ஜார்கண்ட் ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமனம், அயோத்தி வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் நசீருக்கும் ஆளுநர் பதவி

பட மூலாதாரம், Supreme Court Bar Association
மகாராஷ்டிரா உட்பட நாட்டின் 12 மாநிலங்கள் மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் ஆகியவற்றின் ஆளுநர்களை மாற்றி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் ராதா கிருஷ்ணன் ஆகியோரின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூவின் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அயோத்தி வழக்கு, பணமதிப்பிழப்பு வழக்கு ஆகியவற்றை விசாரித்த அமர்வுகளில் ஒருவராக இருந்த நீதிபதி அப்துல் நசீர் ஆந்திர பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பகத்சிங் கோஷ்யாரிக்கு பதிலாக ஜார்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பாய்ஸ் மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்படுவார் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், லடாக்கின் துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் மாத்தூருக்கு பதிலாக அருணாச்சல பிரதேச ஆளுநராக இருந்த பிரிகேடியர் (டாக்டர்) பி.டி.மிஸ்ரா, லடாக்கின் புதிய துணை ஆளுநராக இருப்பார். பாஜகவின் முன்னாள் எம்பியும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான சிபி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநில ஆளுநராக இருந்த ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, ஓய்வுபெற்ற நீதிபதி அப்துல் நசீர் ஆந்திர மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மொத்தமுள்ள 13 பேரில் இருவர் ராணுவத்தின் முன்னாள் அதிகாரிகள், ஒருவர் ஓய்வு பெற்ற நீதிபதி.
புதிய ஆளுநர்களின் பட்டியல்
லெப்டினட் ஜெனரல் கைவல்யா திரிவிக்ரம் பர்நாயக்(ஓய்வு) - அருணாச்சல பிரதேச ஆளுநராக நியமனம்
லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா- சிக்கிம் மாநில ஆளுநராக நியமனம்
சிபி ராதாகிருஷ்ணன் - ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்
ஷிவ் பிரதாப் சுக்லா - இமாச்சல பிரதேச ஆளுநராக நியமனம்
குலாப் சந்த் கட்டாரியா - அஸ்ஸாம் ஆளுநராக நியமனம்
நீதிபதி அப்துல் நசீர்(ஓய்வு) - ஆந்திர பிரதேச ஆளுநராக நியமனம்
ஆந்திர பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசன் ஹரிசந்தன், சத்தீஸ்கர் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சுஸ்ரி அனுசுயா உய்க்யே, மணிப்பூர் ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன், நாகாலாந்து மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிகார் மாநில ஆளுநர் பாகு சௌகான் மேகாலயாவின் ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இமாச்சல் பிரதேச மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பிகார் மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
ஜார்கண்ட் ஆளுநர் ரமேஷ் பாய்ஸ், மகாராஷ்டிர மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அருணாச்சல பிரதேச மாநில ஆளுநர் பி.டி.மிஸ்ரா, லடாக் துணைநிலை ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அயோத்தி, பணமதிப்பிழப்பு வழக்குகளை விசாரித்தவர்
ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி அப்துல் நசீர் (ஓய்வு), அயோத்தி ராம ஜென்மபூமி வழக்கை விசாரித்த 5 நீதிபதிகளில் ஒருவர். இதேபோல் பணமதிப்பிழப்பிற்கு எதிரான வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வுக்குத் தலைமை தாங்கியவர்.
முத்தலாக் வழக்கை விசாரித்த அமர்விலும் இடம்பெற்றவர். கர்நாடகவை பூர்வீகமாகக் கொண்ட நீதிபதி அப்துல் நசீர், 1983ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார். பின்னர் 2003ஆம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக அவர் நியமிக்கப்பட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது, பல்வேறு முக்கிய வழக்குகளை அவர் விசாரித்துள்ளார். நவம்பர் 2019இல், அயோத்தி வழக்கில் ஒருமனதாகத் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஒரே இஸ்லாமிய நீதிபதியாக இருந்தார்.
அதேபோல், முத்தலாக் சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கிய அமர்விலும் அவர் இடம்பெற்றிருந்தார். மத்திய அரசின் பணமதிப்பிழப்பு முடிவை நியாயப்படுத்தும் டிவிஷன் பெஞ்சில் நீதிபதி நசீரும் இருந்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் உள்ள தகவலின்படி, அவர் 1958ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி கர்நாடகாவில் பிறந்தார். 1983இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியைத் தொடங்கினார். 2003இல் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பதவியேற்றார். பிப்ரவரி 2017இல் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஆக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அவர் ஓய்வு பெற்றார்.

பட மூலாதாரம், Twitter
தமிழ்நாட்டில் இருந்து மூன்றாவது ஆளுநர்
ஏற்கெனவே தமிழகத்தில் இருந்து பாஜகவின் மாநில தலைவர்களாக இருந்த தமிழிசை சௌந்தரராஜன், இல.கணேசன் ஆகியோர் ஆளுநர்களாக உள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக சிபி ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநர் பதவி கிடைத்துள்ளது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சிபி ராதாகிருஷ்ணன், "தமிழகத்திற்கு மீண்டும் ஒரு ஆளுநரை குடியரசு தலைவரும் பிரதமரும் கொடுத்துள்ளனர். இது தமிழினத்தின் மீதும், பாரம்பரியம் மீதும், கலாச்சாரம் மற்றும் தமிழ் மக்கள் மீதும் எத்தகைய அன்பும் பாசமும் வைத்துள்ளார்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது.
பழங்குடியின, தாழ்த்தப்பட்ட, ஏழை எளிய மக்கள் அதிகம் வசிக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மக்களின் உயர்வுக்கும் முன்னேற்றத்திறக்கும் என்னென்ன வழியில் செய்லபட முடியுமோ அதை மனதில் வைத்துப் பணியாற்றுவேன்.
இது எனக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கவில்லை. தமிழினத்திற்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்கிறேன், மோதிக்கும் குடியரசு தலைவருக்கும் தமிழ் மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலின் அடுத்த பரிணாம வளர்ச்சியாக இதைப் பார்க்கிறேன. மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவேன்," என்று தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சிபி ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அரசமைப்பு சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













