ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன்?: ஜூன் 23-ம் தேதி வாக்கெடுப்பு
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்ந்து இருக்குமா என்பது எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் தேதி தீர்மானிக்கப்படும்.

பட மூலாதாரம், Reuters
அந்த ஒன்றியத்தில் பிரிட்டன் தொடரவேண்டும் என்றும், அது கூடவே கூடாது என்றும் அமைச்சரவைக்குள்ளே கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையிலேயே, 'உள்ளே-வெளியே' எனும் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு இன்னும் நான்கு மாதங்களில் நடைபெறும் என, பிரதமர் டேவிட் கேமரன் சனிக்கிழமை அறிவித்தார்.
மறுசீரமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர வேண்டும் என்பதை ஆதரித்து தாம் பிராச்சாரம் செய்யவுள்ளதாக பிரிட்டிஷ் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் இருக்க வேண்டும் என பிரதமர் கருத்து தெரிவித்தாலும், அதற்கு அமைச்சரவையில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலக வேண்டும் என மூத்த அமைச்சர்கள் சிலரும் வாதிட்டுள்ளனர். அவ்வாறே தாங்கள் பிரச்சாரம் செய்யப்போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
நீண்ட இழுபறியுடன் நிறைவடைந்த பிரஸல்ஸ் மாநாட்டில், பிரிட்டன் தொடர்ந்தும் தனது சொந்த நாணயமான பவுண்டை நிரந்தரமாக பயன்படுத்தவும், சில கடுமையான நிபந்தனைகளுடனேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நிலைத்திருக்க முடியும் எனும் நிலைப்பாட்டை டேவிட் கேமரன் எடுத்துள்ளார்.
ஏனைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரிட்டனில் குடியேறுபவர்களுக்கு, பிரிட்டனின் சமூகநல திட்டங்களை மட்டுப்படுத்துவதற்கும் பிரசல்ஸ் மாநாட்டில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ஜெர்மனின் ஆட்சித் தலைவி, ஏங்கலா மெர்கல் தாம் வழங்கியுள்ள திட்டம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் நீட்டித்திருப்பதற்கான பிரச்சாரங்களை டேவிட் கேமரன் மேற்கொள்ள உதவும் என்றார்.

பட மூலாதாரம், AFP
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் குடியேறிகளுக்கான கொடுப்பனவுகளில் கடுமையான வெட்டுக்களையும் மாற்றங்களையும் டேவிட் கேமரன் முவைத்துள்ளார்.
குடிவரவு கொள்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரவும் அவர் முடிவுசெய்துள்ளார்.
பிரிட்டனில், ஆறு மாதங்களுக்குள் வேலைத் தேடிக்கொள்ள தவறும் குடியேறிகளை பிரிட்டனிலிருந்து வெளியேற்றுவது, பிரிட்டனில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய குடியேறிகள், யுனிவர்சல் கிரடிட்டை பெற முடியாது மட்டுப்படுத்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டோரை நாடுகடத்தும் நடைமுறையை துரிதப்படுத்தல் ஆகியவற்றை பிரிட்டிஷ் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டும் என்பதை திருப்திப்படுத்தும் அளவிற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருக்கவில்லை என பிரிட்டிஷ் பிரதமரின் அமைச்சரவையில் உள்ள பல உறுப்பினர்கள் கருதுவதுடன், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலும் உள்ளனர்.












