காபூல்: ''துப்பாக்கிதாரிகள் வெளி நாட்டவர்களை தேடித் தேடி சுட்டனர்''

காபூல்: ''வெளிநாட்டவர்களை தேடித் தேடி சுட்டனர்''

பட மூலாதாரம், AFP

ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள 'இன்டர்கான்டினென்டல் ஹோட்டலில்' உள்ள உணவகத்தில் துப்பாக்கிதாரிகள் நுழைந்த திகிலூட்டும் தருணத்தைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் விவரித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. தான் ஒரு ஆஃப்கன் என கூறியதால் தன்னை அவர்கள் விடுவித்ததாகக் கூறும் அவர், ''வெளிநாட்டவர்கள் எங்கே?'' என அவர்கள் கத்தியதாகவும் கூறுகிறார்.

ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த நான்கு பேருடன், 14 வெளிநாட்டவர்கள் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என சில ஊடகத்தின் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன.

பாதுகாப்பை ஒரு தனியார் நிறுவனத்திற்கு மாற்றுவது என்ற சமீபத்திய முடிவு தவறானது என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

துப்பாக்கிதாரிகளுடன் இரவு முழுவதும் சண்டையிட்ட ஆஃப்கன் படையினர், கட்டடத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர். ஹோட்டலில் இருந்த 160 பேர் மீட்கப்பட்டனர்.

இந்த சண்டையில் மூன்று துப்பாக்கிதாரிகள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

காபூல்: ''வெளிநாட்டவர்களை தேடித் தேடி சுட்டனர்''

பட மூலாதாரம், Reuters

உக்ரைனை சேர்ந்த 9 பேர், கிரீஸ் நாட்டை சேர்ந்த ஒருவர், ஜெர்மனியைச் சேர்ந்த ஒருவர், கஜகஸ்தானை சேர்ந்த ஒருவர் இறந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என காபூலில் போலீஸார் பிபிசியிடம் கூறியுள்ளனர். இன்னும் இருவர் அடையாளம் காணப்படவில்லை.

தங்களது பல ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், சில இன்னும் காணவில்லை என்றும் ஆஃப்கானிஸ்தான் விமான நிறுவனமான கம் ஏர் கூறியுள்ளது.

சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 21:00 மணிக்கு ஹோட்டலில் தங்கியிருந்தவர்கள் ஆறாவது தளத்தில் உள்ள உணவகத்தில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது துப்பாக்கிதாரிகள் அங்கு நுழைந்துள்ளனர்.

துப்பாக்கிதாரி தனது சிறிய துப்பாக்கியால் மேலே சுட்டபோது, தனது மகனுடன் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் கூறினார்.

காபூல்: ''வெளி நாட்டவர்களை தேடித் தேடி சுட்டனர்''

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டவர் என நம்பப்படும் ஒரு பெண்ணை சுட்டுவிட்டு, தன்னை நோக்கி துப்பாக்கியை திருப்பியதாக அவர் கூறுகிறார்.

''நான் ஒரு ஆஃப்கன்'' என அவர் கூறியுள்ளார். நாங்கள் ஆஃப்கன்களை கொல்ல மட்டோம் என கூறிய ஒரு துப்பாக்கிதாரி, ''வெளிநாட்டவர்கள் எங்கே'' என கேட்டுள்ளார். பிறகு வெளிநாட்டவர்களைத் தேடி அங்கிருந்து சென்றுள்ளனர்.

முதலில் தங்களுக்கு உணவு பரிமாறுமாறு இரண்டு துப்பாக்கிதாரிகள் தன்னிடம் கேட்டதாகச் சம்பவத்தை நேரில் பார்த்த ஹசீப் என்பவர் டோலோ நியூசிடம் கூறியுள்ளார்.

''அவர்கள் மிகவும் நவநாகரிக ஆடைகளை அணிந்திருந்தனர். என்னிடம் வந்து உணவு கேட்டனர். நான் உணவுகளைப் பரிமாறினேன். என்னிடம் நன்றி கூறிவிட்டு, தங்களது ஆயுதங்களை எடுத்து மக்களைச் சுட ஆரம்பித்தனர்'' என்கிறார் அவர்.

''டஜன் கணக்கான உடல்கள் என் அருகில் கிடந்தன'' என்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :