துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த சகோதரிகளை மீட்க நடந்த போராட்டம்

"மெர்வ்! ஐரேம்! மெர்வ்! ஐரேம்" என்று மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த முஸ்தஃபா ஓஸ்டுர்க் கத்திக்கொண்டு இருந்தார். எங்களைச் சுற்றி இருந்த அனைவரும் அமைதியாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இரண்டு சகோதரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக மீட்கப்பட்ட மற்றவர்கள் கூறியதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர்.
எதாவது பதில் கிடைக்கிறதா என்று உணர்திறன் சாதனங்களுடன் அவர்கள் காத்திருந்தனர். அனைவரும் எதிர்பார்ப்பில் உறைந்திருந்தனர்.
அப்போது, முஸ்தஃபா, "ஐரேம், நாங்கள் உன் அருகேதான் இருக்கிறோம். நான் பேசுவது கேட்கிறதா" என்று அழைத்தார்.
தற்போது, உள்ளே இருந்து பதில் கிடைத்தது. ஆனால், சுற்றிருந்த எங்களுக்கு எதுவும் கேட்கவில்லை. உள்ளே சிக்கியிருந்த பெண்ணின் தோழிகள் சிலரும் எங்களுடன் அமைதியாக நின்றிருந்தனர்.
"பேசுவது மெர்வ் தானே, நிதானமாக இரு, நான் கேட்பதற்கு மட்டும் பதில் கூறு" என்று முஸ்தஃபா தெரிவித்தார்.
மெர்வ்(24) மற்றும் அவரது தங்கை ஐரேம்(19) இருவரும் தெற்கு துருக்கியின் ஆந்தாக்யாவில் உள்ள 5 மாடி கட்டடத்தில் வசித்து வந்தனர். நாட்டில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில் அவர்கள் வசித்து வந்த குடியிருப்பும் இடிந்து தரைமட்டமானது. இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். அவர்கள் சிக்கி 2 நாட்கள் ஆகிறது. ஆனால், அவர்களுக்கு அது பல வாரங்களைப் போல் தோன்றத் தொடங்கியது.
"இன்று புதன்கிழமைதான் ஆகிறது. நீங்கள் சிக்கி 14 நாட்களெல்லாம் ஆகவில்லை. எங்களுக்கு வெறும் 5 நிமிடங்கள் அவகாசம் கொடுங்கள். நீங்கள் இருவரும் மீட்கப்படுவீர்கள்," என்றார் முஸ்தஃபா.
மீட்புப் பணிகளுக்குச் சில மணி நேரம் எடுத்துகொள்ளும் என்பது அவருக்குத் தெரியும். எனினும், "அவர்கள் நம்பிக்கையை இழந்துவிட்டால், அவர்கள் பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லாமலும் போகும்" என்று எங்களிடம் அவர் தெரிவித்தார்.
மெர்வ் மற்றும் ஐரேம் தற்போது தங்களுக்குள்ளேயே நகைச்சுவை கூறி சிரிக்கத் தொடங்கினர். முஸ்தஃபாவின் முகத்தில் நான் புன்னகையைப் பார்த்தேன். "அவர்களுக்கு மட்டும் போதிய இடம் இருந்தால் அவர்கள் ஒருவேளை நடனம் ஆடியிருப்பார்கள்," என்று அவர் தெரித்தார்.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் கணக்கீடுகளின்படி, சகோதரிகள் இருவரையும் அடைய 2 மீ (6.6 அடி) தூரம் உள்ளது. ஆனால் மீட்புக் குழுவின் தளபதியான ஹசன் பினாய், கான்கிரீட்டிற்குள் சுரங்கம் தோண்டுவது மிகவும் நுட்பமான செயல் என்று கூறுகிறார். மேலும், ஒரு சிறு தவறான நடவடிக்கை பேரழிவிற்கு வழிவகுக்கும்.
அவர்கள் இடிபாடுகளைத் தோண்டும்போது, கட்டடம் இடிந்து விழாமல் தடுப்பதற்காக கான்கிரீட்டை தாங்கிப் பிடிக்க ஒரு புல்டோசர் அழைக்கப்படுகிறது.
இடிபாடுகளில் சிக்கியிருந்த சகோதரிகளிடம் விரைவில் நாங்கள் உங்களுக்குப் போர்வைகள் தருகிறோம் என்று முஸ்தஃபா கூறுகிறார். அதற்கு உள்ளே இருந்து, "எங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம், நாங்கள் சோர்வையோ, குளிரையோ உணரவில்லை," என பதில் வருகிறது.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் நிலை குறித்து மெர்வ் கவலைப்பட்டதாக முஸ்தஃபா தெரிவித்தார். உள்ளூர் நேரத்தின்படி அப்போது மணி இரவு 8.30. மிகவும் குளிராக இருக்கிறது. மேலும், மக்களால் மறக்கமுடியாத வகையிலான மிகவும் குளிர்ந்த காலத்தை அப்பகுதி கொண்டிருந்தது.
மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தங்கள் கைகளாலேயே இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால், சில மணிநேரங்களுக்குப் பிறகு, எங்கள் கால்களுக்குக் கீழே தரை அதிர்வது போன்று நாங்கள் உணர்ந்தோம். உடனடியாக மீட்பு நடவடிக்கை நிறுத்தப்பட்டு அனைவரும் வெளியேறினோம்.
"இதுதான் நிதர்சனமான உண்மை, எங்கள் குழுவின் பாதுகாப்புதான் எங்களின் பிரதான நோக்கம்," என்று ஹசன் கூறினார்.
30 நிமிடங்களுக்குப் பின் முஸ்தஃபா மற்றும் 3 பேர் உள்ளே சென்று மீண்டும் மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
தங்களை விட்டுவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர் என உள்ளே இருந்த பெண்கள் நினைத்திருந்தனர். "பயப்பட வேண்டாம். உங்களை இங்கேயே விட்டுவிட்டு நாங்கள் செல்ல மாட்டோம். இருவரையும் நாங்கள் மீட்டு வெளியே கொண்டு வருவோம். நீங்கள் எங்களுக்கு நல்ல மதிய உணவு வாங்கித் தரவேண்டும்," என்று முஸ்தஃபா சத்தமாகக் கூறினார்.

தற்போது நேரம் நள்ளிரவை எட்டியிருந்தது. பள்ளம் தோண்டும் பணி தொடர்ந்து நடைபெற்றது. மீட்புப் பணியினர் கடந்த சில நாட்களாகவே சரியாகத் தூங்கவில்லை. கட்டடத்திற்கு அருகே சிறிய அளவில் நெருப்பு மூட்டி அங்கே கூடினோம்.
'அமைதி' என்ற சத்தம் மட்டும் அவ்வப்போது ஒலித்தது. விளக்குகள் அணைக்கப்பட்டு, முழுவதும் இருட்டாக இருந்தது. முஸ்தஃபாவின் டார்ச் லைட்டில் இருந்து வரும் வெளிச்சத்தை உள்ளே சிக்கியிருக்கும் பெண்களால் பார்க்க முடிகிறதா என்பதை அறிய கான்கிரிட் சுவரில் சிறிய துளையிடப்பட்டது.
"மேர்வ், ஐரேம், உங்களால் வெளிச்சத்தைப் பார்க்க முடிகிறதா! சிறப்பு, தற்போது நாங்கள் சிறிய கேமராவை உள்ளே அனுப்புகிறோம். அதை உங்களால் பார்க்க முடிந்தால் கூறுங்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன்," என்று முஸ்தஃபா கூறுகிறார்.
"நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், அதிகமாக அசைய வேண்டாம். ஐரேம் கேமராவை இழு, அப்போதுதான் எங்களால் மேர்வை பார்க்க முடியும்," என்று அவர் தெரிவித்தார்.
கேமராவில் நாங்கள், ஐரேம் சிரிப்பதைப் பார்த்தோம். நல்வாய்ப்பாக, இடிபாடுகளுக்கு இடையே அவர்களுக்குப் போதிய இடவசதி இருந்தது.
மீட்க முடியும் என்ற எண்ணம் அனைவர் முகத்திலும் தோன்றியது. பெண்கள் நன்றாகத் தெரிகிறார்கள். மேலும், துளையைக் கொஞ்சம் பெரிதாக்கினால் தன்னை வெளியே இழுத்துக்கொள்ளும் அளவுக்கு ஐரேமுக்கு இடம் இருந்தது.
ஆனால், உடனடியாகவே மீட்புக்குழுவினரை கவலைத் தொற்றிக்கொண்டது. உள்ளே அதிக குளிராக இருப்பதாகவும், தனது காலில் அழுத்தமாக உள்ளதாகவும் மெர்வ் கூறினார்.
போதிய ரத்த ஓட்டம் இல்லாமல் மெர்வின் பாதம் மரத்துப்போய்விட்டதா அல்லது உடலின் வெப்பநிலை குறைந்துள்ளதா என்பது குறித்து மருத்துவர்கள் கவலைப்பட்டனர்.
தற்போது, அதிகாலை 5.00 மணி. மீட்புக்குழுவில் உள்ள ஒல்லியான நபர் உள்ளே செல்வதற்குப் போதுமானதாக அந்தத் துளை இருந்தது. உள்ளே சென்று ஐரேமின் கையைச் சிறிது நேரம் தாங்கிப் பிடிக்கவும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த நபரால் முடிந்தது.

எந்த அளவில் துளையிட வேண்டும் என்பது குறித்து அவர்கள் அளவிட்டுக் கொண்டிருந்தனர். தெர்மல் கம்பளி மற்றும் ஸ்டெர்ட்சர் ஆகியவற்றுடன் மருத்துவக் குழு தயாரானது. அனைவரும் ஆர்வமாக இருந்தனர். தற்போது நேரம், காலை 6.30 மணி. ஐரேம் முதலில் வெளியே வந்தார். அவர் ஆனந்தக் கண்ணீருடன் காணப்பட்டார்.
`மெர்வையும் உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வாருங்கள்` என்று மீட்புக்குழுவினரிடம் ஐரேம் தெரிவித்தார். `மெர்வ் நிச்சயம் மீட்கப்படுவார்` என்று அவரிடம் ஹசன் உறுதியளித்தார்.
ஆனால், மெர்வை மீட்கக் கூடுதலாக 30 நிமிடங்கள் ஆனது. கான்கிரீட்டில் இருந்து மெர்வின் பாதங்களை விடுவிக்கும் முயற்சியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றனர்.
இறுதியாக மெர்வும் மீட்கப்பட்ட பின்னர், அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். "நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்று மெர்வ் கூச்சலிட்டது என் காதில் விழுந்தது.
இரவு முழுவதும் மீட்புப் பணியின்போது காத்திருந்த அவர்களது நண்பர்கள் தற்போது கண்ணீருடம் கூச்சலிட்டனர். உடனடியாக சகோதரிகள் இருவரும் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களின் மகிழ்ச்சியான தருணத்தில் ஒரு மாறுதல் ஏற்படுகிறது. அனைவரும் அமைதியாக இருக்கும்படி மீட்புப்படையினர் கூறுகின்றனர்.
`நான் பேசுவது கேட்டால் பதில் அளியுங்கள், உங்களால் பேச முடியவில்லை என்றால் தரையை உந்தி சைகை தரவும்` என்று ஹசன் தொடர்ந்து குரல் எழுப்புகிறார். பின்னர் துரதிர்ஷ்டவசமாக, அவர் கான்கிரீட் மீது சிவப்பு தெளிப்புடன் கையெழுத்திட்டார், மற்ற மீட்புக் குழுக்கள் கட்டடத்தைத் தேடாதபடி குறியீடுகளை எழுதுகிறார்.
"மனிதர்களை மீட்பது என்பது மிக அழகான உணர்வு. அதேநேரத்தில் இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்ற நிலை ஏற்படவும் நாங்கள் விரும்புகிறோம்," என்று அவர் கூறினார். அவரது முகத்தில் சோகத்தின் ரேகைகள் இருப்பதை நான் பார்த்தேன்.
மெர்வ் மற்றும் ஐரேமுடன் இணைந்து மதிய உணவு சாப்பிடுவீர்களா என்று ஹசனிடம் நான் கேட்டபோது புன்னகைத்த அவர், "ஒருநாள் சாப்பிடுவேன் என்று நான் நம்புகிறேன். ஆனால், தற்போது அவர்கள் உயிருடன், பாதுகாப்பான கரங்களில் உள்ளார்கள் என்பதுதான் முக்கியம்," என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













