கூறினார்.
ஆண்டாள் சர்ச்சை விவகாரத்தில் வைரமுத்து வருத்தம் தெரிவித்த பிறகும் அவர் மீது தாக்குதல்கள் தொடரும் நிலையில், தி.மு.கவின் சார்பில் இம்மாதிரி ஒரு அறிக்கை வெளிவந்தது குறித்து சமூக வலைதளங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெகத்ரட்சகனின் அறிக்கையில் துர்கா ஸ்டாலின் இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டதாகக் கூறப்பட்டது, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.கவைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸன், "எதிர்க்கட்சிகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். திமுகவை திமுகவினரிடமிருந்து காப்பாற்றுங்கள்!" என்று கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Facebook
டான் அசோக் என்பவர் ஃபேஸ்புக்கில் இட்டிருக்கும் பதிவில், "அம்மையார் துர்கா ஸ்டாலின் குறித்து ஜெகத்ரட்சகன் கூறியிப்பது பொய் என்றால் அவர்மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும். உண்மை என்றால் திமுக தன்மீது தானே நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். திமுகவுக்கு எதிராக இவ்வளவு ஊடகத்திரிபுகள், பிரச்சாரங்கள், வன்மங்கள் விரவிக்கிடக்கும்போதும் பெரும்புயலில் மரத்தைத் தாங்கும் வேரைப் போல சில கொள்கையாளர்கள் திமுகவைத் தாங்குவது அதில் இன்னமும் இருப்பதாக அவர்கள் நம்பும் கொள்கை எனும் ஒளிக்கீற்றால் தான். அந்த ஒளிக்கீற்றை ஜெகத்ரட்சகன்களைப் போன்ற காரிருள் மறைப்பதை திமுக தலைமை வேடிக்கை பார்த்தால், அவ்விருளில் அதன் பங்கும் உண்டென்றே கருத வேண்டியிருக்கும்." என்று கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Facebook
சிவசங்கரன் சரவணன் என்பவர் எழுதியிருக்கும் குறிப்பில், "இந்த விஷயத்தில் திருமதி துர்கா தனது விருப்பத்தை காட்டலாம் அதிலே நமக்கு பிரச்சனை இல்லை. ஆனால் திமுகவின் முகமாக அவர் செயல்பட்டாரா , செய்தியின் உண்மை தன்மை என்ன என்பதை திமுக தான் தெளிவுபடுத்தவேண்டும்!
இப்படியெல்லாம் செய்தால் ஹிந்துத்துவ சக்திகள் திமுக வை ஆதரிப்பார்கள் என கருதவேண்டாம். ஓபிஎஸ், ஈபிஎஸ், ரஜினி, கமல் என எதுவுமே செல்ப் எடுக்காமல் போனால் வேறு வழியே இல்லாமல் தினகரனை கூட அவர்கள் ஆதரிப்பார்களே தவிர திமுகவை ஆதரிக்கமாட்டார்கள்..!" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

பட மூலாதாரம், Facebook
தி.மு.கவின் தலைமைக் கழகப் பேச்சாளரான சின்னமனூர் புகழேந்தி வெளியிட்டிருக்கும் ஃபேஸ்புக் பதிவில், வைணவத்திலகம் ஜெகத்ரட்சகன் ஆண்டாளை விமர்சித்த கவிஞர் வைரமுத்துவை கண்டித்து யாருக்கோ திரைமறைவு வெண்சாமரம் வீசியுள்ளார். வைணவர்கள் மனம்புண்பட்டு விழிகளில் கண்ணீர் வழிந்தோடுகிறதாம்.!!!! அண்ணாவை திருடன் என்றபோது கண்ணிர் ஓடவில்லையோ??? இப்படி பேசியதால் தான் தொண்டையில் ஓட்டை போட்டு சாப்பாடு பேசமுடியாமல் இறங்குகிறது என்று தலைவரை எச்சை பேசும் போது கண்ணீர் வடியவில்லையோ???திருப்பதிக்கு உன் அண்ணனை கூட்டிட்டு போய் ஆட்டைய போட்டுவிடாதே என்று தளபதியை பேசும் போது கண்ணிர் வடியவில்லை ஜெகத் அய்யாவுக்கு!!! திராவிட பயிரில் விசக்கிருமி பூச்சிமருந்து அடித்தே தீருவோம்" என்று கூறியிருக்கிறார்.

பட மூலாதாரம், Facebook
இதற்கிடையில், தி.மு.கவின் சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொள்ளும் தமிழன் பிரசன்னா, இந்த விவகாரம் பெரிதாக வெடித்தபோது வைரமுத்துவுக்கு ஆதரவாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், பிறகு அந்த வீடியோ அகற்றப்பட்டது. கட்சித் தலைமையிடம் இருந்துவந்த எச்சரிக்கையை அடுத்தே அந்த வீடியோ அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
தி.மு.கவின் சார்பில் பேசுபவர்கள் யாவரும், மு.க. ஸ்டாலினின் பெயரில் வெளியான அறிக்கையே கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாடு என்று மட்டும் கூறுகின்றனர்.
முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகனைப் பொறுத்தவரை, எந்த விஷயத்திலும் துணிச்சலாக, வெளிப்படையாகப் பேசாதவர் என்பதால், அவர் கட்சித் தலைமையின் அனுமதியின்றி இந்த அறிக்கையை வெளியிட்டிருக்க மாட்டார் என்கிறார்கள். குறிப்பாக, துர்கா ஸ்டாலினின் பெயரைத் தனது அறிக்கையில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்சித் தலைமையின் அனுமதி நிச்சயம் அவருக்கு இருந்திருக்கும் என்கிறார்கள்.

பட மூலாதாரம், PIB
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் செயல்பாட்டுக்கும் மு.க. ஸ்டாலினின் செயல்பாட்டிற்கும் இடையிலான வித்தியாசத்தையே இந்த விவகாரம் சுட்டிக்காட்டுகிறது என்கிறார் ஃப்ரண்ட்லைன் இதழின் மூத்த பத்திரிகையாளரான ராதாகிருஷ்ணன். "ஒரு காலத்தில் உலகில் எங்கிருந்தாலும் தினமும் காலையில் கருணாநிதியுடன் பேசுவார் வைரமுத்து. அவருக்கு பிரச்சனை என்று வரும்போது தி.மு.க. அவருடன் இருந்திருக்க வேண்டும். அவருக்கு ஆதரவாக நின்றிருக்க வேண்டும். கருணாநிதி இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார்" என்கிறார் ராதாகிருஷ்ணன்,
இந்த விவகாரத்தில் துர்கா ஸ்டாலின் தலையிட்டது தனிப்பட்ட முறையில் என்றால் பிரச்சனையில்லை. ஆனால், அதில் அவர் தலையிட்டார் என்பதை ஜெகத்ரட்சகன் மூலமாக வெளிப்படுத்தியிருப்பது பிரச்சனைதான் என்கிறார் அவர்.
ஜெகத்ரட்சகனின் அறிக்கை குறித்து தி.மு.க. இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












